Tuesday, May 21st

Last update10:22:12 PM

'பிளேட் ரன்னர்' ஒஸ்கார் பிஸ்டோரியஸ் இறுதி முயற்சியில் தங்கம் வென்றார்!

உலகின் பிலேட் ரன்னர் என அழைக்கப்படும் தெ.ஆபிரிக்காவின் ஒஸ்கார் பிஸ்டோரியஸ் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் தனது இறுதி போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 100 மீ ஓட்டப்போட்டியில் நான்காவது இடத்தை பெற்றார். 19 வயது இளம் பிரிட்டிஷ் வீரர் ஜோனிபீகோக், 10.90 செக்கன்களில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார். அதற்கு முன்னர் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்திலும் தோல்வியை தழுவினார். அதில் வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. 

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில், ஓட்டப்போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் கவர்ந்தவர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 200 மீற்றர் தகுதிச்சுற்றிலேயே உலக சாதனையை முறியடித்த போதும் இறுதி சுற்றில் பிரேசில் வீரரிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தனது இரண்டாவது தோல்வி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் 'நான் தோற்றது கவலையாக இல்லை. மாறாக என்னை மிஞ்சிய வீரர்களின் அசாத்திய மாற்றுத்திறனாளிகளின் திறன் கண்டு மகிழ்வடைகிறேன்.

நான் ஓடி முடிக்கும் நிலையில், மூன்றாவதாக வருவதாக உணர்ந்தேன். மகிழ்வாக இருந்தது. ஆனால் முடிவில் என்னை சக வீரர் ஆர்னுவும் தோற்கடித்து நான் நான்காவது வந்துவிட்டதை அறிந்த போது மிக மகிழ்ச்சி அடைந்தேன். இரவு அவரோடு வெற்றியை கொண்டாட போகிறேன். என்னை பொருத்தவரை நான் மிகச்சிறந்த வீரர்கள் மூவரால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்' என்றார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 400 மீற்றர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமை 4x100 மீற்றர் ரிலே ஓட்டப்பந்தய போட்டியில் தெ.ஆபிரிக்க அணிக்கு தங்கத்தை வென்று கொடுத்திருந்தார்.

நேற்றைய போட்டியில் அவர் அமெரிக்க வீரர் பிளேக் லீப்பரை 3 செக்கன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்கத்தை சுவீகரித்துக்கொண்டார். 'எனது இறுதி போட்டியில் தங்கம் வென்றது மிகவும் உற்சாகமாக கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை உற்சாகப்படுத்தும் மக்களுக்கு ஒரு நல்ல முடிவை வழங்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தேன். இப்போது அது நிறைவேறிவிட்டது' என அவர் கூறியுள்ளார்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus