ஐசிசியின் மிகச்சிறந்த ODI கிரிக்கெட் வீரராக கோலி : டெஸ்ட் வீரராக சங்ககார
- Saturday, 15 September 2012 16:39

கடந்த வருடத்தில் ஒரு நாள் போட்டிகளுக்கான மிகச்சிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரராக விராத் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12 மாதங்களில் அவரது மிகச்சிறந்த துடுப்பாட்டத்திற்காக ஐசிசி இந்த கௌரவத்தை வழங்கியுள்ளது. நேற்று கொழும்பில் நடைபெற்ற ஐசிசி விருது வழங்கும் விழாவில் கோலிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
கடந்த ஒரு வருடத்தில் 31 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோலி மொத்தம் 1773 ரன்களை குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 6 அரைச்சதங்கள் அடங்கும். மேலும் அவரது சராசரி ஓட்ட எண்ணிக்கை 66.65 ஆக உள்ளது. ஆசிய கோப்பையில் அவர் 183 ஓட்டங்களை எடுத்தது அதிகூடிய ஓட்டமாக பதியப்பட்டுள்ளது.

முதற் தடவையாக ஐசிசியின் இவ்விருதுக்கு தெரிவாகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ஐசிசி என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளது இன்னமும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் கோலி.
கோலி இதுவரை விளையாடிய 90 ஒரு நாள் போட்டிகளில் 3886 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 51.81 ஆக உள்ளது. 10 டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தம் 703 ஓட்டங்களை குவித்துள்ளார். இது 41.35 எனும் சராசரியை கொண்டது.
இதில் 2 சதங்கள், ஐந்து அரைச்சதங்களும் அடங்கும். 116 என்பது அவரது அதிகூடிய டெஸ்ட் போட்டமாகும். இதேவேளை இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஐசிசியின் மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.
இவ்வருடத்தில் மிக பெறுமதி வாய்ந்த கிரிக்கெட் வீரர், இவ்வருடத்தில் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் இவ்வருடத்திற்கான மக்கள் தேர்வு கிரிக்கெட் வீரர் எனும் மூன்று விருதுகள் அவருக்கு கிடைத்தன.

மே.இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா சங்ககாரவுக்கு இவ்விருதை வழங்கினார். கடந்த 12 மாதங்களில், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்ககார 1,444 ரன்களை பெற்றுள்ளார். சராசரியாக 60.16 ஓட்டங்களை பெற்றுள்ளார். 5 சதங்கள், 5 அரைச்சதங்கள் பெற்றுள்ளார். குறிப்பாக அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 211 எனும் ஓட்ட எண்ணிக்கை இதில் சிறப்பானது.


