சூப்பர் 8 இல் நுழைந்தது மே.இந்தியா
- Monday, 24 September 2012 19:21

அயர்லாது - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய T20 போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கு இந்திய அணி எந்த போட்டியையும் வெல்லாது சூப்பர் 8 சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.
முன்னதாக, 2010 T20 உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து இதே போன்று எந்த போட்டியையும் வெல்லாது அடுத்த சுற்றுக்கு சென்றிருந்தது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை எடுத்தது. ஓ பிரையன் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை எடுத்தார். பந்து வீச்சில் கிரிஸ் கேய்ல் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
எனினும் அத்துடன் ஆட்டத்தை தொடரமுடியாது மழை குறுக்கிட்டது. இதையடுத்து வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவடைந்தது. இதனால் மே.இந்திய அணி எப்போட்டியிலும் வெற்றி பெறாது சூப்பர் 8க்கு நுழைந்தது. இதுவரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மே.இந்தியா, தெ.ஆபிரிக்கா, சிறிலங்கா, நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8க்குள் நுழைந்துள்ளன.
நாளை பங்களாதேஷ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதியாக சூப்பர் 8க்குள் நுழையும் வாய்ப்பை பெறும்.
இம்முறை இலங்கையில் நடைபெற்று வரும் உலக கோப்பை T20 பல போட்டிகள் மழையினால் இடைநிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
