Friday, Jul 29th

Last update12:22:35 PM

ஷங்கரின் ‘நண்பனை’ ஆட்டிவைக்கும் இணையம்! All is well!!

ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் 30 வீதத்துக்கும் குறைவானவர்களே இணையத்துடன் இயங்குகின்றனர்.

இவர்களைத் தாண்டிய நிஜ உலகமொன்று எப்போதுமே இருக்கின்றது. அதனை இணையத்தில் இயங்குவர்களில் அதிகளவானோர் உணர்வதில்லை.  என தமிழ் சினிமாவில் இணையத் தாக்கம் பற்றியும் நண்பன் திரைப்படத்தை பற்றியும் தினக்குரல் பத்திரிகைக்கான ‘வலையோடு விளையாடுவோம்’ தொடருக்காக எழுதியதன் மட்டுறுத்திய வடிவம் இது என மருதமூரான் http://maruthamuraan.blogspot.com என்ற வலைப்பதிவில் வெளியிட்ட ஆக்கத்தினை அனுமதித்த கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் மீண்டும் பிரசுரிக்கின்றோம்.

4தமிழ்மீடியா குழுமம்

‘ஒல்லி பெல்லி’ இலியானாவில் இருந்து சத்யராஜ், ஜீவா, சிறீகாந்த், அக்கா அனுஜா வரை பலரிடம் படம் நெடுகிலும் அடிவாங்கிக் கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார் விஜய். அதிக படங்களில் நூறு, இருநூறு ரவுடிகளை(?) அடித்து தன்னுடைய ‘மாஸ்’ அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு, அந்தப் படங்களில் கிடைக்காத மாஸ் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது நண்பன். எரிச்சல் படுத்தாத இந்த புதிய மாஸ் அந்தஸ்து எல்லோருக்கும் பிடித்துப் போகும்….!

ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘நண்பன்’ படத்தின் முதற்காட்சி பார்த்து விட்டு வந்து என்னுடைய இணையப்பக்கத்தில் எழுதியது. ஒரு திரைப்படத்தின் வெற்றியிலும்- தோல்வியிலும் அண்மைக்காலத்தில் அதிக தாக்கங்களை ‘இணையமும்- இணைய எழுத்துக்களும்’ செலுத்துகின்றன. அது சின்ன நடிகர்களின் படத்திலிருந்து ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் படங்கள் வரை.

‘த்ரீ இடியட்ஸ்’ ஹிந்தியில் அமீர்கான், நடித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம். அதனை ஷங்கர் தமிழில் விஜய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை வைத்து நண்பனாக மீள இயக்கியிருக்கிறார். நண்பன் உருவாக்கத்திலிருந்து அதனை ‘இணையமும்- இணைய எழுத்துலகமும்’ எப்படி எதிர்கொண்டது என்பதை பார்த்தாலே சினிமாவில் இணையம் செலுத்தும் தாக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

2009இன் கிறிஸ்மஸ் தினத்தில் உலகெங்கும் வெளியாகியது ‘த்ரி இடியட்ஸ்’. அமீர்கான், மாதவன், சர்மன் ஜோஷி, கரீனா கபூர் என்கிற நட்சத்திரங்கள் நடித்த படம். இலங்கையிலும் வெளியாகி பலநாட்கள் ஓடியது. படம் வெளியாகிய சில தினங்களுக்குள்ளேயே தொற்றிக்கொண்டு விட்டது ‘ஆல் இஸ் வெல்’ (Aal izz well) என்கிற மந்திரம். ‘எல்லாம் நன்மைக்கே’ என்கிற ‘All is well’ ஆங்கில வடிவத்தின் ஹிந்தி பிராந்திய உச்சரிப்பு வடிவம். இன்று வரை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய ‘கற்றல்- கற்பித்தல்’ முறைகளில் இருக்கின்ற குறைபாடுகளையும், தனிமனித விருப்பத்தின் மீது சமூகம் செலுத்துகின்ற தாக்கம் தொடர்பிலும் ஆணித்தரமான கருத்துக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துச் சொன்ன படம். படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது நினைத்துக் கொண்டேன். த்ரி இடியட்ஸை யாராவது திறமையான இயக்குனர் இயல்பான நடிகர்களை வைத்து தமிழில் எடுக்க வேண்டும் என்று. அதன் மூலம், குறித்த செய்தியை தமிழில் பெரும்பான்மையானவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று. அது, மெல்ல மெல்ல சாத்தியமாகி- வடிவம் பெற்று- நண்பனாக அறுவடை கிடைத்திருக்கிறது. குத்துப்பாட்டு, சண்டை என்று தொடர்ந்தும் எரிச்சலூட்டிக்கொண்டிருக்கிற தமிழ்ச் சினிமாவில் இயல்பான சினிமா- ரசிக்கும் சினிமா.

‘த்ரி இடியட்ஸ்’ ரீமேக் செய்யப்பட இருக்கின்றது என்றதும், தமிழ் இணையச்சூழலில் இயங்குபவர்களில் குறிப்பிட்டளவானோர் அதனை எதிர்த்தனர். அமீர்கான் அசத்திய வேடத்தில் நடிக்க தமிழில் ஆள் இல்லை. அதுபோக, கதையின் கருவை சிதைத்துவிடுவார்கள் என்றெல்லாம். அதுவும், அமீர்கான் நடித்த பாத்திரத்தில் விஜய் நடிக்கிறார் என்றதும் சமூக வலைத்தளங்கள்- பதிவுகளில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது. எதிர்மறையான கருத்துக்களை அதிகம் தமிழ் இணையச்சூழல் விதைத்தது.

ஆனால், படத்தின் உருவாக்கம் நிறைந்து 'பாடல்கள்- ரெய்லர் காட்சிகள்' வெளியாகிய சமயத்திலிருந்து தமிழ் இணையச்சூழலும் விமர்சனங்கள்- வியாக்கியானங்களை தூக்கி வைத்துவிட்டு நண்பனை வரவேற்க தயாராகியது. படமும் சரியான வடிவத்தில் வெளிவந்து ரசிக்க வைத்த நிலையில் இணையச் சூழலாம் அதிகம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலத்தில் இப்படி கொண்டாடப்பட்ட தமிழ்ப்படத்தைக் காண முடியவில்லை. குறித்த படத்தின் உருவாக்கத்தின் போது எதிர்மனநிலையில் இருந்த இணைய இயங்குனர்கள், இப்போது படத்தின் வெற்றியிலும் தாக்கம் செலுத்துகிறார்கள்.

ரஜினிக்கு அடுத்த நிலையில் அதிக ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், தமிழ் இணைய சூழலில் அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகுபவர் விஜய். வேட்டைக்காரன், வில்லு, சுறா போன்ற படங்களின் வருகை அதனை இன்னும் அதிகமாக்கியது. அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ‘நண்பன்’ விஜய்யை கொண்டாடுகின்றனர்.

படமொன்று வெளியாகி அடுத்த சில மணிநேரத்துக்குள்ளேயே ‘விமர்சனங்கள்- படம் பற்றிய அனுபவ கருத்துக்களை’ வாசிக்க முடிகிறது. அதுவும், கட்டற்ற இணையத்தில் வரைமுறையின்றி விமர்சிக்கவும்- கொண்டாடவும் வாய்ப்பிருக்கிற போது அது அதிகளவில் நடந்து விடுகிறது. இப்போதெல்லாம், இணைய விமர்சனங்களை படித்துவிட்டு படத்துக்கு போகலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பவர்களின் தொகை அதிகம். பத்திரிகை- வார சஞ்சிகைகளின் விமர்சனங்களில் கூட குறைந்த பட்ச தொழில் தர்மம் இருக்கும். ஆனால், இணைய விமர்சனங்களில் அவற்றை அதிகம் காண முடியாது. பிடித்திருந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இல்லையென்றால் தூக்குப் போட்டு மிதியோ மிதியென்று மிதித்து தள்ளிவிடுவார்கள்.

இதனால், தமிழக சினிமாவில் வலைப்பதிவர்கள்- சமூக தளங்களில் இயங்குபவர்களுக்கு 'சிறப்பு பிரிவியூ' காட்சிகளை இயக்குனர்கள் காட்டும் அளவுக்கு நிலைமை இருக்கின்றது. வழமையாக சினிமா செய்தியாளர்களை அழைத்தே படத்தினைப் போட்டுக்காட்டுவார்கள். இப்போது, இணைய எழுத்தாளர்களுக்கும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. இயக்குனர்களின் பேஸ்புக்- ருவிற்றர் பக்கங்களில் அவர்களின் குறைகளையும்- நிறைகளையும் உடனடியாகச் சுட்டிக்காட்டி இணைய எழுத்தாளர்கள் விமர்சிக்கின்றனர். படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக வலம் வர ஆரம்பித்து விட்டனர்.

இதுபோலவே, இணையம் சினிமாவை மற்றொரு வகையில் நோகடிக்கிறது. படம் வெளியாகிய அன்றே திருட்டு வீசிடியை தரவேற்றிவிடுகிறார்கள் இணையத்தில். குறிப்பிட்டளவானோர் இணையத்தில் திருட்டு இணைப்பில் படத்தினைப் பார்த்தே விமர்சிக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆவர்களுக்கு எந்தவித தொழில் தர்மமும்- விமர்சன தர்மமும் கிடையாது. இதுபோலவே, வசைபாடுகின்ற- ஜால்ரா போடுகின்ற கூட்டத்தின் அதிகளவான பொருக்கம்.

இவற்றையெல்லாம் விட இணையச் சூழலில் இயங்கும் பெரும்பான்மையினர் நினைக்கிறார்கள், தாங்களே சமூகத்தின் பெரும்பான்மையினர் என்று. உண்மை அப்படியிருப்பதில்லை. ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் 30 வீதத்துக்கும் குறைவானவர்களே இணையத்துடன் இயங்குகின்றனர். இவர்களைத் தாண்டிய நிஜ உலகமொன்று எப்போதுமே இருக்கின்றது. அதனை இணையத்தில் இயங்குவர்களில் அதிகளவானோர் உணர்வதில்லை.

தங்களினால் வெளிநாட்டு- வேற்றுமொழி படங்களை இலகுவாக இணையத்தில் பார்க்க கிடைக்கின்ற வாய்ப்பினை, சமூகத்தின் பெரும்பான்மையினரும் பெற்றிருக்கிறார்கள் என்று நினைத்து விடுகிறார்கள். விளைவு, நல்ல படைப்புக்களின் ரீமேக்கினை அவர்கள் அதிகளவாக விமர்சிக்க தயாராகி விடுகின்றனர். அதுபோல, வெளிநாட்டுப்படங்களை அப்பட்டமாக திருட்டுத்தனமாக தழுவிய நந்தலாலா, தெய்வத்திருமகள் படங்களை வரவேற்கவும் செய்தார்கள்.

‘த்ரீ இடியட்ஸ’; ரீமேக்கை எதிர்த்தமைக்கு பெரும்பான்மை இணைய எழுத்தாளர்கள் சொன்ன காரணம், ஒரிஜினல் படத்தின் ஜீவனைக் குலைத்துவிடுவார்கள் என்று. அது நியாயமான காரணம் தான். ஆனால், அவர்கள் அதிகம் புரிந்து கொள்ளாத விடயம், ஒரிஜினல் படத்தை 70 வீதத்துக்கும் அதிகமான தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதை. எதையுமே தானிருக்கும் பக்கத்திலிருந்து பார்ப்பதே இணையத்தில் இயங்கும் பெரும்பான்மையினரின் வேலையாகிவிட்டது.

இவற்றையெல்லாம் தாண்டி சினிமாவின் உருவாக்கத்திலிருந்து விளம்பரம்- வர்த்தகம்- வெளியீடு- வெற்றி தோல்வி வரை இப்போது இணையம் பெரும்பங்கை வகிக்கின்றது. எதிர்காலத்திலும் இணையம் இல்லாத சினிமாவை நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கான சூழ்நிலையும் இல்லை. சரி பிழைகளைத் தாண்டி சினிமாவுக்குள் 'இணையம்' செலுத்தும் தாக்கம் மிகப்பெரியதே! All is well மீண்டும் சந்திக்கலாம்!!

(தினக்குரலுக்கான ‘வலையோடு விளையாடுவோம்’ தொடருக்காக எழுதியதன் மட்டுறுத்திய வடிவம்.)

பதிவின் மூலம் - நன்றி மருதமூரான்

இவற்றையும் தவறவிடாதீர்கள்

 

நன்றி தெரிவித்த விக்கிபீடியாவும் அதிகமானோரை கவர்ந்த இணைய போராட்டமும் 

நண்பன் ஒரு பார்வை.

மனதை செம்மைப்படுத்தும் ஓம் என்னும் மந்திரம் : யோகாசன பயிற்சி 13

வித்தியாசமான முறைகளில் சேவை நிறுத்தம் செய்யும் இணையத்தளங்கள்.

comments powered by Disqus