சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு : பங்குசந்தை முதலீட்டார்களுக்கு லாபம் தரும்
- Saturday, 15 September 2012 07:51
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு பங்கு சந்தை முதலீட்டர்களுக்கு லாபம் பெருக்கும் என்று இந்திய பங்கு சந்தை நிபுணர் சேகர் கூறுகிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுவது,
"குறு தொழில் செய்பவர்களை அரசு ஊக்குவித்து வரும் வேளையில், சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்பது குறு தொழில் செய்பவர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்படுத்துவதாக இருக்கும். சிறு பெரு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் கூட பாதிக்கப் படும் நிலைதான் உண்டாகும். மத்திய அரசு இதில் ஒரு நல்ல விஷயத்தை அமுல் படுத்தி உள்ளமைக்கு பாராட்டலாம்.
அதாவது சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்பதை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது, கொஞ்சம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயம். நமது குறு தொழில் செய்பவர்கள், பெரு வணிகர்கள், விவசாயிகள் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நமது தமிழக முதல்வர் அனுமதிக்காமல் விடலாம்.
வேலை வாய்ப்பு பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது. வேலைவாய்ப்பு பறி போகும் படியும் இருக்கலாம், அல்லது புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் படியும் இருக்கலாம். சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு எனும் விஷயத்தில் வேலை வாய்ப்பு பற்றி தீர்க்கமாக இன்னும் கணிக்க முடியவில்லை.
பங்கு சந்தை முதலீட்டார்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்நிய நாட்டு முதலீடுகள் இங்கு குவியும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இபோதைக்கு பங்கு சந்தைக்குத்தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது சாதகமான சூழல்" என்கிறார்.
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு : வணிகர்கள் கருத்து என்ன?
சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு பற்றி வணிகர்கள் சங்கத்தை சேர்ந்த வி.பி.மணி கூறுகையில், "அந்நியநாட்டு சக்தி இங்கு வணிகம் செய்ய வந்துதான் நமது நாட்டில் உள்ள வளங்களை எல்லாம் கொள்ளை அடித்து சென்றதாக வரலாற்றை நமக்கு சொல்லிக் கொடுத்து விட்டு, இப்போது அதே அந்நிய சக்தியை மத்திய அரசு அனுமதித்தால் எப்படி? வணிகர்கள் மட்டுமல்ல, இதனால் விவசாயிகளும் பாதிக்கப் படுவார்கள். அவர்கள் கேட்கும் விலை பொருட்களின் தரம் நம்மிடம் இல்லை என்று நம் விளைச்சலையே புறக்கணிப்பார்கள்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு நல்ல உரம், நீர்வளம் போன்ற ஊட்டச் சத்துக்களை வழங்கிவிட்டு பிறகு சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்து இருக்கலாம். அதேபோல, வணிகர்களுக்கு நல்ல சாலை வசதிகளை செய்து கொடுத்து விட்டு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து இருக்கலாம்.
வணிகர்களை நம்பி எத்தனை குடும்பங்கள் கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் தரமுடியும்? வணிகத்தை நம்பியே பிழைக்கும் எங்களுக்கு பிழைப்புக்கு வழி இல்லாமல் செய்யும் திட்டம்தான் இது. மொத்தத்தில் அந்நிய சக்திகளின் மாய வலையில் பிரதமர் மன்மோகன் சிங் விழுந்து விட்டார். என்றாலும் இதை நாங்கள் இப்படியே விடுவதாயில்லை,
மாநில முதல்வர் அனுமதித்தால் தான் நடக்கும் என்று விட்டு விட முடியாது. ஒரு மாநிலத்தில் புகுந்து விட்டால் மற்ற மாநிலங்களிலும் அவர்கள் சக்தியை பரப்பத்தான் பார்ப்பார்கள். மேலும் அந்த மாநிலகளைப் பார்த்து அடுத்த மாநிலமும் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு தாமாக முன் வரும் அளவிற்கு மாய வேலைகள் நடக்கும்.
எனவே அகில இந்திய அளவில் போராட தலைவர் விக்கிரம ராஜா கூடிய விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியிடுவார் " என்கிறார்.
