பாரம்பரியக் கலைகள் மூலம் காந்தியக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பிவரும் கலைஞர்
- Tuesday, 02 October 2012 18:24
வி.ஆர்.தேவிகா : இவர் காந்தியக் கொள்கைகள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக குடும்ப வாழ்வின் மேல் ஈடுபாடுகளைக் குறைத்துக் கொண்டவர்.
எம்.ஏ பட்டதாரியான இவர் இப்போது கலைகள் ஆராய்சிகள் பற்றிய மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.
இவருடன் பேசியபோது, "காந்தியக் கொள்கைகள் நமக்கு கற்றுத்தரும் பாடங்களும், வாழ்க்கை நெறி முறைகளும் ஏராளம். இதை பல முயற்சிகளின் மூலம் இன்றைய தலைமுறை, எதிர்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்காவிட்டால் காந்தி மகானை பிற்கால சந்ததியினர் மறந்து போகும் அவலநிலை ஏற்பட்டு விடும்.
மேலும் காந்திஜியின் எளிமைக்கு வித்திட்ட கதர் கைத்தறி உடைகளின் மகிமையும், முக்கியமாக கைராட்டையையும் இனி வரும் சந்ததியினர் மறந்தே போய்விடுவார்கள். எனவே என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். அதன் விளைவாக உருவானதுதான், நமது நாட்டின் பாரம்பரியக் கலைகள் மூலம் காந்திஜியின் கொள்கைகளை பரப்புவது என்கிற என் முடிவு.

இதில் இரண்டு நன்மைகள் இருக்கிறது. ஒன்று நமது கலைகளையும் மக்களிடமும், குழந்தைகளிடமும் கொண்டு சேர்க்கலாம். அதோடு முக்கியமாக காந்திஜியின் கொள்கைகளையும் பரப்பலாம்.
இது எனக்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தது. நான் போகாத வெளி நாடுகளே இல்லை எனலாம். எப்போதுமே காந்திஜிக்கு வெளிநாடுகளில் பெரும் மதிப்பு உண்டு. தவிர நமது கலைகளுக்கும் பெரும் வரவேற்பு உண்டு. இதன் காரணமாகவே வெளிநாடுகளில் நல்ல மதிப்பு கிடைத்தது. இன்னமும் அடிக்கடி பல நாடுகளுக்கு சென்று நமது கலைகளையும், அதன் மூலம் காந்திஜியின் கொள்கைகளையும் பரப்பிக் கொண்டு வருகிறேன், மொத்தம் பத்து கலைகளின் மூலம் காந்திஜியின் கொள்கைகளை பரப்பி வருகிறேன். தேவராட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, பரத நாட்டியம், தெருக்கூத்து உள்ளிட்ட பத்து கலைகள் அவை.
எனக்கு கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் விதமான பாலமாக நமது கலைகள் இருக்கவேண்டும் என்றும் நான் பாடுபடுகிறேன். கை ராட்டைப் பற்றி நிறைய விஷயங்கள் எடுத்து சொல்லி வருகிறேன். மனதையும், செயலையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அற்புத வேலை செய்யும் இந்த கைராட்டினத்தை காந்திஜியின் நினைவு வரும் போது எல்லாம் நான் உட்கார்ந்து நூற்க ஆரம்பித்து விடுவேன். இதை பல வெளிநாட்டு குழந்தைகள் கூட என்னிடம் நூற்க கற்றுக் கொள்கிறார்கள் என்பது எனக்குக் கிடைத்த வெற்றி" என்று கூறுகிறார் தேவிகா.
- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி
