திரைச்செய்திகள்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

அந்த வருத்தத்தை தானே முன்வந்து தெரிவித்திருக்கிறார் ‘கலைச்செல்வி’ ராதிகா. இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்து வளர்ந்து அங்கேயே நகரில் பள்ளி படிப்பை முடித்தவர். பின்னர் லண்டன் சென்று பட்டப் படிப்பையும் முடித்தவர். பின்னர் தான் சென்னையில் இருந்த ராதிகாவின் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண்ணை தனது படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் பாரதிராஜா பார்க்க சென்றிருந்தார், அப்போது அவர்கள காட்டிய குரூப் போட்டோவில் ராதிகாவை பார்த்துவிட்டு, இந்தப் பெண் யார் என்று விசாரிக்க, பக்கத்து வீட்டு பெண் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஓடி ஒளிந்த ராதிகா

உடனே பாரதிராஜா பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, அங்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாராம் ராதிகா. அவரிடம் பாரதிராஜா விசாரிக்க முயன்ற போது, அவர் பயந்து போய் அங்கிருந்து ஓடி இருக்கிறார். ஏற்கனவே அந்த பகுதியில் கொலை நடந்திருந்ததால், புதியவர்களை கண்டால் ராதிகாவுக்கு பயம். வீட்டுக்குள்ளிலிருந்து ராதிகாவின் அம்மா, கீதா வெளியில் வந்து பார்த்து, பாரதிராஜாவிடம் விசாரிக்க, அவர்தான் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் பதினாறு வயனிலே படத்தின் இயக்குனர் என்று தெரிந்திருக்கிறது. பிறகு உள்ளே அழைத்து சென்று பேசி இருக்கிறார்.தனது கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வெகுளியான ஒரு பெண் தேவை என்றும், அதற்காக ஒரு புதுமுகம் தேடுவதையும், அதற்கு ராதிகா பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா. எம்.ஆர்.ராதா மகள்தான் ராதிகா என்று பாரதிராஜாவுக்கு பிறகுதான் தெரிந்திருக்கிறது. இந்த விஷயத்தை எம்.ஆர்.ராதாவிடம் தெரிவித்த போது சிரித்துக் கொண்டாராம். அவரை பொறுத்தவரை நடனத்திலும் பாடுவதிலும் ஆர்வமாக இருக்கும் ராதிகாவின் தங்கை நிரோஷாதான் சினிமாவுக்கு வருவார் என்று நினைத்தாராம். இப்போது படிப்பில் மட்டுமே ஆர்வமாக இருக்கும் ராதிகாவை நடிக்க கேட்டதும் நம்பவில்லையாம். பிறகு தேடி வந்த வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம். ஒரு படம் நடி என்று தெரிவித்தாராம் எம்.ஆர்.ராதா.

கதாநாயகியா, பூசனிக்காயா?

அப்பா பச்சைக்கொடி காட்டிவிட்டாலும் தனக்கு நடிக்க வரவே வராது என்று நம்பியிருக்கிறார் ராதிகா. அதனால் அப்பாவிடமும் பாரதிராஜாவிடமும் “ எனக்கு நடிக்க தெரியாதே” என்று சொல்ல, “ அதைப்பற்றி நீ கவலைப்படாதே, நான் சொல்லித் தருகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்து நடிக்க வைத்திருக்கிறார் பாரதிராஜா. தி கிரேட் லண்டனில் படித்து வளர்ந்த ராதிகாவை பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. தன் முதல் படம் அனுபவம் குறித்து ராதிகாவிடம் கேட்டப் போது, “கிழக்கே போகும் ரயில்’ படத்தோட ஷூட்டிங் மேட்டுப்பாளையத்துல நடந்துச்சு. ஸ்ரீதேவிதான் ஹீரோயின்னு நினைச்சு பாரதிராஜாசார் யூனிட்டே ஆசையோட காத்துக்கிட்டிருந்துச்சாம். ஆனா பாரதிராஜா சார் சென்னையில் என்னைப் பார்த்து முடிவுபண்ணி அவருடனே மேட்டுப்பாளையத்துக்கு அழைச்சுட்டுப் போனார். சாரோட கார்ல இருந்து பேன்ட், சட்டை, கூலிங்கிளாஸ் சகிதமாக நான் இறங்கினதைப் பார்த்ததும் யூனிட்ல இருந்த எல்லார் முகமும் மாறிடுச்சு. அசிஸ்டெண்டா இருந்த பாக்யராஜ்

‘ஹீரோயினைக் கூட்டிட்டு வரச்சொன்னா, பூசணிக்காயைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க...’ என்று டைரக்டரிடம் சொல்ல, அது என் காதிலும் விழுந்துவிட எனக்கு செம கோபம்.கோபத்தை வெளியில் காட்டாம அடக்கிக்கிட்டேன். ஆனா சும்மா விட முடியுமா? பாக்யராஜ் எனக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் போதெல்லாம் அதைக் கவனிக்காத மாதிரி கெக்க பிக்கேனு சிரிச்சிட்டே இருப்பேன். பயங்கரமா கடுப்பாவார் பாக்யராஜ், ஒருகட்டத்துல ‘`சார், இந்தப் புள்ள ரொம்ப மோசம், டயலாக்கை சரியாவே பேசச் தெரியலை’’ என்று பாரதிராஜாவிடம் புகார் பண்ணிட்டார். பாரதிராஜா என்னைக் கூப்பிட்டு `எங்கே, அந்த டயலாக்கைச் சொல்லு’னு சொன்னார். நான் அடுத்த செகண்ட் கடகடனு வசனம் பேச, திகைத்துப்போனார் பாக்யராஜ். கோபத்தில் நான், டைரக்டரை வச்சுக்கிட்டே பாக்யராஜைக் கன்னாபின்னான்னு இங்கிலீஷ்ல திட்டித்தீர்த்துட்டேன். ஆனா, அதுக்கப்புறம் எனக்கே அவரைப் பார்க்க பாவமா இருந்துச்சு. வலியப்போய் அவரிடம் ஸாரி கேட்டேன்.`நீ இங்கிலீஷ்ல திட்னதால, என்ன சொல்லித் திட்டினேன்னே எனக்குத் தெரியலை. விடும்மா பரவாயில்லை’னார் பாக்யராஜ்.

பாக்யராஜின் சிபாரிசு!

தொடர்ந்த ராதிகா, தனக்காக சிபாரிசு செய்த பாக்யராஜின் குணப்பற்றிக் கூறுவதைப் பாருங்கள். “ ‘கிழக்கே போகும் ரயில்’ படம் முடிஞ்சு எனக்கு டப்பிங் குடுக்குற ஆளை செலக்ட் செய்துகிட்டி ருந்தார் டைரக்டர். அந்தச் சமயத்தில் `சார், ராதிகாவுக்கு டப்பிங் வேண்டாம். அவரோட மழலைக்குரலே படத்துக்குப் பெரிய ப்ளஸ்ஸா இருக்கும்’னு பாக்யராஜ் சொன்னபோது நெகிழ்ந்து போயிட்டேன். அதற்குப் பிறகு இருவரும் நண்பர்களாகிட்டோம்.” என்று நெகிழ்ந்து போகிறார்.1978-இல் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தந்தது. ஆரம்ப காலத்தில் நடிப்பில் பெரிய அளவில் நாட்டம் இல்லாதபோதும் தனது 16வது வயதில் இயக்குநர் இமயத்தினால் இவர் திரையுலகப்ரவேசம் அடைய, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 2 படங்கள் வெளிவர, இந்த 2020-ஆம் ஆண்டு 'வானம் கொட்டட்டும்' என்ற படம் வெளியானது மேலும் 5 படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.

வெள்ளித்திரை மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வரும் ராதிகா ஒரு சிறந்த தயாரிப்பாளராக இருக்கிறார். 1985-ஆம் வெளியான 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற படத்தை தயாரித்த நிலையில் அதற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்து திரையுலகில் தனது 42-ஆம் ஆண்டினை கொண்டாடும் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்து வருகிறார்கள்.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சீயான் விக்ரம் தனது மகன் துருவை ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ படத்துக்கு 90 கோடி ரூபாய் தர அமேசான் முன்வந்தும் 105 கோடிக்கு குறைந்து படத்தைத் தரமுடியாது என படத்தின் தயாரிப்பாளரும் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோ கூறிவிட்டார்.

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.