திரைப்படவிழாக்கள்

இம்முறை 69வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் Fuori Concorso பிரிவில் பார்க்க கிடைத்த ஆவணத் திரைப்படம், «ஜோன் சியேக்லரும், மன உறுதியின் நம்பிக்கையும்» (Jean Ziegler, the Optimism of Willpower). இத்திரைப்படம் சுவிற்சர்லந்தானின் பொதுவுடமைச் சித்தாந்த மனிதர் ஜோன் சியேக்லரின் அரசியல், உலக அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறது. 

1964ம் ஆண்டு, இளம் சியேக்லர், பொதுவுடமைப் புரட்சியாளரான சே குவாராவினை சந்தித்த போது, முதலாலித்துவ மூளைகளுக்கு எதிராக, சுவிற்சர்லாந்திலேயே தங்கியிருந்து போராடுமாறு கோரிக்கை விடுக்கிறார் சே குவாரா. 

இன்று வரை ஒரு பேராசிரியராக, எழுத்தாளராக,  சோசலிச அரசியலாளராக, சமூகவியலாளராக, புரட்சியாளராக, இன்றைய இளைஞர்களின் முன்னோடியாக, சே குவாராவுக்கு தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இன்று உலகெங்கும் அதிக பிரதிகளை விற்றுத் தீர்த்த பொதுவுடமைக் கொள்கைப் புத்தகங்கள் சில இவரால் எழுதப்பட்டவை. 

ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தின் ஆலோசகர் குழுவின் ஒரு முக்கிய உறுப்பினராக தனது 82 வயதில் இன்றும் தனது சேவையைத் தொடர்ந்து வரும் அவர் 2000-08 காலப்பகுதியில், ஐநாவின், உணவுக்கான உரிமை திட்டத்தின் சிறப்புத் தூதுவராகவும் பணியாற்றியவர். «பட்டினியால் இறக்கும் குழந்தை, கொலை செய்யப்பட்ட ஒரு குழந்தை» (A child who dies from hunger is a murdered child.) எனும் இவருடைய வாசகங்கள், உலகெங்கும் பெரும் கவனம் பெற்றவை.  

இவரிடம் பல்கலைக் கழக கல்வி பயின்று, இவருடைய புத்தக எழுத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இளம் இயக்குனர் Nicolas Wadimoff இனால் உருவாக்கப்பட்டதே  இவரை பற்றிய ஆவணத் திரைப்படமான «Jean Ziegler, the Optimism of Willpower».

ஜனநாயக பொதுவுடமைக்கொள்கைகளால் ஒரு நாட்டை மிகச்சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக கருதப்படும் புரட்சிகர நாடான கியூபாவில், இன்றைய மக்கள் வாழ்வாதாரம் எப்படியுள்ளது, அந்நாட்டின் பொதுவுடமைப் புரட்சி, சாதாரண பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிகோளியதா என நேரடியாகத் தெரிந்து கொள்வதற்காக நீண்ட நாட்களுக்குப் பின்னர் கியூபாவுக்கு தனது துணைவியாருடன் செல்லும் Jean Ziegler, அங்கு புரட்சியின் விளைவுகளில் பார்த்து வியந்தவை எவை, அதிர்ந்தவை எவை என்பதே திரைக்கதை. 

மிகப்பெரும் அரசியல் தலைவர்கள் பிரசன்னமாகவும் ஐ.நாவின் மிக முக்கிய கலந்துரையாடல் அரங்காக இருக்கட்டும் அல்லது முதலாலித்துவத்திற்கு எதிரான மிகப்பெரும் ஆர்ப்பாட்ட அரங்காக இருக்கட்டும் அல்லது  ஒரு ஊடக மேடையாக இருக்கட்டும், எங்கும்,  எதிலும், தனது சிந்தனை வாதத்தில் மிக உறுதியாக நிற்பதும், முதலாலித்துவ கொள்கைகளுடைய அமெரிக்க, ஏகாபாத்திய நாடுகளின் பொருளாதார கொள்கைகளை எந்தவித தயக்கமும் இன்றி கடுமையாக எதிர்ப்பதும், அவர் மீது எளிதில் ஈர்ப்பை உருவாக்கிவிடும். 

சே குவாராவுடன் தனது அனுபவங்கள், இன்றைய உலகில் வலது சாரிக் கொள்கைகளின் செல்வாக்கு, இடதுசாரிக் கொள்கைகளின் வீழ்ச்சி, எழுத்தாளனாக செல்வந்த சுவிற்சர்லாந்தின் தனக்கு இருக்கும் சிறப்புரிமைச் சலுகைகள், தனது இயலாமை, தனக்கு இருக்கும் குற்ற உணர்ச்சிகள் என இத்திரைபப்டத்தில் அவர் பகிர்ந்துகொள்ளும் அனைத்தும் அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் ஒருவரால் இலகுவில் மனம் விட்டு பகிர்ந்துகொள்ள முடியாதவை. 

«உங்களால் இந்த உலகின் அனைத்து பூக்களையும் அழித்துவிட முடியும். ஆனால் இளந்தளிர் காலத்தை தோற்றுவிப்பவராக மாற முடியாது» என முதலாலித்துவத்திற்கு எதிராக மேற்கோள் காட்டும் வாக்கியத்தை பெரும் கரகோசத்தின் மத்தியில் ஒரு ஆர்ப்பாட்ட மேடையில் பேசிவிட்டு அங்கிருந்து விடைபெறுவார் Ziegler.  இத்திரைப்படம் நிச்சயம் இன்றைய உலக அரசியலை புரிந்துகொள்ள நினைக்கும் இளைஞர்கள் பார்க்கவேண்டியது என்பதற்கு அத்திரைப்படத்தின் அக்காட்சி ஒன்றே போதுமானது.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.