திரைப்படவிழாக்கள்

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடர், நேற்று (01.08.2018) ஆரம்பமாகியது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறும், உலகின் முக்கியமான பிரம்மாண்ட சர்வதேச திரைப்பட விழாவாகும். நேற்று ஆரம்பமான உத்தியோகபூர்வ ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகளில், சுவிற்சர்லாந்தின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைவர் அலன் பெர்செட் ( Alain Berset) கலந்து சிறப்பித்திருந்தார்.

உலகப் பெருந்திரை எனும் சிறப்புக்குரிய பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான, சினிமா ஆர்வலர்கள் முன்னிலையில், இத் திரைப்படவிழாவின் தலைவர், மார்க்கோ சோலாரி ( Marco Solari) ஆரம்ப உரை நிகழ்த்துகையில், " இன்று சுவிற்சர்லாந்தின் தேசிய நாள். எங்கள் மத்திய அரசின் மதிப்புக்குரிய தலைவர் அலன் பெர்செட் அவர்கள் எம்மோடு இருக்கின்றார். சுதந்திரத்தின் பெருமையுடனும், தனித்துவத்துடனும் மகிழ்ந்திருக்கின்றோம்.அதே சுதந்திரமும், தனித்துவமும், லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் தொடரும் என்பதை மறுபடியும் உறுதி செய்கின்றோம்.

உலகெங்கிலும் 6000 க்கு அதிகமான திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் முதற் பத்து இடங்களுக்குள் , லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவும் அடங்கும். இந்தப் பெருமையும் சிறப்பும் , இத்திரைப்படவிழாவிற்காகச் செயற்படும் அனைத்துப் பணியாளர்களாலும், அமைப்பாளர்களாலும், அதிகாரிகளாலும், கலைஞர்களாலும், நடுவர்களாலும், லோகார்னோ, அஸ்கோனா நகரசபைகளினாலும், குறிப்பாக லோகார்னோ வாழ் அனைத்துப் பிரஜைகளின் அர்ப்பணிப்பு மிகு ஆதரவினாலும், கிடைக்கப்பெற்றது. இதனை எதிர்காலம் குறித்த சிறப்பான நோக்கில் முன்னெடுப்போம். இது எல்லாவகையிலும் சுதந்திரமான ஒரு திரைத்திருவிழா என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்." என்றார்.

இத்திரைப்பட விழாவின் கலை இயக்குனர் கார்லோ சத்ரியான் ( Carlo Chatrian) கூறுகையில், இந்த ஆண்டு மொத்தம் , 293 படங்களில் திரையிடப்படவுள்ளன. 12 பிரிவுகளை உள்ளடக்கியுள்ள போட்டிகளில் மொத்தம் 25 விருதுகள் வழங்கப்பெறும். பியாற்சா கிரான்டே பெருந்திரையில் 18 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்டுகின்றன. இந்த ஆண்டிற்கான தெரிவுகள்,புது அனுபவம் ஒன்றைத் தரும் என நம்புகின்றோம் என்றார்.

திரைப்படவிழாவின் ஆரம்ப நாளுக்கு முன்னைய (31.07.18) தினத்தில், லோகார்னோ மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பியாற்சா கிரான்டே பெருந்திரையில், Free festival இலவச காட்சிப்படுத்தலாகத் திரையிடப்பட்ட Grease திரைப்படமும், ஆரம்ப தினத்தில் காட்சிப்படுத்தப்பட்ட முதல் படமான, Les Beaux Esprits (Team Spirit) திரைப்படமும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமைந்த படங்களாக இருந்தன. சத்திரியான் குறிப்பிட்ட புதிய அனுபவம் இதுதானோ..? பார்க்கலாம்.

நேற்றை காட்சிப்படுதல்களுக்கு முன்ன தான கலைஞர்கள் வரவேற்பிலும், அறிமுகத்திலும், பார்வையாளர்களை ஈர்த்துக் கொண்டதில் முக்கியமானவர், Les Beaux Esprits படத்தின் நடிகரான Ahmed Sylla அகமட் சைலா தான். மாறும் முகபாவங்களாலும், நகைச்சுவையான பேச்சுக்களாலும், பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தை கொண்டாட்ட இடமாக மாற்றினார் என்றால் மிகையல்ல.

படம் குறித்த விரிவான பார்வை விரைவில்..

- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்.

- படங்கள் : Locarno Festival