திரைப்படவிழாக்கள்

காஸாவின் அப்போலோ ( L’APOLLON DE GAZA) என்பது அப் படத்திற்கான தலைப்பாக இருந்தாலும், 'சிலையைத் தேடி..' எனச் சொல்வதே சிறப்பு. லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் 71வது தொடரில் இதுவரை மூன்று தடவைகள் காட்சிப்படுத்தப்பட்டும், பலரது வேண்டுதலின் பேரில் இன்று சிறப்புக்காட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்படம்.

பல்வேறு சமூக, அரசியல், பிரச்சனைகள் குறித்துக் கேள்வியெழுப்பும் திரைப்படங்கள், "Semaine de la critique " (இவ்வார விமர்சனம்) எனும் பகுதியினூடாக காட்சிப்படுத்தப்படும் பிரிவில் இவ் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து அரங்குகளுக்கும் பார்வையாளர்கள் அதிகம் கூடினர்.

கிரேக்கத்தின் இசை, ஒளிக் கடவுளாக வர்ணிக்கப்படும் அப்பல்லோ ( Apollo) சிலை ஒன்று , 2013 ஆம் ஆண்டு, காசா அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. 2,000 ஆண்டுகள் பழமையானதும், 1.7 மீட்டர் உயரமும், 450 கிலோகிராம் எடையும், கலையழகும் கொண்ட, இந்த வெண்கலச் சிலையின் பெறுமானம், அமெரிக்க டாலர்களில், 340 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டது. பெறுமதி மிக்க இந்தக் கலைப்படைப்பு, திடீரென மறைந்துபோனது.

பிரான்சிலும் சுவிட்சர்லாந்திலும் அருங்காட்சியகங்கள், தொன்மை மிகு இந்தச் சிலையினை கையகப்படுத்திக் க காட்சிக்கு வைப்பதில் ஆர்வம் காட்டின. சாதாரண மீனவர் ஒருவரால் கடலில் கண்டுபிடிக்கப்பட்டு, இணையத்தில் மிகக் குறைந்த விலையில் விற்கப்படவிருந்த இச் சிலையை காசாவின் ஹமாஸ் தலைமையிலான அரசாங்கம் இச் சிலையினை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாகவும், சிலையினை வைத்துக் காஸாவின் மீதான சர்வதேச கவனத்தை ஈர்க்க அது முயல்வதாகவும் கருத்துக்கள் வெளியாகின.

இந்தச் சிலையை தேடிச் செல்லும், சுவிற்சர்லாந்து தொல் பொருள் ஆய்வாளரின், பார்வையில் L’APOLLON DE GAZA படம் விரிந்து செல்கிறது. அந்தப் பார்வைக்குள் வருவது அபவ்போலோவின் கதை மட்டுமல்ல என்பதுதான் இந்த ஆவணப்படத்தின் சிறப்பு.

புராதனக் கலைப்பொருட்களின் சேகரிப்பு, ஆர்வம், விற்பனை, அதனுள் நுழைக்கப்படும் போலி வடிவங்கள், எனப் பல விடயங்களையும் காட்சிப்படுத்துகின்றது. கண்டுபிடிக்கப்பட்ட சிலை கடலில் கிடைத்தது எனும் நம்பகத் தன்மை மீது எழுப்பப்படும் கேள்விகள், காஸாவின் கலைப்புராதனம் காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், காஸாவின் மீது காட்டப்படும் அடக்குமுறை அதிகாரம், அழிவின் காட்சிகள் எனப் போகும் வழியில் அவற்றையும் காட்சிப்படுத்துகிறது.

சிலை மீதான அக்கறை, காஸாவின் உயிர்கள் மீதில்லையா..? எனும் கேள்வியும் படம் பார்க்கையில் எழாமல் இல்லை.

Nicolas Wadimoff, Béatrice Guelpa பிரதியாக்கத்தினை காட்சிப்பதிவு செய்திருப்பவர் Franck Rabel. சலிப்பு ஏற்படுத்தாத படத்தொகுப்பு Christine Hoffet. நெறியாள்கை Director Nicolas Wadimoff. சுவிஸ். கனடா கூட்டுத்தயாரிப்பில் இவ் ஆவணப்படம் உருவாகியுள்ளது.

 

- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்.

- படங்கள் : Locarno Festival