திரைப்படவிழாக்கள்

லொகார்னோ திரைப்பட விழாவின், சர்வதேச போட்டிப் பிரிவில், பதின்ம வயதினரின் முதல் காதலைச் வெவ்வேறு பரிமாணத்தில் சொன்ன இரு திரைப்படங்கள் Genèse மற்றும் Yara.

Genèse

இதில் கனேடிய திரைப்படமான Genèse மூன்று பதின்ம வயதினரின் முதல் காதல் அனுபவத்தை, மூன்று கதைகளில் சொல்கிறது. காதல்/ காமம் குறித்து அவர்களிடம் முதிர்ச்சியற்ற புரிந்துணர்வு இருக்கிறதா, அல்லது அவர்களை பற்றிய மற்றையவர்களின் பார்வை முதிர்ச்சியற்றதாக இருக்கிறதா எனும் கேள்வி எழுப்பிச் செல்லும் படம் இது.

Genèse திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்கள் லொகார்னோவில்!

இயக்குனர் Philippe Lesage இன் நெறியாள்கையில் உருவான இத்திரைப்படம், மேற்குலக / ஐரோப்பிய பதின்ம வயதினரின் இன்றைய வாழ்க்கை யதார்த்தத்தை ஓரளவு தைரியமாகவே படம்பிடித்துக் காட்டியுள்ளது.

கட்டுப்பாடான ஆடவர் பள்ளியில் தங்கிப்படிக்கும் 16 வயது பொர்னெட் எனும் வாலிபன், தன் காதல்/ அன்பு உணர்ச்சிகள் மற்றவர்களிடமிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குவது ஒரு கதை.

அவனுடைய சகோதரியோ, தான் வேறு பெண்களுடனும் பழகிப் பார்க்கப் போகிறேன் என அவனது காதலன்  சாதாரணமாகச் சொன்னதில் மனமுடைந்து, அவளே புதிய நபர்களுடன் பழகத் தொடங்குவது இன்னுமொரு கதை.

13/14 வயதுடைய இரு பதின்ம வயதினர் ஒரு பள்ளிவிடுமுறையில் Camping ஒன்றில், முதல் சந்திப்பில் கொள்ளும் காதல் அனுபவம் மூன்றாம் கதை. படத்தின் இறுதிக்கட்டத்தில், «என் உதட்டில் உனக்கு முத்தம் தரவேண்டுமா» என குடிபோதையில் கேட்கும் பெர்னார்டின் சகோதரியை , கொட்டும் மழையில், நள்ளிரவில், வெளியில் அழைத்துச் சென்று,  நாய்களை போன்று தெருவில் பாலியல் வன்புணர்வு புரிந்துவிட்டு ஒன்றும் நடவாதது போல், அவளை மறுபடியும் அழைத்து இரவு களியாட்ட விடுதியில் விடுவான் ஒருவன். 

தங்களது, காதல், மகிழ்ச்சி, சுதந்திரம் என்பவற்றுக்காக எவ்வளவு தோற்றும், மறுபடியும் துணியும், பெண்களை  இவ்வாறான ஆடவர்களின் கரங்களிலும் தான் சிலவேளைகளில் சிக்குகிறார்கள் என இந்தக் காட்சி சொல்லாமல் சொல்லும். இன்றைய நடைமுறை உலகில், இச்சந்தர்ப்பங்களின் நிகழ்தகவினையும், மறுக்கமுடியாது என தோலுரித்தும், பயமுறுத்தியும் சொல்லும் சினிமா பாணி இது. 

மறுமுனையில் அதே போன்றதொரு முத்தத்தை தன் நெருங்கிய/பால்ய சினேகிதன் மீதே காதல் வயப்பட்டு கொடுக்க நினைக்கும் கதாநாயகனை, வெறுப்பாலும், விரக்தியாலும் பார்க்கிறான் அவனது நண்பன். மனதுக்குள் வேதனையை பூட்டிவைத்திருக்க முடியாது, வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையில், தன் நண்பன் மீதே எப்படி காதல்வயப்பட்டு போனேன் என்பதை 10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசி முடிக்கும் காட்சியில், அவ்வேடத்தில் நடித்த, நடிகர் Théodore Pellerin, உண்மையிலேயே பதின்ம வயது முதல்காதலின் அனைத்து பரிமாணங்களையும் தன் ஒற்றைப் பேச்சுக்குள் சொல்லிவிடுவார்.

Genèse என்றால், பிறப்பு, தொடக்கம், தோற்றம் என பல பொருள் படும். காதலின் பிறப்பு, தோற்றம், செயல், இச்சமூகம் அதனை ஏற்றுக் கொள்ளும் விதம், பார்க்கும் விதம், என பலவற்றை தாங்கிச் சொல்வதால், பெயருக்கு பொருத்தமாகவே இருக்கிறது தலைப்பும்.

Genèse திரைப்படத்தின் டிரெய்லர் : https://www.locarnofestival.ch/pardo/program/archive/2018/film.html?fid=1039463&eid=71

Yara 

Yara திரைப்படத்தின் கதாநாயகர்கள் லொகார்னோவில்!

சர்வதேச போட்டிப் பிரிவில், இதே முதல் காதல் மையப்பொருளில் பார்த்த மற்றுமொரு திரைப்படமான YARA இனை இதனுடன் ஒப்பிடுவதற்கு பல காரணிகள் உள்ளன.  முதல் காதலில் திளைக்கும் மகிழ்வையும், பின்பு பிரிவில் அதன் வேதனையும் Yara எனும் பருவ வயதுப் பெண்ணின் ஊடாக காண்பிக்கும் திரைப்படம் தான் «Yara». லெபனான்/ஈராக் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை  Abbas Fahdel இயக்கியுள்ளார்.

வடக்கு லெபனானின், வனப்பள்ளத்தாக்கு பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட கிராமம் ஒன்றில் தனித்து வாழும் ஒரு சில இறுதிக் கிராம வாசிகளில் நபர்களில் யாராவும், அவர் பாட்டியும் அடங்குவர். அக்கிராமத்தை மற்றையவர்கள் கைவிட்டதற்கு காரணம், பெரும்பாலன கிராம வாசிகள், நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர், அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். அல்லது இறந்து விட்டனர். யாராவுக்கு சிறுவயதாக இருக்கும் போது, அவர் பெற்றோர் ஒரு வாகன விபத்தில் இறந்துவிட, பாட்டியே யாராவை வளர்க்கிறாள், ஆனால், அந்த கிராமத்தை விட்டு இடம்பெயராமல்.

அவர்களது தோட்டம், ஆடுகள், கோழிகள், ஒரு கழுதை, ஒரு நாய், எப்போதும் குளிர்ச்சியாக தோன்றும் மலையும், பள்ளத்தாக்கும் கொண்ட அவ்வனப்பகுதி, கைவிடப்பட்ட வீடுகள், இவற்றை விட படத்தில் ஒன்றுமே இல்லை.

அம்மலைப்பகுதிக்கு தற்செயலாக வரும் ஒரு இளம் வயது பையனுடன், யாராவுக்கு தோன்றும் முதல் காதல், இருவரும் சேர்ந்து, செலவழிக்கும் நேரம் என்பவற்றுடன் மெதுவாகவே நகர்கிறது கதைக்களம்.

கூடுதலான நேரம், யாராவை மாத்திரமே கமெரா காண்பிக்கிறது. கைவிடப்பட்ட கிராமம் என்ற போதும், ஊருக்கே தெரிந்து போகும் அப்பையனுடனான நெருக்கம், யார் அவன் என கேள்வி கேட்டுத் தொலைக்கும் சமூகம், கவர்ச்சியான ஆடையுடன் வெளியில் நிற்காதே என சொந்த அண்ணனாகவே மாறிக் கண்டிக்கும் மூத்தவர்கள், கலியான வயதுக்கு வந்துவிட்டாள், திருமணம் செய்து தாருங்கள் என அவள் பாட்டியை கெஞ்சும் வாலிபன் என யாராவைச் சுற்றியிருக்கும், பொதுவான அரேபிய இஸ்லாமிய சமூகத்தின் பெண்கள் மீதான அழுத்தப் பார்வைகளை அப்படியே படம்பிடிதிருக்கிறார் Fahdel.

ஒரு கட்டத்தில், «எனக்கு ஆஸ்திரேலிய விசா கிடைத்துவிட்டது, தந்தை கூப்பிடுகிறார், நான் போவதைத் தவிர வேறு வழியில்லை» என அவள் காதலித்த பையனும் விடைபெற முனைகிறான். போகும் முன் வார்த்தைகள் எதுவும் சொல்ல முடியாது, தான் எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுக்கிறான். «நீ என்ன நினைக்கிறாயோ அதை எனக்கு முன் தைரியமாக சொல்லிவிட்டு போ» என அவள் கோபத்துடன் பதிலுரைத்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகழும் போது, அப்பாவிப் பெண்ணடிமைத்தன சமூகத்திலிருந்து அவள் விடுபட்டுவிட்டாள் எனும் உணர்வு மேலிடுகிறது.

பிரபல இயக்குனர் அப்பாஸ் கியெரொஸ்டொமியின் ஈர்ப்பில் இத்திரைப்படத்தை உருவாக்கியதாக சொல்லும் Fahdel,  ஆவணத்திரைப்படம், புனைவுத்திரைப்படம் இரண்டுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டு கோட்டை கிழிக்கும் கியரொஸ்டொமியின் யுக்திக்குள்ளே தன்னயும் பெருமையுடன் நிலை நிறுத்திக் கொள்கிறார். படத்தின் பிரதான இரு கதாபாத்திரங்களான யாரா மற்றும் அவன் காதலன் இருவரையும் தவிர மற்றைய அனைவரும், நிஜ மனிதர்கள், நிஜத் தொழில்கள். நிஜ உரையாடல்கள். முதல் காட்சியைத் தவிர மற்றைய அனைத்துமே Yara வாக நடித்த Michael Wegbe இன் நிஜ Improvisation உரையாடல்களும், உணர்ச்சி முக பாவங்களும். பாட்டியின் கதாபாத்திரத்திற்கு தேடித் தேடிக் கலைத்து, இறுதியில் திரைப்பட Location இல் தாங்கள் தங்கியிருந்த வீட்டில் தமக்கு உதவி செய்த பாட்டியையே நடிக்க வைத்திருக்கிறார்கள். இல்லை, அவளை அவளாக கமெராவின் முன்னும் வாழச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் தனது பேத்தியை திருமணம் செய்யக் கேட்டு வரும் வயது கூடிய ஒரு இளைஞனிடம், «முடிந்தால் நீயே அவளிடம் போய் சொல், அவள் சரியென்றால் கட்டிக் கொள்» என்பாள் பாட்டி. அதுகூட அவளது சொந்த வசனம் தானாம். படத்தின் ஸ்கிபிரிப்  வெறும் 5 பக்கம் தான். ஒவ்வொரு காட்சியும், படப்பிடிப்புக்கு முதல் 5 அல்லது 10 நிமிடங்களுக்கு முதல் Improvise செய்து பார்த்து நடித்த காட்சிகள் தான் என வெகு இலகுவாகச் சொல்கிறார் Fahdel.

«சினிமாவின் அப்பாவித்தனமான ஒரு சக்தி தொலைந்து போய்விட்டது. அதை மீட்டெடுக்க நானும் நினைக்கிறேன்» என இப்படத்தின் இயக்குனர் Fahdel சொல்கிறார். Artistic Formalisme வகையிலான தொழில்நுட்பத்தில் இசை, ஒலி & ஒளி யுக்தி, அனைத்தும் நேர்த்தியாக, உண்மையானது போன்று  இருக்க கடும் சிரத்தை எடுத்து பெரிய செலவில் உருவாகும் சினிமா படங்களின் வகையிலான, Genèse போன்ற திரைப்படங்கள் இறுதியில் எந்த உணர்வைத் தருகிறதோ, அதே உணர்வைத் தான், அனாதரவாக கைவிடப்பட்ட ஒரு கிராமத்தில் தனித்து வாழும் இயல்பான மூன்று கதாபாத்திரங்களின் ஊடாக «Yara» வும் இலகுவாக, குறைந்த பொருட் செலவில் சொல்லி முடிக்கிறது. சினிமாவில் எதுவும் சாத்தியம்.

Yara திரைப்படத்தின் டிரெய்லர் : https://www.locarnofestival.ch/pardo/program/archive/2018/film.html?fid=1031052&eid=71

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்  
Photos : Copyright: @ Locarno Festival

 

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது