திரைப்படவிழாக்கள்

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வெளிநாட்டு கட்டிடப் பணியாளராக வரும் ஒருவர் சிங்கப்பூரின் நிலநிலச்சீரமைப்பு பணியகம் ஒன்றில் வைத்து காணாமல் போகிறார். அவரைத் தேடிவரும் துப்பறிவு காவல்துறை நபர்,  சிங்கப்பூரின் செல்வந்த வாழ்வு மற்றும் வறுமை வாழ்வு இரண்டினதும் இருண்ட முகத்தை கண்டறிகிறார்.

லொகார்னோவின் அதி உயர் விருதை வெற்றி கொள்ளும் முதல் சிங்கப்பூர் திரைப்படம் இது. «சிங்கப்பூரின் புதிய சினிமாவை உருவாக்க நினைக்கும் பலருக்கு இவ்விருது பெரும் புத்துணர்ச்சி அளிக்கும்» என நம்புவதாக கூறும் இயக்குனர் Yeo Siew, «லொகார்னோ திரைப்பட விழா, சினிமா எல்லைகளை பெருப்பிப்பதற்கு எப்போதும் அழுத்தம் கொடுக்கும் ஒரு விழா, அதில் எமது புதிய சினிமாவுக்கு அங்கீகாரம் கிடைத்தது பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது» எனவும் சொல்கிறார்.

தாய்லாந்தின் புதிய அலை (New Wave)  சினிமா இயக்குனர்களின் ஈர்ப்பில் வளர்ந்தவன் தான் எனவும், இத்திரைப்படம் மூலம் சிங்கப்பூர் மக்களின் கனவுகள், பயம், காதல், வலி, மகிழ்ச்சி என அனைத்தையும் பிரதிபலிக்கவும் முயற்சித்திருப்பதாகவும் அதே நேரம், அதை மிகைப்படுத்தாமல் காண்பிப்பது என்பது தனக்கு மிகச் சவாலாக இருந்ததாகவும் கூறுகிறார்.

சர்வதேச முழு நீளத் திரைப்பட போட்டிப் பிரிவில், நடுவரின் சிறப்பு விருதை, M எனும் ஆவணத் திரைப்படம் வென்றது.

பெண் இயக்குனர் Yolande Zauberman  இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் Menahem Lang எனும் நபரை பின்தொடர்கிறது, தான் சிறுவயதில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பல்வேறு கொடுமைகளை சந்தித்த அதே புராதன யூத மத கிராம மையத்திற்கு திரும்பி அந்நினைவுகளை அவர் மீட்டும் கதைக் களம் அது. 

சிறந்த இயக்குனருக்காக சிறுத்தை விருதை Tarde Para Morir Joven எனும் தென் அமெரிக்க திரைப்படத்திற்காக Dominga Sotomayor தட்டிச் சென்றார். 1990 இல் மூன்று சிறார்கள், புதுவருட முதல் நாளை கொண்டாடும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது.

சிறந்த நடிகைக்கான விருது, Alice T. எனும் திரைப்படத்திற்காக Andra Guti க்கு கிடைத்தது. மிதமிஞ்சிய, அதாதாரண, கோபக்கார, முரட்டுத்தனமான பதின்ம வயது பெண்ணாக இப்படத்தில், நடித்திருப்பார் Andra Guti. 

சிறந்த நடிகருக்கான விருதை, ஹூங் சாங் சூவின் Gangbyung Hotel திரைப்படத்திற்காக Ki Joobong தட்டிச் சென்றனர். இத்திரைப்படத்தில் நடிகர்கள் Improvise மூலம்  பெரும்பாலான உரையாடல்களை சுதந்திரம் எடுத்து ஒப்புவித்திருப்பதாக தோன்றும். ஆனால், நிஜத்தில் அனைத்து உரையாடல்களும், நடிப்பும், இயக்குனரின் நெறியாள்களையில் அப்படியே பின்பற்றி நடித்தது என்கின்றார் Ki Joobong.

Cineasti Del Presente பிரிவில் (இயக்குனரின் முதலாவது அல்லது இரண்டாவது திரைப்படம்) தங்கச் சிறுத்தை விருதை, சிரியா/லெபனான் திரைப்படமான Chaos திரைப்படத்திற்காக Sara Fattahi எனும் பெண் இயக்குனர் தட்டிச் சென்றார். மூன்று சிரிய நாட்டு பெண்களை பற்றிய திரைப்படம் இது. மூவரும் நாட்டைவிட்டு வெளியேற நினைத்தவர்கள். மூவரும் வாழும் நாடுகள், இடங்கள் வித்தியாசமானவை. மூவரையும் இணைக்கும் பொதுவான ஒரே ஒரு விடயம் அவர்களது, பயம் மற்றும் மன அதிர்ச்சி.

இப்போட்டிப் பிரிவில் சிறந்த வளர்ந்து வரும் இயக்குனருக்கான விருதை Dead Horse Nebula எனும் துருக்கிய திரைப்படத்திற்காக Tarik Aktas எனும் பெண் இயக்குனர் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டிப் பிரிவில் நான்கு விருதுகளையும், பெண்களே தட்டிச் சென்றனர்.

சிறந்த முதலாவது முழு நீளத் திரைப்படத்திற்கான Swatch நிறுவன விருதை Alles ist Gut எனும் ஜேர்மனிய திரைப்படத்திற்காக Eva Trobisch வெற்றி பெற்றர். போதையில் பாலியல் வன்புணர்வு செய்யப்படும் பெண், அதை மறக்க, மறைக்க எவ்வளவு போராடுகிறாள் என்பதைச் சொல்லும் திரைப்படம் இது.

குறுந்திரைப்பட பிரிவில் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படமாக D’un Chateau l’Autre எனும் பிரான்ஸ் திரைப்படம் தெரிவானது. எமானுவேல் மெக்ரோன், மெரின் லெ பென் இருவருக்கும் இடையிலான இறுதிநேர அதிபர் பதவி போட்டியின் போது, யாருக்கு வாக்களிப்பது என தயங்கும் ஒரு இளைஞன், தான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரான தனித்துவிடப்பட்ட ஒரு வயதான பாட்டியுடன், இனம்புரியாத ஒரு புதிய அன்பை உணர்கிறான். இறுதிநேர, தேர்தல் போட்டி, பிரச்சாரத்தை அவன் பார்க்கும் விதம், பாட்டியின் தேவைகளை அவன் கவனிக்கும் விதம், அவ்விருவரையும் கண்டுகொள்ளாத அவர்களைச் சுற்றியிருக்கும் உலகம் இதனிடையே பயணிக்கும் 40 நிமிட திரைக்கதை இது.

சிறந்த சுவிற்சர்லாந்து குறுந்திரைப்படமாக Los Que Desean எனும் திரைப்படம் தெரிவானது. சிறந்த சுவிஸ் புதிய திரைக்கலைஞராக Ici Le Chemin Des Anes எனும் குறுந்திரைப்படத்திற்காக Rambert Preiss பெற்றுக் கொண்டார்.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் சிறந்த மக்கள் தெரிவு திரைப்படமாக (Prtix du Public UBS) Spike Lee இயக்கத்தில் உருவான Blackkklansman தெரிவானது. 1970 களில், அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு தெரிவாகும் முதல் ஆபிரிக்க - அமெரிக்கரான Ron Stallworth, தனது சகாவுடன் இணைந்து, கறுப்பினத்தவரை வெறுக்கும், தீவிர இனவெறியர்களின் குழு ஒன்றின் நிஜப் பின்புலத்தை வெளியுலகுக்கு தோலுரித்து காட்டும் Mission ஒன்றை செய்கின்றனர். உண்மைச்சம்பவங்களை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படம், தற்கால டொனால்ட் டிரம்பின் அமெரிக்க இனவாதத்தை பெரிதும் பிரதிபலிப்பதாக கூறுகிறார்கள் விமர்சகர்கள்.

சுமார் 11 நாட்கள், உலகில் இதுவரை சினிமா பார்வை சென்றிடாத நாடுகளின் எல்லைக்கும் சென்று பயணித்த, லொகார்னோ திரைப்பட விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இம்முறை அறிவிக்கப்பட்ட மொத்தம் 25 விருதுகளில் 12 விருதுகளை பெண் திரைக்கலைஞர்கள் தட்டிச் சென்றுள்ளனர். "இது, எதிர்காலத்தில் நீங்கள் கால் பதிக்க வேண்டிய திரைக்களத் தளம் லொகார்னோ திரைப்பட விழா தான் என்பதையே காண்பிப்பதாக, இத்திரைப்பட விழாவின் கலை இயக்குனர் Carlo Chatrien கூறுகிறார். 

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்

Photos : @LocarnoFestival

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.