திரைப்படவிழாக்கள்

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

மூன்று கதைகள், மூன்று இயக்குனர்கள், ஒரு நோக்கம். யுத்தத்திற்கு பின்,  இலங்கையின் நல்லிணக்கம் எப்படி இருந்திருக்க வேண்டும், ஆனால் எப்படி இருக்கிறது என்பதனை காண்பிக்க விளையும் விருப்பு.

இது குறித்த கரிசனையை சினிமாவின் ஊடாக வெளிப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்றுக்காக, 2015 இல், இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான மத்திய அலுவலகம் சார்பில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இலங்கை முழுவதுமிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஏற்கனவே சர்வதேச உலகுக்கு நன்கு அறிமுகமான, இலங்கையின் மூன்று மூத்த திரை இயக்குனர்களின் குறுந்திரைப்படத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

புதிய இளைஞர்களின் கதைசொல்லும் திறனுக்கு, இச்சந்தர்ப்பத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனது ஒரு வகையில் துரதிஷ்டம். அதே போல், இலங்கையின் போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தை பேச விளைந்த, இத்திரைப்படத் திட்டத்திற்கு தெரிவான மூவரும் பெரும்பான்மை சிங்களவர்கள் என்பதும் துரதிஷ்டம். அதேவேளை இன்னுமொரு வகையில் இலங்கையில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் சமூக பாகுபாட்டினை ஓரளவு புரிந்து கொண்டவர்களும், அதைப்பற்றி தமது சினிமாக்களில் முடிந்தவரை பேசுபவர்களில், இம்மூவரும் அடக்கம் எனும் போது, இந்நிதியுதவி திட்டம், வெறும் சிங்களப் பேரினவாத திரைக்காவியங்கள் சொல்லும் கரங்களில் முழுதாக செல்லவில்லை எனும் நிம்மதியும் ஏற்படுகிறது.
"மூவர்" திரைப்படமும் அதை ஓரளவு உறுதிப்படுத்தியுள்ளது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின்71வது தொடரில், Open Door பிரிவில் அதிகாலை காட்சியாக, பெரும் கூட்டம் கூடிய திரையரங்கு ஒன்றில் இத்திரைப்படம் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது.

மூவர் திரைப்படம், மூன்று குறுந்திரைப்படங்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொன்றும், 30-40 நிமிடங்கள் நீளம் கொண்டவை.

Her(அவள்) : Prasanna Vithanage

Her எனும் குறுந்திரைப்படம் பிரசன்ன விதானகேவினால் நெறியாளப்பட்டுள்ளளது. விடுதலைப்புலிகளின் காணொளி பொறுப்பாளரான கேஷவராஜன், யுத்தத்திற்கு பின்னர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கிறார். யுத்தத்தில் இறந்து போன அரச தரப்பு இராணுவ வீரரின் ஒருவரின் மனைவியைத் தேடி. அவரிடம் நெடுநாளாக தான் மறைத்து வைத்திருந்த ஒரு உண்மையைச் சொல்வதற்காக.

«உனது கணவன் போரிலேயே இறந்து போய்விட்டான்» எனும் உண்மை அது. அவளைச் சந்தித்துச் சொல்ல முடிந்ததா? என்பதே மீதிக் கதை.

இப்படத்தில், இயக்குனர் அசோக்க ஹந்தகமவாக அவராகவே நடித்திருக்க, அவருடைய திரைப்படங்களின் தீவிர ரசிகராக கேஷவராஜன் நடித்திருக்கிறார். கேசவராஜன் நடித்திருக்கின்றார் என்பதிலும் பார்க்க வாழ்ந்திருக்கிறார் என்பதே பொருத்தமானது. அவளவு இயல்பான உடல்மொழி அவரது.

ஈரானிய இயக்குனர் அபாஸ் கியரொஸ்டாமியின், 1990 இல் வெளிவந்த Close-Up ஐ ஞாபகப்படுத்தும் இப்படத்தில், சமுதாயத்தின் புறநகர் வாழ்வாதாரம் கொண்ட ஒரு சாதாரண நபர், பிரபலம் வாய்ந்த ஒரு திரை இயக்குனருடன் ஏற்படுத்தும் இனம்புரியாத பிணைப்பு அல்லது நட்பில் விரியும் கதைப்புனைவு.

விதானகவேவும், ஈரானிய சினிமாவில் பெரும் விருப்பு கொண்டவர். அவருடைய திரைப்படங்கள் பல ஈரானிய சினிமா பாணியில் கதை சொல்லும் திறன் கொண்டன. Her எனும் இக்குறுந்திரைப்படமும், சினிமாவை ஒரு வாழ்வாதார தக்கணப்பிளைத்தலாக பார்க்கும் நுட்பம் கொண்டது. «ஹந்தகம»வின் திரைப்படங்கள் கேஷவராஜனுக்கு சினிமா மீதான கனவையும், தன் எதிர்கால போருக்கு பின்னரான வாழ்வாதார நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதாக காண்பிக்கப்பட்டிருக்கும்.

பிரசன்ன விதானகேவின் மற்றைய திரைப்படங்கள் போன்று, இத்திரைப்படமும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்பற்ற பல தருணங்களாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் காண்பித்து, எப்படி அத்தருணங்கள், சோகங்களையும், சந்தோஷங்களையும், சவால்களையும் முகங்கொடுக்க கற்றுக்கொடுத்து விடுகின்றன என்பதனையும் காண்பித்திருக்கும் முற்றுமொழுதான ஒரு இலங்கைச் சினிமா.

படத்தின் ஒரு காட்சியில், நடிகர் சிவாஜி கணேசனின் «அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே» பாடல், கதா பாத்திரங்கள் பயனிக்கும் வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, கேசவராஜன் தனது சோகக் கதையை அப்பாடலின் வரிகளுடன் ஒப்பிட்டு கதை சொல்வார். இந்தியச் சினிமா இலங்கைத் தமிழர்களின் ஞாபகங்களில் எந்தளவு கலந்திருக்கிறது எனும் வெளிப்பாட்டுடன் கதை சொன்ன உத்தியாக அன்றி, தொழில்நுட்பத்திலோ, கதை சொல்லும் முறையிலோ, நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பாட்டிலோ எந்தவொரு இந்தியச் சினிமாத் தாக்கமும் இப் படத்தில் இல்லை என்பது முக்கியமானது.

வடக்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் சடலங்களில் தொடங்கி, மலைகள், காடுகள், இரவின் ஊடாக பிரயாணித்து, தெற்கே ஆற்றங்கரையோரம் அமைந்த ஒரு சிங்கள குக்கிராமமொன்றின் அதிகாலை வேளையில் வந்து முடிவடையும் விதானகேவின் கமெரா.

விடுதலைப்புலிகளில் இருந்த ஒருவர், இராணுவத்தில் ஒருவரை பறிகொடுத்த மற்றுமொருவர், இருவரும் போருக்குப் பின்னரான தங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கின்றனர் என்பதனை, கேசவராஜன், அசோக ஹந்தகம, இறுதியில் யசோ எனும் சிங்களப் பெண்மணி ஆகிய கதாபாத்திரங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு பிரசன்ன விதானகேவால் சொல்ல முடிந்திருக்கிறது.

இது இருவரின் தனிப்பட்ட வாழ்நிலைப்பார்வைதான். தனிமனிதர்களின் கூட்டே சமுதாயமும், அதன் நீட்சியான பிரபஞ்சமுமாகும். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும், அனுபவங்களுமே, பிரபஞ்சத்திற்கும் பொருந்தக் கூடிய பொதுவான உதாரணங்கள் ஆகின்றன எனும் தத்துவார்த்தம் இப்படத்திற்கும் பொருந்தும்.

Him (அவன்) : Vimukthi Jayasundara

விமுக்தி ஜயசுந்தரவின் நெறியாள்கையில் உருவான குறுந்திரைப்படம் «Him». மறுபிறவி, போன ஜென்ம ஞாபகங்கள் போன்ற இலகுவில் திரைக்கதையில் காட்சியாக காண்பிக்க முடியாத அமானுஷ்யங்களை, நடைமுறை மெய்மையாக சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறது திரைக்கதை. அதற்கேற்ப, திரைக்கதை சொல்லப்பட்ட மீனவக் கிராமமும், அங்கு காண்பிக்கப்படும் கதாபாத்திரங்களும், படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.

இலங்கையின் வரலாற்று நிகழ்வுகள், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்கள் மீதான சில சிங்களக் கல்விமான்களின் பார்வை, இஸ்லாமியர்களின் மீதான பொதுவான, அளவுக்கு மீறிய அச்சம் என பல சிக்கலான, முரண் நகை பேசக் கூடிய விடயங்களைக் கூட போகிற போக்கில், சாட்டையடியாக அடித்துச் சென்றிருக்கிறது இக்குறுந்திரைப்படம். ஆனால் அவற்றை குப்பையாகவோ, விகாரமகவோ காட்டிவிடக் கூடாது என்பதில் ஜயசுந்தர மிகக் கவனமாகவே செயற்பட்டிருக்கிறார்.

கதையை நகர்த்திச் செல்லும் ஆசியர் கதாபாத்திரம் மிகச் சுவாரஷ்யமானது. பௌத்தமே தேசியம், எனும் சித்தாந்தத்தை நம்பும் ஆசிரியர் அவர். தமிழ் - சிங்கள எல்லைப்பகுதியில் (முன்னர் வி.புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிடுக்கப்பட்ட பகுதியாகவும் இருக்கலாம்) ஒரு பள்ளியில் கற்றுக் கொடுப்பவர்.

மாணவர்கள் அனைவரும் சரளமான தமிழும், சிங்களமும் உரையாடுகிறார்கள். அதில் சிலரின் பெற்றோர் சிங்களவர்கள். ஆனால் தங்களது நண்பர்கள் அதிகம் தமிழர்கள் என்பதால், அப்பெற்றோரின் பிள்ளைகளுக்கு சிங்களத்தை விட தமிழ் அதிகம் தெரிந்திருக்கிறது. ஆனால் குறித்த சிங்கள மொழி இலக்கிய ஆசிரியர், அனைத்து இலங்கையர்களும் அடிப்படையில், ஆதியில் சிங்களவர்கள். பின்னர் தான் ஏனைய இனங்களையும், மதங்களையும் அவர்கள் உருவாக்கிக் கொண்டனர் எனக் கற்றுக் கொடுப்பார். அவரே அப்படித் தான் நம்புகிறார் என்றளவுக்கு அவரது மாயை உலகையும், அவர் சிந்தனைக் குழப்பங்களையும் படம் மிக இயல்பாக காண்பித்திருக்கும்.

அந்த ஊரில் ஒரு சிறுவன், «முன் ஜென்மத்தில் வி.புலியாக இருந்தவன், இப் பிறப்பில் சிங்களப் பெற்றோரின் மகனாக பிறந்திருக்கிறான். பௌத்தமதம் சொல்லும் மறுபிறவி கோட்பாடுதான் இது» ஊர் முழுவதும் கதை பரவும்.

அவனோ, தனது கையில் இரு தடிகளை துப்பாக்கி போல் பிடித்து, விளையாடிக் கொண்டிருப்பான். அவன் பார்வையில் அது ஒரு விளையாட்டுப் பொருளாக மாத்திரம் கூட இருந்திருக்கலாம். அவன் காட்டும் திசையெல்லாம், தன்னிச்சையாக காட்டும் திசைகளாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அவனின் ஒவ்வொரு அசைவுகளுக்கும், விகாரமான சிந்தனையில் பெரியவர்கள் பொருள்கொள்ளும் தன்மை, சிறு குழந்தைகளின் அப்பாவித்தனமான உணர்ச்சி வெளிப்பாட்டுக்களிலிருந்து மாறுபாடானவை. சந்தேக, அச்சம் மிக்க இலங்கையின் இன்னுமொரு யதார்த்த பரிமாணம் அது. அதனை மிக அழகாகவே இக் குறுந்திரைப்படம் காண்பிக்கிறது.

இப்படம் கையில் எடுத்திருந்த இன்னுமொரு முக்கிய கருப்பொருள் வெகுஜன ஊடகங்களின், மாயை, மனக்கிளர்ச்சி ஏற்படுத்தும் வியாபார உத்தி தொடர்பிலானது. «குறித்த சிறுவன், முன்னாள் விடுதலைப் புலி என சொல்லுவீர்கள் எனில் அது அவனது எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும். தயவு செய்து இதைப் பெரிது படுத்தி செய்தியாக்கிவிடாதீர்கள்» என அக்கிராமத்திற்கு வரும் ஊடகம் ஒன்றிடம், குறித்த ஆசிரியர் கெஞ்சுவார். ஆனால் அந்நாளிதழின் பிரதான தலைப்புச் செய்தியாக புகைப்படங்களுடன் அவ்விடயம் வெளிவந்து, அச்சிறுவனின் குடும்பம், அக்கிராமத்தை விட்டு மறைவாக இடம்பெயர்வதை தவிர வேறு வழியில்லை எனும் அளவுக்கு அது விவகாரமாகும்.

படத்தின் நிறைவுப் புள்ளியில், அக்கிராமத்தின் பள்ளி அதிபர், குறித்த சிங்கள இலக்கிய ஆசிரியரிடம் இப்படிச் சொல்வார்.
«புத்தபகவனால் மாத்திரமே, ஒருவர் மறுஜென்மத்தில் பிறக்கப் போகும், நேரம், இடம், குலம், தாய் அனைத்தையும் தீர்மானிக்க முடியும். யார் யாராக பிறக்கப் போகிறார்கள், எங்கு பிறக்கப் போகிறார்கள், அப்படிப் பிறக்கிறவர்கள் எப்படி ஆகப் போகிறார்கள் என்பது அவரைத் தவிர்த்து, ஒருவருக்கும் தெரியாது». என்பார். அவ்வசனம் சொல்லி முடிக்கப்படும் போது, இச்சமூகம் யுத்தவடுக்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, புதிய மனிதர்களாக மறுபிறவி எடுக்க அப்புத்தரால் கூட உதவ முடியுமா..? என எண்ணத்தோன்றும்.

Other (மற்றவர்கள் ) : Asoka Handagama

அசோக்க ஹந்தகமவின் நெறியாள்கையில் உருவான படம் «Other». முதலிரு குறுந்திரைப்படங்களும், ஒரு கிராமத்தில் தொடங்கி மறுகிராமத்தில் முடிவடையும். வாகனங்களில் பயணிக்கும் நேரங்களில், கதையும் பயணிக்கும். ஆனால் இக்குறுந்திரைப்படம், முழுவதுமாக கொழும்பு நகரின் பரபரப்புக்களுடன் நகரும். 24 மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்கள் / சம்பாஷனைகளோடு, இறுதியில், «பலியாகிறவன், அரச தரப்பு இராணுவ வீரனோ, விடுதலைப்புலிப் போராளியோ, அவரவர் தாய்க்கு, அவரவர் மகன்களே» என கருத்து சொல்லி முடிவடையும் படம் இது.

யுத்தத்தின் போது, காணாமல் போன, அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி, கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் ஒரு நடுத்தர வயது தமிழ்ப் பெண்மணி, எதேச்சையாக தெருவில் காணும் ஒரு இளைஞனை தனது மகன் எனச் சொல்லி ஆட்டோ ஒன்றில் ஏறிப் பின் தொடர்கிறாள். ஒரு கட்டத்தில் அவனையும் காணவில்லை. அந்த அம்மாவுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே பேருந்தில் வந்த ஒரு தமிழ் இளம் விதவைப் பெண்ணுக்கும், குறித்த சிங்கள ஆட்டோ ஓட்டுனருக்கும், அத்தாய் மீது பரிதாபமும், இனம்புரியாத ஒரு பாசமும் ஏற்படுகிறது. அவளுக்கு உதவி செய்வதற்காக அன்றைய நாள் முழுவதும், குறித்த இளைஞனைத் தேடுகிறார்கள். அந்தப் புள்ளியில் மரித்துப்போகாத மானுடம் துளிர்கிறது

தாய், மகனைத் தேடுவது மாத்திரம் அல்லாது, ரயில் நிலையம், பேருந்து நிலையம், தெருவோர ஆட்டோத் தரிப்பிடம், நகர்ப்புறக் கடைத் தெருக்கள் என கொழும்பின் நகர்ப்புற இரவு வாழ்க்கையையும் கமெரா வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது.

காணாமல் போன மகன் குறித்து தகவல் பெற காவல்துறையை அணுகிறார்கள். விசாரணை நடக்கிறது. ஒரு முனையில் குறித்த தாய், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தேய்ந்து போன, வெறுமை மாத்திரமே மிகுந்த கண்களால் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்.

மறுபக்கம், இனவாதம் மாத்திரமே ஒலிக்கும் காவல்துறை ஆணையாளரின் குரல் பார்வையாளனுக்கு கேட்டுக் கொண்டிருக்கும். குரலை மட்டுமே பயன்படுத்தி அக் கதாபாத்திரத்தின் தன்மையினைக் காட்சிப்படுத்திய வகையில், அப் பாத்திரத்தின் மீது, பார்வையாளனுக்கு வெறுப்பும், அச்சமும் ஏற்படும்.

«சிங்களம் புரியும். ஆனால் தமிழில் தான் பேசுவேன்» எனுச் சொல்வாள் துணைக்கு வந்த இளம் விதவைத் தமிழ்ப் பெண். அந்த ஒற்றைத் தைரிய வார்த்தைகளில், அவள் வளர்த்தெடுக்கப்பட தேசத்தின் அடிப்படை உரிமைக் கோரலை வெளிப்படுத்தியிருப்பார் ஹந்தகம.

ஒரு கட்டத்தில், «உங்கள் மகனை எப்படியும் நாளைக்குள் தேடிப் பிடித்து விடுவோம்» என குறித்த ஆட்டோ ஓட்டுனர் சிங்கள மொழியில் அத்தாய்க்கு ஆறுதல் வார்த்தை சொல்வார். பின்பு «நான் சொல்வது அவளுக்குப் புரிகிறது போல» என உற்சாகமடைவார்.

«அப்படி இந்த இரு இனங்களுக்கும் இடையில் அடுத்தவர் மொழி புரியத் தொடங்கியிருந்தால், இன்றைக்கு நான் இப்படி விதவையாகியிருக்க மாட்டேன், இவள் தன் மகனைத் தொலைத்திருக்க மாட்டாள், நீ இச்சந்தர்ப்பத்தில் எங்களைச் சந்தித்திருக்க வேண்டிய தேவையும் வந்திருக்காது» எனும் தொணியில் பதில் சொல்வாள் இளம் விதவைப் பெண்.
மொழிப் புரிந்துணர்வு, ஒரு நாட்டின் நல்லிணக்கத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை அந்த ஒற்றை சம்பாஷனையில் சொல்லப்பட்டிருக்கும்.

மாலை தெருவோரத்தில் இறக்கிவிட்ட தாயும் இளம் விதவையும் என்ன ஆகியிருப்பார்கள் என இரவில் எண்ணிப் பார்க்கும் ஆட்டோச் சாரதி, அவர்களைத் தேடிக் கண்டு கொள்ளும் காட்சியில் வரும் ஒரு சட்டகம், உன்னதமான திரைமொழி அனுபவம். படத்தின் இறுதிக் காட்சி இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையீனத்தைச் சுட்டி, நிறைவுறுகிறது.

இந்த நம்பிக்கையீனங்களை களைவது யார் ? எவ்வாறு? எப்போது? எனப் பார்வையாளனிடம் பல கேள்விளை எழுப்புகிறது.

Her.Him.The Other ( அவன், அவள், மற்றவர்கள்- Asoka Handagama , Vimukthi Jayasundara , Prasanna Vithanage)
மூன்று தனித் தனிக் குறுந்திரைப்படங்களால் ஆனதெனக் கூட சொல்ல முடியாத, மூன்று கதைகளுக்கும் இடையில் ஒத்திசைவுள்ள ஒரு முழு நீளத் திரைப்படம். ஒவ்வொரு கதைக்களமும் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை மற்றையது நிரப்புகிறது.

இன்றைய இலங்கையை இக்கலைப்படைப்பு மிகச் சரியாகவே படம்பிடித்துள்ளது எனும் உள்ளுணர்வு எழும், இத் திரைப்படத் திட்டத்திற்கு அரச நிதியுதவிப் பின்புலம் என்பது, ஒரு வகையில் முரண் நகைதான். ஆனால், இம்மூன்று திரைப்பட இயக்குனர்களுமே, இலங்கையின் உள்ளக நிலைமையை தமக்கு புரிந்தளவும், தெரிந்தளவும், தமக்கு இருக்கும் கலைத்திறன் வெளிப்பாட்டு எல்லையை வைத்து சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

 

- 4தமிழ்மீடியாவிற்காக: ஸாரா, மலைநாடான்