திரைப்படவிழாக்கள்

சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.

புனைவு மற்றும் உண்மை இரண்டையும் இணைக்கும் அல்லது பிரிக்கும் ஒரு மெல்லிய கோட்டின் விளிம்பில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இத்திரைப்பட விழா, «நிஜக்கதைகளை பிரதிபலிக்கும் புனைவுகள்» என ஆவணத் திரைப்படங்களுக்கு புதிய பரிமாணங்களை கொடுக்கின்றன. சுவிற்சர்லாந்தின் ஒரே ஒரு ஆவணத் திரைப்பட விழாவான "Vision du Réel" 50 வது  வருட கொண்டாட்ட நிகழ்வாகவும் இந்த ஆண்டு முக்கியத்துவம் பெறுகிறது.

ஐரோப்பாவில் இதுவரை வெளியான புகழ் பெற்ற பல சர்வதேச ஆவணத் திரைப்படங்களின் முதலாவது திரையிடல் காட்சி, 1969ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விழாவில் இருந்தே தொடங்கப்பட்டிருக்கும். அதோடு, ஆவணத் திரைப்பட உருவாக்கத்தின், முதற்படியான திரைக்கதை எழுத்திலிருந்து, தொகுப்பாக்கம், வெளியீடு வரை ஒவ்வொரு படிநிலைக்கும் நிதிதிரட்டும் மிகப்பெரிய ஐரோப்பாவின் சினிமாச் சந்தையும் இவர்களிடம் இருக்கிறது. திரைப்பட விழாவின் 9 நாட்களும், இச்சந்தையின் ஊடாக சுமார் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தித்து தமக்கான திரைப்பட கூட்டுத் தயாரிப்புக்களை திட்டம் வகித்துக் கொள்கின்றனர்.

முதன்முறையாக ஒரு பெண் கலை இயக்குனரின் (Emilie Bujès) மேற்பார்வையில் தொடங்கும் இம்முறை திரைப்பட விழா, Burnign Lights (புதிய வடிவில் கதை சொல்லும் ஆவணத் திரைப்படங்கள்), Opening Scenes (திரைக்கல்லூரியிலிருந்து வெளியாகும் இளம் சினிமா கலைஞர்களின் குறுந்திரைப்படங்கள்), Latitudes (போட்டியில் இல்லாத பல்வேறு உலக நாடுகளின் வாழ்வாதாரக் கதை சொல்லும் திரைப்படங்கள்), என பலப் புதிய பிரிவுகளுடன் சுமார் 58 நாடுகளைச் சேர்ந்த 169 திரைப்படங்கள் இம்முறை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இம்முறை திரைப்பட விழாவின் கௌரவ விருந்தினராகவும், கோல்டன் செஸ்டஸ் மற்றும் ஆவணத் திரைப்படங்களின் குரு (Maître du Reel) ஆகிய இரு அதி உயர் விருதுகளை பெறுபவராகவும், அழைக்கப்பட்டுள்ளார் Werner Herzog. சுமார் 70 க்கு மேற்பட்ட ஆவண மற்றும் புனைவுத் திரைப்படங்களை உருவாக்கியுள்ள ஜேர்மனியின் புதிய அலைச் சினிமா இயக்குனரான Herzog, தனது திரைப்படங்கள் மூலம், உலகின் ஆபத்தான முற்றுப்புள்ளிகள் என நினைக்கும் எந்தவொரு விளிம்பு நிலைக்கும் செல்லத் தயங்காதவர். எது எல்லை, எதுவரை போகலாம் என்பதை இவருடைய படங்கள் எப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும்.

நீங்கள் திரை ஆர்வலர் எனில் நிச்சயம் Herzog பற்றி தெரிந்திருப்பீர்கள். இல்லையெனில், இந்த இணைப்பில் அவரை பற்றி அறியலாம் > https://www.visionsdureel.ch/en/festival/maitre-du-reel-2019

ஏப்ரல் 13ம் திகதி வரை தொடரும் நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவில், நாம் பார்த்த திரைப்படங்கள், கலந்து கொண்ட திரைச்சிந்தனையாளர்களின் சந்திப்புக்கள் பற்றி  தொடர்ந்து பதிவு செய்வோம், 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள்.

இம்முறை பிரதான போட்டியில் உள்ள முழு நீளத் திரைப்படங்கள் இவை >

 


- நியோனிலிருந்து 4தமிழ்மீடியாவின் செய்தியாளர்கள்.