திரைப்படவிழாக்கள்

பாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.

இரு காதல் ஜோடிகளுக்கு இடையில், திருமணமான தம்பதியினருக்குள், இனம்புரியாத உணர்ச்சிகளை எப்படி புரிந்துகொள்வது எனும் கேள்வியுடனான பருவ வயதில் நடைபெறும் உடலுறவுகளில் என பல நிகழ்தகவுகளில் பாலியல் வன்முறைகள், வன்புணர்வுகள் இடம்பெறுகின்றன.

அப்படி இடம்பெறும் இருண்ட அரங்குகளில் மனித இயல்பு என்ன, எப்படி அதை எப்படி எடுத்துக் கொள்கிறது, எப்படி அதை வெளிப்படுத்துகிறது, எப்படி உணர்ந்து கொள்கிறது என எல்லா பக்கங்களில் இருந்தும் அலசுகிறது இந்த ஆவணத் திரைப்படம் «That Which Does Not Kill». Alexe Poukine  எனும் பெண் இயக்குனரின் நெறியாள்கையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது, இடைநடுவில் பலர் எழுந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. அவர்களால் படத்தின் நிஜப் பிரதிபலிப்பை தாங்கமுடியாது இருந்திருக்கலாம். காரணம் உண்டு.

Ada எனும் 19 வயதுப் பெண், தனக்கு தெரிந்த ஒரு பையன் ஒருவனுடன், இரவு விருந்துணவுக்கு சம்மதிக்கிறாள். அச்சந்திப்பில், அந்த விடயம் மிக விரைவாக நடந்தேறுகிறது. அவள் தடுத்து நிறுத்தவோ, தன்னை பாதுகாக்கவோ முயற்சிக்கவில்லை. 2013 இல் Alexe Poukine தன் முதலாவது திரைப்படத்தை காட்சிப்படுத்திய ஒரு நிகழ்வில், Ada தனக்கு நடந்த இந்த அனுபவத்தை Poukine இடம் கூறியிருக்கிறாள்.

"9 வருடங்களுக்கு முதல் அவளுக்கு நடந்ததை தன்னிடம் அப்போது கூறிய போது, இந்தப் பெண் யார், ஏன் என்னிடம் இதைச் சொல்கிறாள், இதை வைத்து நான் என்ன செய்வது" என திகைத்ததாக கூறுகிறார் Alexe Poukine. பாலியல் வன்புணர்வு என்பது தொடர்பில் தான் எடுத்துவைத்திருந்த ஒரு தத்துவத்திற்கும், தன்னுடைய சக நண்பர்கள் சிலரும் கூறிய இதே போன்ற  பாலியல் வன்முறை அனுபவங்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு முரண்நகையால் பெரிதும் ஆச்சரியப்பட்டதாகவும், அதையடுத்தே இத்திரைக்கதையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் கூறுகிறார்.

திரைப்படம் தொடங்குகிறது. ஒரு பெண், 25-30 வயதிருக்கும்.

Ada 19 வயதில் முதன் முதலில் சந்தித்த அப்பையனுடன் இருந்த நெருக்கம், எப்படி அவன் அதை எப்படி பயன்படுத்திக் கொண்டான் என்பது தொடர்பில் விவரிக்கும் மிக நீண்ட, தெளிவான, நுணுக்கமான, வலியின் ஒவ்வொரு அங்குலத்தையும் விவரிக்கும் சொற்தொடர்கள் கொண்ட பந்திகளை ஒப்புவிக்கிறாள். அவள் ஏற்கனவே அதை மனப்பாடம் செய்திருக்கிறாள். உண்மையில் அப்பெண் தான் Ada என நம்பும் அளவுக்கு உணர்ச்சிகளை தனக்கு நடந்தது போலவே ஒப்புவுக்கிறாள்.

Ada இரண்டாவது முறையாக அதே வாலிபனால்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட போது நடந்த அனுபவங்கள் இன்னொரு பெண்ணால், இம்முறை வயதில் மிக இளைய ஒருவரால் வாசிக்கப்படுகிறது.  Ada வின் ஒவ்வொரு வன்முறை பதிவுகளும், தேர்ந்த நடிப்புக்கலை கொண்ட பெண்களால் இதே போன்று ஒப்புவுக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் Ada மறந்து, அப்பெண்களுக்குத் தான் இவை அனைத்தும் நடந்தன என நம்பத் தொடங்குகிறோம். ஒரு கட்டத்தில் இப்பெண்கள் அனைவருமே புனைவு எனவும்,  Ada இன் கதையை சொல்ல வந்தவர்கள் என இயக்குனர் காண்பிக்க விரும்புகிறார். அதற்காக, அக்கலைஞர்கள் Ada இன் கதை எழுத்துக்களை சொல்ல முடியாமல் தடுமாறும் நேரம், மறந்து போகும் நேரம், அல்லது தங்களுக்கு நடந்த நிஜ அனுபவங்களில் மூழ்கி, அழத் தொடங்கும் நேரம் என அனைத்தும் இடையிடையே இத்திரைப்படத்தில் காண்பிக்கப்படுகிறது.

பெண்கள் மாத்திரம் பலிக்கடாக்கள் அல்ல. ஆண்கள், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என எவரும் பாலியல் வன்புணர்வுக்கு பலியாகலாம் எனும் நிஜத்தை சொல்லும் பல்வேறு நபர்களை படம் முழுவதும் காண்கிறோம். ஒரு கட்டத்தில், இதில் எது அவர்களுக்கு நடந்தது, இது எது Ada வுக்கு நடந்தது என அனைத்தையும் மறந்து போகிறோம். அந்த வலிகொண்ட உணர்ச்சிகளில் மாத்திரம் புலன் செலுத்துகிறோம். படம் முடிவடையும் போது, நீங்கள் ஆணாக இருந்தால் நிச்சயம் கூணிக் குருகிப் போவீர்கள். ஆண்வர்க்கம், பெண்வர்க்கத்திடம் தீர்த்துக்கொள்ளும் வண்ணிச்சை, ஒரு வன்முறையாக கூட கருதப்படுவதில்லை. படம் முழுவதும் இசையில்லை. ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை வீட்டில் தனிநபர்களாக இருந்து விவரிக்கும் உரையாடல்கள் தவிர்த்து எந்த வன்முறைக் காட்சியும் படத்தில் இல்லை. "Sans Frapper" என்பது இத்திரைப்படத்தில் பிரெஞ்சு மொழித் தலைப்பு. அர்த்தம், «அறையாமல்». ஆனால் இத்திரைப்படம் உங்களை அறையும். உடல் ரீதியில் ஒரு பருவப் பெண்ணுக்கு நீங்கள் இழைக்கும் உச்சகட்ட பாலியல் வண் தீங்கை, அந்த உடல் உறுப்பின் பெயர் சொல்லி, எந்த நேரத்தில், எப்படி, என்னென்ன செய்தீர்கள் என்பது வரை அனைத்தையும் சொற்களால் விளக்கும் இத்திரைப்படம், இதற்காக எடுத்துக்கொண்ட ஒரே ஒரு ஆயுதம் புனைவுக் கதபாத்திரங்கள்

திரைப்படம் முடிவடைந்து கேள்விபதில் நிகழ்வில், Alexis Poukine, «படத்தில் இன்னமும் நிறையக் காட்சிகள் காண்பிக்கவில்லை. உதாரணத்திற்கு Ada மறுபடியும், அப்பையனிடம் போக விரும்பியிருந்தாள். நீண்ட வருடங்கள் அவனை சந்தித்திருக்காத போதும்» என்றார்

பொதுமக்களில் இருந்த வயதான ஒரு பெண்மணி, ஏன் இவ்வளவு நடந்தும் Ada அப்பையனை சந்திக்க விரும்பியிருக்கிறாள் என கேள்வி எழுப்பினாள். அதற்கு Poukine ஒரு பதில் சொல்லிருந்தார். «அப்பையனால், Ada ஏன் இரண்டாவது, மூன்றாவது தடவையும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாள்? ஏன் அப்பையன் அப்படிச் செய்தான்? என கேள்வி யாருக்கும் எழவில்லை. இப்போது கூட Ada ஏன் அவனை சந்திக்க விரும்புகிறாள் என்றே கேட்கிறீர்கள் » என்கிறார் Poukine. 

தனக்கு நடந்தது ஒரு பாலியல் வன்புணர்வு «Rape» என்பதை புரிந்து கொள்ள 10 வருடங்கள் தேவைப்பட்டது Ada வுக்கு. அவர்களுக்கு…?

- நியோனிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்