திரைப்படவிழாக்கள்

நேற்று வெள்ளிக்கிழமை பியாற்சே கிராண்டே திறந்த வெளி பெருத் திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இரு படங்களில் முதலாவது «7500».

பேர்னிலிருந்து பாரிஸ் நோக்கி செல்லும் ஒரு பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சிக்கின்றனர். என்னவாகிறது என்பதே மீதிக் கதைவழமையாக நீங்கள் பார்க்கும் ஹாலிவூட் விமானக் கடத்தல் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டது இது. Hyper Realisme என சொல்லப்படும் மிக மிக யதார்த்த விளைவுகளை அதன் மிக அருகில் இருந்து சித்தரித்திருப்பார்கள்.

சில வருடஙக்ளுக்கு முன் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட Everything will be alright எனும் குறும்திரைப்படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவரும் மைக்கெல் ஹனகேவின் மிகத்தீவிர ரசிகருமான ஜேர்மனிய இயக்குனர் Patrick Vollrath இன் நெறியாள்கையில் உருவான இத்திரைப்படம் நேற்று பியாற்சே கிராண்டா திரையரங்கு ரசிகர்களிடம் இரு உணர்ச்சிகளை நிச்சயம் உருவாக்கிச் சென்றிருக்கும். முதலாவது, இஸ்லாமியர்கள் மீது இன்னமும் ஒரு இனம் புரியாத ஒரு அச்சத்தை அதிகப்படுத்திருக்கும். துரதிஷ்டமான எதிர்மறை விளைவு அது. மற்றையது, இனிமேல் நீங்கள்  மேற்கொள்ளும் எந்தவொரு விமானம்ப்பயணமும் இதுவரை மேற்கொண்டது போல் இருக்காது. ஒரு விமானம் கடத்தப்படும் போது பயணியாக எப்படி இருக்கக் கூடாது என்பதை கற்றுக் கொண்டிருப்பீர்கள்

இயக்குனர் Patrick Vollrath & நடிகர் Joseph Gordon

இத்திரைப்டத்தின் கதை முழுவதும் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் உள் நடப்படதல்ல. அதையும் தாண்டியது. விமானத்தினுள் ஓட்டுனர்களின் அறையான Cockpit இல் மாத்திரமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தை நேற்று பியாற்சே கிராண்டே திரையரங்கில் அறிமுகப்படுத்தி வைத்த லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் லிலி ஹின்ஸ்டன்,  «இத்திரைப்படம் லொகார்னோவுக்கு மிக முரண்நகையானது. திரைப்படம் முழுவதும் ஒரு சிறிய இருண்ட அறைக்குள் நடக்கிறது. ஆனால் திரைப்படம் மிகப்பெரிய திறந்தவெளித் திரையரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது. எப்படி அனுபவம் இருக்கப் போகிறது என பார்ப்போம் என்றார். படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் Joseph Gordon நடித்திருப்பார். 7500 எனப்படுவது ஒரு விமானம் இனம்தெரியாத நபர்களால் திருப்பப்படும் போது சர்வதேச பாதுகாப்பு புலனாய்வு பிரிவிக்கு அறிவிக்கப்படும் அவசர அழைப்பிலக்கமாகும். இத்திரைப்படத்தின் இன்னுமொரு மிக முக்கிய கதாபாத்திரம் பாதுகாப்பு கமெராக்கள். ஓட்டுனர் அறையிலிருந்து விமானத்தின் ஏனைய பாகங்களில் என்ன நடைபெறுகிறது என்பது அனைத்தும் அக்கமெரா மாத்திரமே, திரைப்பட பார்வையாளர்களான எங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருக்கும். திரைப்படத்தின் 90 நிமிடங்களும் பார்வையாளர்களின் பய உணர்ச்சிகளை அப்படியே ஒரு நிலையில் உறையவைத்திருக்க தவறவில்லை.

- லொகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியாலளர்கள்