திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ திரைப்படவிழாவில் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்திற்காக போட்டியிடும் படங்கள் பிரிவில் தெரிவாகியுள்ள சற்று வித்தியாசமான திரைப்படம் «12’000».

இத்திரைப்படம் போன்று புலனுகர்வின்பத்தை (Sensuality) காண்பிக்கும் திரைப்படம் வேறு எதுவும் இம்முறை  விழாவில் இருக்க முடியாது என எண்ணத் தோன்றும் படம்.

எழுத்தாளர் மற்றும் இயக்குனரான Nadège Trebal இன் முதல் முழுநீளத் திரைப்படம். அவரே பிரதான பெண் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை கடத்தி விற்கும் தொழில் செய்யும் ஃபிராங் அத்தொழிலை இழந்து எந்தவொரு வருமானமும் இன்றி தவிக்கும் போது, தனது காதலியின் (Maroussia) வருட வருமானமாக தான் நினைக்கும் 12’000 யூரோவை சம்பாதித்துவிட்டே அவளை மறுபடி சந்திப்பேன், திருமணம் செய்து கொள்வேன் என புறப்படுகிறார்.

அதுவரை அவர்கள் இருவரிடமும் இருந்த காதல், காமம் ஒட்டுறவு அனைத்துமே அதோடு கொஞ்ச நாட்களுக்கு விடுபட்டுப் போகிறது. ஒரு பெருநகர் வர்த்தக துறைமுகத்தில் வேலை கிடைத்ததாக நம்பி அங்கு செல்கிறார் ஃபிராங்க். அங்கு வேலை தனக்கு இல்லை எனத் தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்து, தான் ஏற்கனகவே கற்று வைத்திருக்கும் வித்தையான கடத்தல் வேலைகளை அங்கு சந்திக்கும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து நடத்துகிறார். தான் நினைத்த பணத்தை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார். ஒரு சில மாதங்கள் கழித்து காதலியை பார்க்க வருகிறார். ஆனால் 24’000 யூரோவுடன். "12’000 யூரோவுடன் தானே வருகிறாய் என்றாய், எப்படி 24’000 யூரோ? என்னால் ஏற்க முடியாது. உன்னை நம்பவும் முடியாது நீ ஏதோ தப்பு செய்தே இதை சம்பாதித்திருக்கிறாய்.  நீ என்னுடம் திரும்பி வர நினைத்தால் இப்பணம் உன்னிடம் இருக்கக் கூடாது» என்கிறார் அவர் காதலி மரூயுசா.  ஃபிராங்க் அப்பணத்தை என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதி 10 நிமிடம்.

ஒரு பெண் நெறியாள்கையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் என்பதற்கு பல சந்தர்ப்பங்கள் மிக அழகாக எடுத்துக்காட்டியிருக்கும். அக்காதல் ஜோடியிடம் இருக்கும் புனரின்பக் காட்சிகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவர்சியான காட்சிப்படுத்தல் இருக்காது, ஆனால் காமம் உணரப்படும். படத்தின் நகைச்சுவை, ஃபேண்டசி, நடனம் என அனைத்தும் கவிதையாக இருக்கும். அதே நேரம் திரைப்படத்தின் நேர்த்தியையும், நம்பகத்தன்மையையும் அவை சிதைக்கவில்லை. உண்மையில் 12’000 என்பது அவர்கள் காதலுக்கு கொடுக்கும் அழகான விலை.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்