திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்ணோ திரைப்படவிழாவின் சர்வதேச போட்டிப் பிரிவுக்கான நடுவர் குழுத் தலைவராக பொறுப்பேற்றிருப்பவர் Catherine Breillat. 

பிரெஞ்சு எழுத்தாளர், இயக்குனர், சமூகத்தின் Taboo க்கள் என சொல்லப்படும் விடயங்களை எப்போதும் தனது திரைப்படங்களில் மையக்கருவாக  கொண்டுவரத் தயங்காதவர். சினிமா உலகில் மிகவும் பரவலாக பாராட்டப்பட்ட, அடையாள மாதிரியாக பார்க்கப்படும் ஒரு அதிகாரபூர்வ குரல் அவர்.

1976 இல் அவர் இயக்கிய «A Real Young Girl» முதல் 2013 இல் வெளியான «Abuse of Wakness» வரை அனைத்தும் பெண்ணியத்தின் வழக்கமான சித்தரிப்புக்களை கேள்விக்குள்ளாக்குபவை.

Catherine Breillat இடம் «லொகார்னோ திரைப்பட விழா பெண் திரைக்கலைஞர்களின் திரைப்படங்களுக்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறதே. உலக பிரபல திரைப்பட விழாக்களின் இவ்வாறான மாற்றுச் சிந்தனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்» என ஊடக வியலாளர் ஒருவர் கேட்ட போது, «சினிமா என்பது ஒரு கலை வடிவம். அது அரசியல் ரீதியில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இது ஒரு அழகான சிறந்த திரைப்படமா, விறுவிறுப்பானதா என்பதை மாத்திரமே ஒரு சினிமா முடிவில் கேட்கப்போகிறோம்.

யார் ஒரு சினிமாவின் பின் இருக்கிறார்கள் என்பது அநாமதேயமானதகவே இருக்கவேண்டும். நான் சினிமாவை ஆதரிக்கிறேன். ஆனால் ஆண்,பெண் ஒதுக்கீடு ஒழுங்குமுறைகளையும் (Quota System) எதிர்க்கிறேன். சில வருடங்களுக்கு முன் பிரான்ஸின் அரச மாநில நிதி அமைப்பு ஒரு ஒழுங்கமைப்பைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மூன்று ஆண் இயக்குனர்களின் திரைப்படங்களுக்கும் ஒரு தடவை ஒரு பெண்ணின் திரைப்படத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். எனது நண்பரும், இயக்குனருமான கிரிஸ்டின் பஸ்காலும், நானும் ஒரே நேரத்தில் எமது திரைப்படத் திட்டங்களை சமர்ப்பித்தோம். இருவரும் பெண்கள். ஏதோ ஒருவரின் திரைப்படத்திற்கே நிதி கிடைக்கும் என எமக்கும் தெரிந்திருந்தது. இவ்வாறான ஒதுக்கிட்டு முறைகள் மீண்டும் எங்கோ ஒரு இடத்தில் சமநிலையை குழைக்கத்தான் போகின்றன என்றார்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்