திரைப்படவிழாக்கள்

இயக்குனரும் நடிகருமா வலெரி டொன்செலியின் (Vaoerie Donzelli), நோர்த் டாம் (Notre Dame) திரைப்படம் நேற்று லொகார்னோ திரைப்பட விழாவின் பியாற்சே கிராண்டே வெளியரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

இது ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படம். அண்மையில் தீ விபத்துக்குள்ளான பாரிஸின் பிரபல நினைவுச் சின்னமாகவும், பாரம்பரியத் தொன்மை வாய்ந்த புராதனச் சின்னமாகவும் கருதப்படும் தேவாலயமான Notre Dame பற்றியது. ஆனால் தீவிபத்துக்கு முன்னர் படம்பிடிக்கப்பட்டது. இப்படத்தை அலசுவதற்கு முன்னர் நோர்த் டேம் தேவாலயம் குறித்த இவ்வரலாற்றுக் குறிப்பு அவசியமானது.

நோர்த் டெம் தேவாலாயம் பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப் பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். பிரெஞ்சு கோதிக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக காண்பிக்கப்படும் இத்தேவாலயம், கி.பி 1163 ம் ஆண்டு கட்டப்பட்டது.  பிரெஞ்சு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோர்த் டேம் தேவாயலத்திற்கு இப்படி பல சிறப்ப்பு வாய்ந்த வரலாற்று ஞாபகங்கள் இருக்கும் போதும், இத்திரைப்படம் நையாண்டியாக விமர்சிப்பது இன்னுமொரு விடயம்.

நோர்த்டேம் தேவாலய வளாகத்தை புதிதாக புதுப்பிப்பதற்கு கட்டிடக் கலை விற்பன்னர்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்படுகிறது. அதில் அதிஷ்டவசமாக, தற்செயலாக கலந்து கொண்டு வெற்றி பெறுகிறாள் படத்தின் கதாநாயகியும், கட்டிடக் கலைஞருமான மௌட்தேவாலய வளாகத்தை புதுப்பிக்க தனது சக ஆண் நண்பர்களுடன் அவர் பரிந்துரைக்கும் கட்டிட வடிவம், ஒரு ஆண்குறியை ஒத்திருப்பதாக (ஒத்திருப்பதால்), அவள் விமர்சிக்கப்படுகிறாள். பிரான்ஸ் முழுவதும் அவளுக்கு எதிர்ப்பு வலுக்கிறதுஒரு பெண் தனது 40 களில் எப்படி தன் தனிப்பட்ட வாழ்க்கையும், இவ்விமர்சனத்தையும் ஒருங்கே சமாளிப்பாள் என்பதே படம்.

குறும்புத்தனமும், மேச்சுரிட்டியும் கொண்ட இரு தனது இரு பிள்ளைகள், காதலித்து முடித்து பிரிந்து வாழும் கணவன், புதிதாக தான் காதல் செய்யும் ஊடகவியலாளன், இவை நடுவே தான் மூன்றாவது பிள்ளை ஒன்றை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் என அனைத்து முகங்களையும் ஒருங்கே காண்பிக்கிறாள் மௌட்.

இவை எல்லாவற்றையும் விட, தான் பரிந்துரைத்த நோர்த் டேம் வளாகத்தின் புதிய வடிவத்தை சரியென வாதிடுவதா, விட்டு ஒதுங்குவதா என தெரியாது தவிக்கும் மனப்பாங்குடனும் அவஸ்தைப்படுகிறாள்கிறிஸ்துமஸ்து தினமன்று 40 டிகிரியில் காயும் வெயில், ஏப்ரல் இளம் தளிர் காலத்தில் -40 டிகிரியில் நிலவும் கடும் குளிர் எனக் காட்சிக் கேளிக்கைகள் நீள்கின்றன. பாரீஸ் ஈஃபிள் கோபுரத்தையும் கட்ட முன்னர் தான் இப்படித்தான் விமர்சித்தார்கள். இப்போது ஏற்றுக் கொள்ளவில்லையா இது ஒரு முன்நவீனத்துவ கலை வடிவம் மாத்திரமே. அதனை வேறுமாதிரி பார்ப்பது இந்த ஆண் ஆதிக்க சமூகத்தின் வேலை என விமர்சிக்கும் மறுவாதத்துடன்  மக்கள் எதிர்ப்பை சமாளிக்கப்பார்க்கிறது மௌட்டின் கட்டிட நிபுணர் குழு.

ஆண் குறி வடிவ கட்டிட வரைபினை, மிகப் பிரமாண்டமாக  Virtual Reality தொழில்நுட்பத்தில் 3டி கண்ணாடியில் காண்பிப்பது, கையாளாகத கணவனை வீட்டைவிட்டு துரத்தவும் முடியாமல், சேர்க்கவும் முடியாமல் மௌட் தவிப்பது என  அனைத்துமே நகைச்சுவை கலந்த ஆனால், சமூகத்தின் போக்கு இப்படித்தான் என தோலுரித்துக் காட்டும் நையாண்டி துணுக்குகள்«நோர்த் டேம் தேவாலயத்தில் படம் பிடிக்கவே முடியாது என ஒரு முன் கற்பனையுடன் இதுவரை சினிமா உலகில் எவருமே இத்தேவாலய கமிட்டியிடம் அனுமதி கேட்டிருக்கவில்லை. நாங்கள் தான் முதலாவதாக கேட்டிருக்கிறோம்» என்கிறார் படத்தின் இயக்குனர் வலெரி டொன்செலி.

"நோர்த் டேம் தேவாலயம் தீப்பற்றி எரிகிறது எனக் கேள்விப்பட்ட போது அதிர்ந்து போனேன். எனது படத்தின் நிலை என்னவாகும் என்பதும் எனக்கு கேள்விக்குறியாகவே இருந்தது. ஏனெனில் நோர்த்டேம் பற்றி நையாண்டியாக, நகைச்சுவையாக விமர்சிக்கும் படம் இது.லொகார்னோ திரைப்பட விழாக் குழுவினர்  இத்திரைப்படத்தை காண்பிக்க முடிவு செய்த போது எனது திரைப்படம் சரியான இடத்தில் பிரசவிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதனை உணர்ந்தேன்" என பரவசப்படுகிறார் வலெரி. அவர் தான் படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

«என்னைப் பொருத்தவரை வாழ்க்கையில் எனக்கு முக்கியமானது, வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிப்பது. எனக்கு வாழ்க்கையை சித்திரவதைப்படுத்துவது பிடிக்காது. அதை காண்பிக்க என்னால் முடியாது. இத்திரைப்படம் நோர்த் டேம் பற்றியதல்ல. பல்வேறு மனித உணர்ச்சிகளை பற்றியது. இத்திரைப்படத்தில் நான் காண்பிக்க முனைந்தது, படத்தின் கதாநாயகி, தன்னை மீறிய ஒரு விடயத்தை செய்கிறாள். செய்ய வைக்கப்படுகிறாள். விமர்சிக்கப்படுகிறாள். அந்த விமர்சனமே, அவள் அனைத்திலிரும் இருந்து தனது தனிப்பட்ட வாழ்வின் இருப்பையும்  சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள உதவுகிறது. ஒன்றில் வெற்றி பெற, இன்னொன்றில் தோல்வி பெறவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். தனக்கான சிறிய சுதந்திர உலகில் தான் மறுபடி வாழ்க்கையை தொடங்க அவளுக்கு இத்தோல்வி உதவி செய்கிறது. அவள் தனது வேலையை இழக்கிறாள். வருமானத்தை இழக்கிறாள். ஆனால் தனது சுதந்திரத்தை வெற்றி கொள்கிறாள். அதையே படத்தில் காண்பிக்க நினைத்தேன்» எனவும் சொல்கிறார் வலெரி.

இதே நோர்த் டேம் திரைப்படம், தமிழில் அல்லது ஒரு இந்திய மொழிவில், இந்திய புராதன மத ஆலயம் ஒன்றைச் சார்ந்து வெளிவந்தால், இந்நேரம் நோர்த் டேம் எரிந்தது போல் நோர்த் டேம் தழுவல்  திரைப்படமும் எரிந்து போயிருக்கும்.  இப்படம் நேற்று பியாற்சே கிராண்டே திறந்த வெளி அரங்கில் முடிவடைந்த போது, மக்களின் கரகோசத்தையும், புன்னகையும் கேட்க முடிந்தது.  கலைப் பார்வையில் எதனையும் பார்க்கலாம், விமர்சிக்கலாம் எனும் பக்குவம் ஐரோப்பியச் சமூகத்திடம் கொஞ்சம் அதிகமாகவே மேம்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.

 

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியலாளர்கள்