திரைப்படவிழாக்கள்

வழியில் போகிறவர்கள் மூத்திரம் போவதற்குப் பயன்படுத்தும் சந்துக் கட்டடத்தின் அடித்தள வீட்டில் குடியிருக்கிறது ஒரு குடும்பம். அந்த நாற்றம் போலவே அவர்களைத் தொற்றியிருப்பது வறுமை. வசதியான வீட்டில் வாழவேண்டும் என்ற நியாயமான ஏக்கம் அவர்களை நியாயமற்ற வழிகளில் இறக்கிவிடுகிறது.

ஒரு பணக்காரக் குடும்பத்தின் பெரிய வீட்டிற்குள் தாங்கள் ஒரே குடும்பம் என்பதை மறைத்து ஓட்டுநராக, வீட்டுப் பராமரிப்பாளராக, ஆங்கில ஆசிரியராக, சிறுவனைக் கவனித்துக்கொள்கிறவராக நுழைகிறார்கள். அந்த வீட்டிலும் ஒரு ரகசிய அடித்தளம். அது அந்த வீட்டை வாங்கியிருக்கிற புதிய உரிமையாளர்களுக்கே தெரியாது.

பணக்காரக் குடும்பம் ஒரு சுற்றுலாவுக்குக் கிளம்ப, இவர்கள் தங்களது சொந்த வீடு போலவே அனுபவிக்கிறார்கள். இவர்களுடைய பொய்யால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பெண் இரவில் கதவுமணியை ஒலித்து, அடித்தளத்தில் விட்டுப்போன ஒரு பொருளை எடுத்துப் போக அனுமதி கேட்க, அங்கே இரண்டு ஆண்டுகளாக அவளுடைய கணவன் தலைமறைவாக இருப்பது தெரியவருகிறது.

அதற்கான காரணம் சமூகப் பொருளாதாரத்தின் இன்னொரு கோரம். வாக்குவாதத்தில் இந்தக் குடும்பத்தினரின் பொய் அம்பலமாகிறது. மிரட்டலும் சண்டையும் தொடங்குகிறபோது திடீரென வரும் மழையோடு திடீர்த் திருப்பங்களும் வருகின்றன…

எல்லோரும் பார்க்க வேண்டியதாக எண்ணுகிற ஒரு நல்ல சினிமாவின் கதையை இதற்கு மேல் காட்சிக்குக் காட்சி சித்தரிப்பது ஒரு விமர்சனக் குற்றம். அதை நான் செய்ய மாட்டேன்.

ஆஸ்கர் வரலாற்றிலேயே அமெரிக்காவில் உருவாகாத, வேறு மொழித் தயாரிப்பு ஒன்றிற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என்கிறார்கள். சிறந்த இயக்குநர், சிறந்த உலகளாவிய கதைப் படம், சிறந்த மூலத் திரைக்கதை ஆகியவற்றுக்கான ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது என்று அறிய விரும்பியவனுக்கு நிறைய இருப்பதைக் காட்டியது அமேசான் பிரைம் வழியே வீட்டுத் தொலைக்காட்சித் திரைக்கு வந்திருக்கிற ‘பாரசைட்’.

முதலாளித்துவம் கோலோச்சும் தென்கொரியாவில் உருவான இந்தப் படம் குற்றங்களின் ஊற்று சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்றால், அந்த ஏற்றத்தாழ்வுகள் முதலாளித்துவ உற்பத்தியே என்று உணர்த்துகிறது. ஏழைகளுக்கு முதலாளித்துவம் செய்கிற மிகப்பெரும் கொடுமை அவர்களைப் பொய் சொல்ல வைப்பதுதான்.

கமிலே (Camille) நீ இறந்திருக்கக் கூடாது !

சான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்

வடகொரியா, அணுகுண்டு என்று திரும்பத்திரும்பச் சொல்லி மூளைகளில் திணிக்கப்பட்டுள்ள பீதி / பகை அரசியல் வசனமாகவும், பணக்கார வீட்டு அடித்தளமாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. குடும்பத்திற்கு வளங்களைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை ஏற்றப்பட்டு வீட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு கருங்கல் இறுதியாக எங்கே வைக்கப்படுகிறது என்பதிலும் ஒரு முற்போக்கான சிந்தனை.

ஊருக்குப் பொதுவாகப் பெய்யும் ஒரே மழை – ஆனால் இரு வேறு வீட்டாருக்கு இரு வேறு விளைவுகள். பணக்காரர்களுக்கு அது பாலியல் உறவுத் தூண்டல். ஏழைகளுக்கு அது தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழையும் மழை நீரோடு, கழிப்பறை பொங்கி வழிவதால் கலக்கும் கழிவு நீரையும் தடுக்கிற போராட்டம்.

மழை ஓய்ந்த பின் பணக்கார வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் விருந்துக்கு வழக்கம் போல வேலைக்கு வருகிறவர்களாகச் செல்கிறார்கள். அங்கே கொண்டாட்டப் பூச்சிதறல்களோடு இணைகிறது குருதிச் சிதறல்…

That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம் !

பதின்மவயதினரின் தொழில்பயிற்சிக்கல்வி சார்ந்து இரு சினிமா திரைப்படங்கள்

படம் பார்ப்போர் மனங்களில் ஒரு உறைதலை ஏற்படுத்துவதோடு, படம் எடுப்போருக்கான ஒரு படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது ‘பாரசைட்’. சமூக மாற்றத்திற்கான படைப்பு எப்படி கலையாகச் செதுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு களச்சான்றாக நிற்கிறது. படத்தில் ஒரு இடத்தில் கூட நேரடியாக முதலாளித்துவ எதிர்ப்பு வசனங்கள் இல்லை. மாற்றம் பற்றிய சொற்பொழிவுகள் இல்லை.

இயக்குநரின் கற்பனையை நிகழ்வாக்கியிருக்கிறார்கள் சாங் காங் ஹோ, லீ சுன் க்யூன், சோ யீயோ ஜியாங், சாவோய் வூ ஷிக், பார்க் ஸோ டேம், லீ ஜூங் ஈயூன், ஜேங் ஹை ஜின் ஆகிய நடிப்புக் கலைஞர்கள். (நமக்கு அறிமுகமாகாத கலைஞர்கள்தான், ஆனாலும் அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு மரியாதை செலுத்த விரும்பினேன்.)

உயிரோட்டமான ஒளிப்பதிவு (ஹாங் கியூங் பியோ), உணர்வை மீட்டும் இசை (ஜூங் ஜே இல்), கவனத்தை ஒருங்கிணைக்கும் தொகுப்பு (யாங் ஜின் மோ) என்ற துணைகளோடு ஒரு சிறந்த சினிமாவைத் தந்திருக்கிறார் இயக்குநர் போங் ஜூன் ஹோ. உலகம் முழுவதும் பேசப்பட வேண்டிய உள்ளடக்கம் என்பதால் இதுவோர் உலக சினிமா எனத் தயக்கமின்றி மதிப்பிடலாம்.

போங் ஜூன் ஹோ தனது சுதந்திரமான கருத்துகளுக்காக ஒரு கட்டத்தில் தென்கொரிய அரசால் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர். அதில் சேர்க்கப்படும் கலை இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்களுக்கு அரசாங்க நிதியுதவி கிடைக்காது. தென்கொரியாவின் அன்றைய அரசுத் தலைவர் பார்க் கியேன் ஹை நாடாளுமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, பதவியிலிருந்து அகற்றப்பட்டார் - அதற்கு இந்தக் கறுப்புப் பட்டியல் நடவடிக்கையும் ஒரு காரணம்.

பாரசைட் என்றால் ஒட்டுண்ணி. படம் யாரை அப்படிச் சொல்கிறது? இது பற்றிய விவாதத்தைக் கிளப்புவது ஒரு முக்கியமான வெற்றி. கழிவு நீர் ஆக்கிரமிக்கும் வீடுகள் முதல், நாற்றத்தை மறைக்கும் நறுமண விருந்துகள் வரையில் நமது நாட்டிலும் அனுபவமாகிற காட்சிகள் என்பதால் படத்தோடு கூடுதலாக ஒன்றிப்போகிறோம்.

- மூத்த பத்திரிகையாளர், விமர்சகர் குமரேசன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.