திரைப்படவிழாக்கள்

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் மிக முக்கிய  சர்வதேச திரைப்பட விழா லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவாகும். அமெரிக்காவின் ஆஸ்கார், பிரான்சின் கேன்ஸ், இத்தாலியின் வெனிஸ், ஜேர்மனியின் பேர்ளின், திரைப்படவிழாக்களுக்கு இணையாக நடாத்தப்படும் இத் திரைப்படவிழா, ஏனைய சர்வதேச திரைப்பட விழாக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்துவமாக விளங்குவதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சினிமாவில் மாற்றுச் சிந்தனைகளுக்கான தளம், புதியவர்களுக்கான களம், என்பவற்றோடு, பியாற்சா கிரான்டே எனும் பெருமுற்றப் பிரமாண்டத் திறந்தவெளித் திரை என்பதுவும் இச் சர்வதேசத் திரைப்படவிழாவின் தனிச் சிறப்பு.

இவ்வாறான பெருமைகள் கொண்ட இத் திரைப்படவிழாவின் 67வது தொடர் ஆகஸ்ட் 06 (இன்று) ஆரம்பமாகிறது. இன்றைய ஆரம்ப நிகழ்வுகள் இரவு 09 மணிக்கு பியாற்சா கிராண்டே பெருமுற்றத்தில் நடைபெறவுள்ளன. ஆயினும் காலை முதலே பத்திரிகையாளர்கள் காட்சி, சந்திப்பு என்பவை ஆரம்பமாகிவிடுகின்றன.

பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இச் சர்வதேச விழாப் படக்காட்சிகள், திரைப்படங்கள் தொடர்பான உரையாடல்கள், பத்திரிகையாளர் சந்திப்புக்கள் என பத்துத் தினங்கள், புதிய சினிமாவின் தரிசனங்கள் நிறைந்திருக்கும். இவ்வாண்டு மக்கள் கலைஞனான சார்லிசப்ளின் நூற்றாண்டாகும். அதனைச் சிறப்பிக்கும் வகையில், 1936ல் வெளிவந்த சார்லிசப்ளினின்  Modern Times  திரைப்படம், மாலை 4.00 மணிக்கு, Auditorium FEVI அரங்கத்தில் காட்சிப்படுத்தப்படவிருக்கிறது. மேலும் இக்காட்சியின் போது, Orchestra della Svizzera italiana இசைக்குழுவினர் நேரடி இசைக்கோப்புச் செய்து சிறப்பிக்கவுள்ளனர்.

இரவு 9.00 மணிக்கு ஆரம்பமாகும் பெருமுற்ற ஆரம்ப நிகழ்வுகளின் போது, சிறப்பு விருந்தினர்கள், மற்றும் நடுவர்கள், மதிப்பளிக்கப்படுவார்கள். தொடர்ந்து பெருமுற்றத்தின் பிரமாண்டத் திரையில், பிரெஞ்சு இயக்குனர் Luc Besson னின் இவ்வாண்டுப் படைப்பான Lucy முதல் திரையிடலாக காட்சிக்கு வருகிறது. பியாற்சா கிரான்டே பெருந்திரையின் முதற்காட்சி எப்பொழுதும் அமர்க்களமாக இருக்கும். அது இம்முறையும் பொய்த்துப் போகாது என்பதாக உணர்த்துகிறது Lucy திரைப்படத்தின் முன்னோட்டம்.

இச் சர்வதேச திரைப்படவிழாவில் கடந்த நான்கு வருடங்களாக அதிகாரபூர்வ ஊடக அனுமதியோடு உங்கள் 4தமிழ்மீடியா செய்தியாளர்கள் கலந்துகொண்டு, விழாவின் செய்திகளையும், படங்கள் குறித்த பார்வைகளையும், காட்சிகளையும், தொகுத்துத் தந்திருக்கின்றார்கள். இந்த ஆண்டில் மேலும் சிறப்பாகத் தரவேண்டும் என்ற விருப்பத்தோடு லோகார்ணோ பயணமாகியுள்ள நமது சிறப்புச் செய்தியாளர்களின் தொகுப்புக்களைத் தொடரந்து இந்தப் பகுதியில் நீங்கள் வாசித்து மகிழலாம். இம்முறை முடிந்தவரை சிறப்புக் காணொளித் தொகுப்புக்களை 'தமிழி' தொலைக்காட்சியினூடும் நீங்கள் கண்டு மகிழலாம் என்பதையும் மகிழ்ச்சியேடு அறியத் தருகின்றோம்.