திரைப்படவிழாக்கள்

சினிமாவை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தை  நிறைந்திருக்க, அமர்க்களமாக ஆரம்பமானது 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா.

பெருமிதமும், பெருமகிழ்வும், நிறைந்திருக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் தலைவர் மார்க்கோ சொலாரி ( Marco Solari ), திரண்டிருந்த ஆர்வலர்களை, பெருமுற்றத்தின் பேரரங்கிலிருந்து வரவேற்று, லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா தனக்கே உரித்தான தனித்துவத்துடனும், படைப்பாக்கச் சுதந்திரத்துடனும் தொடரும் எனக் குறிப்பிட்டு விழாவினைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அதற்கு முன்னதாக  4.00 மணிக்கு ஆடிட்டோரியம்பேவி( Auditorium FEVI) அரங்கில், சார்லி சப்ளின் நூற்றாண்டினையொட்டிய சிறப்புக் காட்சியாக அவரது Modern Times  திரைப்படம் திரையிடப்பட்டது. சினிமாவின் தொடக்க காலத்தில், வெண்திரையில்  அசையும் காட்சிகளுக்கு, திரைக்கு முன்னாலிருந்து இசைக் கலைஞர்கள் இசைவழங்குவது நடைமுறை என்பதை அறிந்திருந்த போதும்,  அதை அனுபவம் நேரில் கிடைத்ததில்லை. இச் சிறப்புக் காட்சியின் போது, அரங்கின் திரையில் காட்சிகள் நகர, அதற்கான பின்னணி இசைக்கோப்பினை மிக நேர்த்தியாகவும் நேரடியாகவும், சுவிஸ் இத்தாலியானா ஆர்க்கேஸ்ட;ரா Orchestra della Svizzera italiana diretta da Philippe Béran  இசைக் கலைஞர்கள் இசைக்க, மிக நல்ல அனுபவமாகவும், ரசிப்புக்குரியதாகவுமிருந்தது.

ஒரு கட்டத்தில் திரைக்கு முன்னாலிருந்து கலைஞர்கள் இசைக் கோர்வை செய்கின்றார்கள் என்பதே மறந்து போகும் அளவுக்கு அவர்களது பணி நேர்த்தியாகவிருந்தது.  காட்சியின் நிறைவில், அரங்கிலிருந்த பார்வையாளர்கள், தங்கள் கரவொலி மூலம் அதனைக் கௌரவித்தார்கள்.

மாலை7.00 மணிக்கு, சினிமா கருத்துக்களம் பகுதியில் (Spazio Cinema - Forum), பியாற்சா கிரான்டே பெருந்திரையின் தொடக்க நாள் படமாகக் காண்பிக்கப்பட்ட லூஸி (Lucy) படத்தின் இயக்குனர் லுக் பெசன் (Luc Besson) அவர்களுடனான உரையாடல் இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த உரையாடலில், அவரது படைப்புக்கள் குறித்தும், குறிப்பாக லூஸி திரைப்படம் குறித்தும் பல்வேறு கேள்விகளை ஆர்வலர்களும் பத்திரிகையாளர்களும் கேட்க, அவரும் விரிவாகப் பதிலளித்தார்.

9.30 மணிக்கே பியாற்சா கிரான்டேயில் ஆரம்ப நிகழ்வுகள் என்ற போதும், 8.00 மணிக்கே பெருமுற்றம் நிரம்பத் தொடங்கிவிட்டது. லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் கலை இயக்குனர் கார்லோ சத்ரியான் (Carlo Chatrian )  திரைப்பட விழாவிற்கான படங்களைத் தெரிவு செய்த தனது குழுவினரையும், நடுவர்களையும், அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, 70 வயதான பிரபல பிரெஞ் நடிகர் ஜென் பீற்றர் (Jean-Pierre Léaud ) அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவம் வழங்கப்பட்டது.

பின்னதாக 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் பியாற்சா கிரான்டேயின் முதற் காட்சியாக, லுக் பெசனின் லூஸி (Lucy)  திரையிடப்பட்டது.

போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றிடம் சிக்கும் மாணவி ஒருத்தி எவ்வாறு மகாசக்தியாகி, அவர்களை அழிக்கின்றாள் என்பதுதான் கதை. ஒரு ஆக்‌ஷன் மற்றும் சயன்ஸ் பிக்‌ஷன் படைப்பாக வெளிவந்திருக்கும் இத் திரைப்படத்தில் அட்டகாசமான நாயகியாக வரும் ஸ்கார்லெற் ஜோன்சன் (Scarlett Johansson) லுக்பெசனின் லூஸி எனும் கற்பனைப் பாத்திரத்தை அதகளப்படுத்தியிருக்கின்றார் ( இப் படம் குறித்த விரிவான பார்வை, மற்றும் இயக்குனரது கருத்துக்களுடனான ஒப்பிடுகள் குறித்து பின்னொருமுறை விரிவாகப் பேசலாம்) என்பதை மட்டும் இங்கு குறிப்பிட்டு, இன்றைய நிகழ்வுகளுக்குச் செல்கின்றோம்...

 

-4தமிழ்மீடியாவிற்காக: லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்.

Photos: Kirthana