திரைப்படவிழாக்கள்

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் நேற்றைய 4வது நாள் காட்சிகளில் Fernard Melgar இன் l'Abri (Inside or Out) திரைப்படம் காணக்கிடைத்தது. 

சுவிற்சர்லாந்தில் அகதிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து 2008 இல் இவர் எடுத்த ஆவணத்திரைப்படம் 'La Forteresse" அவ்வருடத்திற்கான லொகார்னோ தங்கச்சிறுத்தை (Léopard d'Or)  விருதையும், 2011 இல் இவர் லொகார்னோவுக்கு கொண்டுவந்திருந்த "Vol Special" திரைப்படம் அவ்வருடத்திற்கான அதீத கவனம் பெற்ற சுவிஸ் திரைப்படமாகவும் மாறிப் போனதால் ஏற்கனவே லொகார்னோ ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தார் Fernard Melgar.

இதனால் இவரது புதிய படைப்பான l'Abri திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய சிறிதளவும் தவறவில்லை ஃபெர்னார்ட் மெல்கார். சுவிற்சர்லாந்தில் பனிகொட்டும் கடும் குளிர் காலத்தின் இரவு நாட்களில், தங்குவதற்கு வீடில்லாமல் அல்லற்படும் அகதிகள், அநாதரவானவர்கள், மற்றும் நாடோடிகளை, தனது சிறிய இரு கைகளால் அகல விரித்து அடைக்கலம் கொடுக்கிறது லௌசான் நகரில் உள்ள ஒரு நிலக் கீழ் தங்கும் விடுதி (Abri). குளிர் நிலவும் குறித்த ஆறு மாதக் காலத்தில் எப்படி இந்த விடுதி இரவு நேரங்களில் இயங்குகிறது. இதில் பணிபுரிபவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் எவை, விடுதியில் தங்குவதற்கு தினந்தோறும் வரும் புதியவர்களின் வாழ்க்கைப் பிண்ணனி என்ன? அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது. எப்படியாவது ஓர் இரவு இங்கு தங்கிவிட வேண்டும் என கடும் முயற்சி மேற்கொள்ளும் அநாதரவானர்கள் அதற்காக செய்யும் பிரயத்தனங்கள் எவ்வாறானவை என யதார்த்தற்கு மிக அண்மையில் இருந்து படம்பிடித்திருக்கிறார் மெல்கார்.

படம் தொடங்குவதற்கு முன்னர் மெல்காருக்கு பேசக் கிடைத்த போது, "எனது பெற்றோருடன் சிறுவயதில் நானும் வேறொரு நாட்டவனாகவே இங்கு வந்தேன். வரவேற்ற நாட்டை மறக்கமாட்டேன். ஆனால் எங்கிருந்து வந்தேன் என்பதனையும் என்னால் மறக்கமுடியாது. என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் இந்நாடு, எனக்கு சில காயங்களையும் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக முறையான விசா எதுவும் இன்றி வாழ்ந்து வரும் எண்ணற்றவர்களின் பிள்ளைகள் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பள்ளிகளில், அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளது சுவிற்சர்லாந்து அரசு. இது என்னைக் காயப்படுத்துகிறது.

சிரியாவிலிருந்து அகதியாக வெளியேறிய கர்ப்பிணிப் பெண், சுவிற்சர்லாந்தின் ஊடாக இத்தாலி செல்ல முனைந்த போது, சுவிஸ் எல்லைக் காவல்துறையினரின் கெடுபிடியால் தனது குழந்தையை கருவிலேயே இழந்துவிட்டகொடுமை அண்மையில் நடந்தது. இது என்னை காயப்படுத்துகிறது என அவர் மேலும் சில உதாரணங்களை பட்டியலிட்ட போது, அவரது கோபம் நியாயமானே என  பறைசாற்றும் முகமாக அரங்கிலிருந்தவர்கள் மேற்கொண்ட கரகோசம் காதைப் பிளந்தது.

படத்தின் தொடக்கத்தில், "தனது சொந்த ஆபிரிக்க நாட்டுக்குத் திரும்பிச் செல்லவாவது மீண்டும் கைகளில் கொஞ்சம் பணம் வேண்டும் எனக் கருதி ஸ்பெயினிலிருந்து வேலைதேடி சுவிஸ் நோக்கி வந்த அகதி ஒருவனை கமேரா பின் தொடரும். தனது முயற்சியால் வேலை வாய்ப்பு ஒன்று அவனுக்கு கிடைத்திருக்கும். வேலை கொடுக்க ஒரு நிறுவனமும், அதன் தலைவரும் தயாராக இருப்பார். ஆனால் ஆறு மாதமாக காத்திருந்தும் சுவிஸ் அரசிடமிருந்து அவனுக்கான விசா அனுமதி கிடைக்கவில்லை. படத்தின் இறுதிக் காட்சியில் குறித்த ஆபிரிக்க நாட்டவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். இதுகுறித்து படம் முடிந்ததும் பெர்னார்ட் மெல்கார் ஊடக சந்திப்பில் இப்படி விளக்குகிறார்.

l'Abri (திரைப்படக் காட்சி)

"அப்துல்லா எனும் அந்த ஆபிரிக்கனுக்கு எதிர்பாராதவிதமாக வந்த தொலைபேசி அழைப்பு அது. உடனடியாக அதை நேரடியாக படம்பிடிக்கத் தொடங்கினோம். எனது சக தோழி, ஆடியோவை பதிவு செய்து கொண்டிருந்தாள் என்பதனால் தொலைபேசியில் பேசிய குரல் எனக்கு கேட்டிருக்கவில்லை.  நான் கெமராவுடன் அவனது முக அசைவுகளை பதிவு செய்து கொண்டிருந்தேன். தொலைபேசியில் பேசி முடிக்கும் வரை அவன் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு சுவிஸ் அரசிடமிருந்து விசா அனுமதி கிடைத்துவிட்டது போலும். ஒரு வழியாக படத்தை ஒரு மகிழ்ச்சித் தருணத்துடன் முடிக்கலாம் என எண்ணியபடி எனது தோழியை பார்த்தேன். அவள் காதில் மாட்டியிருந்த ஹெட்போனைக் கழற்றிவிட்டு, சோகமாக தலையசைத்தாள். அப்போது தான் உணர்ந்து கொண்டேன். ஆபிரிக்கர்கள் சோகத்தில் கூட புன்னகைத்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர்கள் என்பதனை. "

ஆம், அந்த ஆபிரிக்க இளைனுக்கு விசா மறுக்கப்பட்டது. சரியாக கோடை காலமும் தொடங்கிய நேரம் அது. இனிமேல் இரவு குளிரில் தங்குவதற்கு l'Abri தேவைப்படாது என்பதனால் அதுவும் மூடப்படுகிறது. ஆறுமாதம் கடும்குளிரில் தவம் கிடந்து விசாவுக்காக காத்திருக்க இறுதியில் பாதகமான பதில்.  தான் அடுத்து என்ன செய்வதென்பது தெரியாமல் தலையை தொங்கிய படி நடந்து செல்கிறான் அந்த ஆபிரிக்க இளைஞன். அதோடு படம் முடிவடைகிறது.

அகதிகள், வெளிநாட்டவர்கள் சுவிற்சர்லாந்துக்குள் பிரவேசிக்கும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி இறுக்குவதற்கு சுவிஸ் அரசும், அதன் ஒரு பகுதி மக்களும் தொடர்ந்து வாக்கெடுப்பு மூலம் சட்டங்களை நிறைவேற்றிவரும் நிலையில் இந்த l'Abri திரைப்படம் சுவிஸ் மக்களால் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படமாகும்.

ஊடகச் சந்திப்பில் மெல்காரிடம் இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி. "ஒரு சினிமா, ஒரு திரைப்படம் இந்த உலகத்தை மாற்றமுடியுமா?", அதற்கு அவர் கமல்ஹாசன் மாதிரியே ஒரு பதிலைக் கூறியிருந்தார். 'அப்படி மாற்றமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்". "ஒரு சினிமா உலகை மாற்றமுடியும் என சொல்வதற்கு நான் ஏமாளி அல்ல. ஆனால் சினிமாவுக்கு சக்தி அதிகம்".  ஒரு பிரச்சினைக்கான தீர்வையோ, பதிலையோ தரமுடியாவிட்டாலும், அப்பிரச்சினை குறித்த கேள்வியையாவது உருவாக்கிவிட முடியும். விவாதத்திற்கான கதவுகளை திறந்து விட முடியாவிட்டாலும், ஜன்னல்களையாவது திறந்துவிட முடியும்".

- 4தமிழ்மீடியாவுக்காக: லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

Photos: Festival Press

67வது  லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் கடந்த மூன்று தினங்கள் முக்கியமான சினிமாக்களைக் காண முடிந்தது. அவை தந்த அனுபவங்களை தொடர்ந்து இங்கு பதிவு செய்வோம்...

 

 

கொரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் ஜூம் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பாக்யராஜின் மகனும் நடிருமான சாந்தனு உருப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டார். அது என்ன? கேள்வியையும் பதிலையும் தொடர்ந்து வாசியுங்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.