திரைப்படவிழாக்கள்

உலகில் சினிமா நலிவடைந்த நிலையில், வளர்ச்சிக்காக காத்திருக்கும் நாடுகளை இணம் கண்டு, அந்நாடுகளின் சினிமா படைப்புக்களுக்கு சர்வதேச ரீதியில் களம் கொடுத்தும், நிதி கொத்தும் வரும் லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா, இதற்காக உருவாக்கியதே Open Doors பகுதியாகும்.

இம்முறை Open Doors இல் துணை சஹாரா ஆபிரிக்க நாடுகள் (Sub-Saharan Africa) முன்னிலைப்படுத்தப்பட்டன. அதாவது, ஆங்கிலம், போர்த்துக்கல் மொழி பேசும் நாடுகள் அனுப்பிய 190 படைப்புக்களில் 12 தெரிவுசெய்யப்பட்ட படைப்புக்கள் காட்சிக்கு வந்தன.

அங்கோலா, தென் ஆபிரிக்கா, எதியோப்பியா, மொசம்பிக், உகண்டா, சாம்பியா மற்றும் கானாவைச் சேர்ந்தன இப்படைப்புக்கள். இப்படைப்புக்களில் வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கான விருதுகள் நேற்று முன் தினம், லொகார்னோ திரைப்பட விழாவின் ஃபோரம் பகுதியில் கௌரவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

I am not a Witch திரைப்படத்திற்கு பரிசு வாங்கும் Rugano Nyoni

இவற்றில் Rugano Nyoni எனும் இளம் பெண், தான் உருவாக்கிய முதல் திரைப்படமான I am not a Witch ற்கு மொத்தம் 26,000 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான இரு பரிசுக்கள் கிடைத்தன. சாம்பியாவின் அகதிகள் முகாமில் இருக்கும் 9 வயதுப் பெண்ணைப் பற்றியது இத்திரைப்படம்.  இத்திரைப்படம் பிரான்ஸ்/சாம்பியா இணைந்த படைப்பாகும்.

Rugano Nyani

அதே போன்று போன்று மொசாம்பிக்/போர்த்துக்கல் இணைந்த படைப்பான Licinio De Azevedo இயக்கிய The Train of Salt and Sugar படத்திற்கும் 25,000 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான இரு விருதுகள் கிடைத்தன.  மொசாம்பிக்கின் சிவில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடந்த கதையை திரைப்படமாக்கியிருப்பார்கள். நாம்புலா - மலாவி ஆகியவற்றை இணைக்கும் ரயில் ஒன்றில், பயணிக்கும் பல நூற்றுக் கணக்கான மக்கள் தமது உயிரைப் பணயம் வைத்த படி அப்பயணத்தை கடந்து முடித்திருப்பார்கள்.

The Salt and Sugar and the Train படத்தை இயக்கிய Licinio De Azevedo மற்றும் குழுவினர்.

இவ்விழாவில், அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட இயக்குனர் Teboho Edkins இயக்கிய Faraway Friends திரைப்படம், 11,000 அமெரிக்க டாலர் பெறுமதியான பரிசை வென்றது.

Fareaway திரைப்படத்தை இயக்கிய Teboho Edkins

 தென் ஆபிரிக்க இயக்குனர் Sibs Shongwe-La Mer இயக்கிய Territorial Pissings திரைப்படம், சிறப்புக் கவனத் திரைப்படமாக (Special Mention) தெரிவானது. 

ஜோஹன்னர்ஸ்பேர்கில் ஒரு இளம் பெண் தான் தற்கொலை செய்து கொள்வதை நேரடி ஒளிபரப்பாக இணையத்தில் வெளியிட்டதை கதைப் பிண்ணணியாக கொண்ட திரைப்படம் இது.


Territorial Pissings திரைப்படத்தை இயக்கிய Sibs Shongwe-La Mer

இத்திரைப்படங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையும், நிதி உதவியும், அத்திரைப்படங்கள் முழுமைபெற்று உலகம் முழுவதும் திரைக்கு கொண்டுவரப்பட நிச்சயம் உதவி செய்யக் கூடியன.இதேவேளை Open Doors பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சில ஆபிரிக்க குறுந்திரைப்படங்களை நேற்று சினிமா ரியால்டோ திரையரங்கில் பார்க்க கிடைத்தது. காட்சிக்கு வந்த 6 குறுந்திரைப்படங்களும், ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகளின் குறுந்திட்ட சினிமா நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் ஆகும்.

பொருளாதார வளம், சினிமாக் கல்வி வளம், மின்சாரம், தகவல்தொழில்நுட்ப வழங்கள் குறைவாக உள்ள போதும் ஆபிரிக்க சினிமா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை அக்குறுந்திரைப்படங்கள் பறைசாற்றின. குறிந்திரைபப்டங்களின் காட்சி முடிந்ததும் இடம்பெற்ற கேள்வி, பதில் நிகழ்வில், இம்மாற்று சினிமா குறுந்திரைப்படங்களுக்கு உங்களது ஆபிரிக்க நாடுகளில் மக்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மொசாம்பிக் நாட்டிலிருந்து பல குறுந்திரைப்படங்களை தயாரித்து அவற்றை ஊக்குவித்து வரும் தயாரிப்பாளர் பதில் அளிக்கையில், ஹாலிவூட் மற்றும் மேற்குலக சினிமாக்களின் தாக்கம் எமது மக்களையும் பீடித்திருக்கிறது. குறுந்திரைப்படங்கள் என்றதும் அவை மேற்குலக பேண்டசி திரைப்படங்களைப் போன்றோ காமர்ஷியல் கலவை கொண்டதாகவே எண்ணும் மக்களே பெரும்பாண்மையாக இருக்கிறார்கள். ஆனால் தமது ஊர்களை, தமது குக்கிராமங்களை, தமது மக்களை குறுந்திரைப்படங்கள் வாயிலாக முதன்முறையாக திரையில் காணும் போது அவர்கள் பூரிப்படைந்து போகிறார்கள். உண்மையான சினிமாக்களை நேசிப்பவர்களிடமிருந்தும் எமது குறுந்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்குறது என அவர் கூறினார்.

தென் ஆபிரிக்க குறுந்திரைப்பட இயக்குனர் பதில் அளிக்கையில், எமக்கான நிதியுதவி கொண்டு நாம் பிரமாண்ட திரைப்படங்களையோ, மிக நேர்த்தியான, உலகத் தரம் வாய்ந்த சினிமா படைப்புக்களையோ உருவாக்க எண்ணவில்லை. எமது முதல் அடிப்படை நோக்கம் பரீட்சார்த்த முயற்சி. எமது ஊர்களின், எமது கிராமங்களின் இயல்பான வாழ்க்கை நடைமுறைகள், கதைகளை பரீட்சார்த்தமாக முயற்சித்து பார்த்தலே. அதற்கு நிச்சயம் எமக்கு இப்போது வாய்ப்புத் தொடங்கியிருக்கிறத் உஎன்றார்.

உலகின் ஹாலிவூட் சினிமாவுக்கு அடுத்து மிகப்பெரும் சினிமா தொழில் துறை இயங்கும் நாடு நைஜீரியாவாகும். Nollywood என அழைக்கப்படும், நைஜீரியா சினிமா படைப்புக்கள் ஆபிரிக்காவின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி பார்க்கப்படுகின்றன. ஆனால் அவை ஆபிரிக்க கலைநயத்தை உண்மையாக பிரதிபலிக்கும் சினிமாவாக பெரும்பான்மையான நேரங்களில் இருப்பதில்லை.

அதாவது அமெரிக்காவின் ஹாலிவூட்டுக்கு அடுத்து உலகில் இரண்டாவது அதிக சினிமா படைப்புக்களை உற்பத்தி செய்கிறது நைஜீரியா.  வரிசைப்படுத்தினால், ஹாலிவூட், நாலிவூட், அதற்கடுத்தே இந்தியாவின் பாலிவூட் சினிமா வருகிறது என்பதும் நேற்றைய கருத்தரங்கில் கிடைத்த பிரமிப்பான தகவல்.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

Photos : Kirtena