திரைப்படவிழாக்கள்

சிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம்.  நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில்,  முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.

சிறப்பு அதிதிகளுக்கான செங்கம்பள வரவேற்புக்  கோலகலங்களுடன் ஆரம்பமாகிய இத் திரைப்பட விழாவின் சம்பிரதாய ஆரம்ப நிகழ்வுகள் இரவு 09.30 மணிக்கு பெருமுற்றத்தில் இடம் பெற்றன. திரைப்படவிழாக் குழுவின் தலைவர் மார்க் சொலாரி அவர்களின் ஆரம்ப உரையினைத் தொடர்ந்து, கலை இயக்குனர் சத்திராயன் இம்முறை படத் தேர்வில் தன்னுடன் பணியாற்றியவர்களையும், திரைப்படவிழா நடுவர்களையும், அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து மேற்குலகின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவரான  எட்வார் நோர்ட்டனுக்கு( Edward Norton ) சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருதினைப் பெற்றுக்கொண்ட நோர்ட்டன். இந்தச் சிறப்புக்களையும், மிகப்பெரிய ரசிகர் குழாத்தினையும் பெற்றுக்கொள்ளக் காரணமான சினிமாவை நேசிப்பதாகக் கூறினார்.

பின்னதாக அமெரிக்க இயக்குனர் ஜோனத்தன் டெம்மே (Jonathan Demme ) அவர்களின் இயகத்தில் , மூன்று தடவை அக்கடமி அவார்ட் பெற்ற புகழ்மிகு நடிகை,  மேரி ஸ்றீப் ( Meryl Streep ) முக்கிய பாத்திரத்தில் நடித்த றிக்கி அன் த பிளாஸ் Ricki and the Flash  திரைப்படம் முதற்காட்சியாகத் திரையேறியது.

சிறந்த மேடைப்பாடகியாக வேண்டுமெனும் ஆசை கொண்ட ஒரு பாடகியின், உணர்வுகள், வலிகள், என்பவற்றைக் காட்சிப்படுத்தும் திரைக்கதை. அதை இசையும் வண்ணமுமாகத் திரையில் சொல்லியிருந்தார்கள். மேரி ஸ்றீப் தன்  இயல்பான நடிப்பில் றிக்கி கதாபாத்திரத்திற்குத் திரையில் உயிரூட்டினார் எனலாம்.

அக்கடமி அவார்ட் விருது பெற்ற  திரைக்கதாசிரியரான  Diablo Cody  யின் திரைக்கதையில்,  12  கோடி  அமெரிக்க டாலர் செலவில் உருவான இத்திரைப்படம், சோனியின் வெளியிடாக உலகெங்கும் 07.08.2015ல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

- லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்