திரைப்படவிழாக்கள்

ஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின்  Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந்தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கையின் வளர்ந்து வரும் மிக முக்கிய இளம் இயக்குனர்களில் ஒருவரான விமுக்தி ஜயசுந்தரவின் படைப்பு Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்). விமுக்தி ஜயசுந்தரவின்  புதிய திரைப்படமொன்று லொகார்னோ திரைப்பட விழாவின் சர்வதேச போட்டிக்கு தெரிவாகியிருக்கிறது எனத் தெரிந்ததுமே, தவறவிடாது பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியமைக்கு சிறிலங்காவிலிருந்து கலந்து கொள்ளும் படம் என்பதையம் தாண்டி, 2005ம் ஆண்டு வெளியான அவரது முதலாவது முழுநீளத் திரைப்படமான The Forsaken Land திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு காரணம் எனலாம்.

இலங்கையின் யுத்த பாதிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அத்திரைப்படம் சர்வதேச அரங்கில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான தங்கப் பனை விருது வென்றிருந்தது பல பேர் அறிந்திருக்கக் கூடும். Sulanga Gini Aran ( சுலங்க கினி அரன் )  திரைப்படமும் இருட்சித் திரைப்பட வகையைச் சேர்ந்தது தான் (Dark Films).

தான் யார் எனும் ஆன்மீகத் தேடலை நோக்கி துறவி வாழ்வைத் தொடங்கும் ஒரு இளம் பௌத்த துறவி,   மருத்துவராக வேண்டுமென்ற தனது இலட்சியத்திற்காக மரணத்தின் நுனி வரை வேண்டுமென்றே சென்று மீள விரும்பும் ஒரு மாணவன், தனது சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த கொழும்பின் வெப்பக் காற்றுக்குள் ஆட்சேர்த்துக் கொடுக்கும் ஒருவன், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை சட்டவிரோதமாகச் செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மருத்துவன், அவனுடைய வாகன ஓட்டுனர், என  கதாபாத்திரங்களின் செயல் நிலை, உளவியல் மனோ நிலை என்பவற்றைச் சுற்றியே படம் நகர்கிறது. அதிலும் குறிப்பாக, மலை, அருவி, ஆறு, நீர், காடு, இயற்கை என அமைதியை நோக்கித் தேடிச் செல்லும் இளம் பௌத்த துறவியின் வாழ்க்கைக்கும், இரத்தம், குரோதம், கோபம், கொடூரம், காமம், வன்மம், அச்சுறுத்தல் என வாழும் அம்மருத்துவனுக்கும் இடையில் உள்ள மனோநிலை வேறுபாட்டை மிக அழகாகவும், இயல்பாகவும், அதே சமயம் ஆழமாகவும் படம் எடுத்துக் காட்டுகிறது.

இயற்கை நீரோடை, மலைக்காற்று என்பவற்றின் ஊடாக நடக்கும் அந்த பௌத்த துறவியுடன் சேர்ந்து எம்மையும் அமைதியை ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறது திரைப்படத்தின் ஒரு பக்கப் பயணம். அறுவைச் சிகிச்சை செய்த கரங்களில் படிந்திருக்கும் இரத்த வாடையை ஆழமாக முகர்ந்து இன்பம் பெறுவதும், மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ண்ணை மயக்கமாக்கி வெறிதீர அனுபவித்துத் தீர்த்தபின்னர், அவள் உடல் மீது படுத்திருந்தவாறே கதறி அழுகின்ற மருத்துவனின் வக்கிர எண்ணத்தின் ஆழத்தையும்,  அதன் இயலாமைகளையும் பார்வையாளனுக்கு உணர்த்த முற்பட்டவாறு பயணிக்கிறது திரைப்படத்தின் மறுபக்கப் பயணம்.

"சிறிய அன்பளிப்பு " என சாராயப் போத்தலை மருத்துவனுக்கு வழங்கிய சிறுநீரகவியாபாரி, அதைத் திறந்து ஊற்றிக் கொடுத்த போது, அனுபவித்துக் குடித்துவிட்டு, " என்னை விலைக்கு வாங்கப் பார்க்கிறாயா? " அன அவ்வியாபாரியே அடித்துத் துவைத்தெடுக்கும் மருத்துவனும், அவ்வளவு அடியையும் வாங்கிக் கொண்ட பின்னரும், தானே காரில் மறுபடி அம்மருத்துவனை ஏற்றிச் செல்லும் அவ்வியாபாரியும், இலங்கையின் யதார்த்த சூழலுக்கு மிக அண்மையில் நிற்கிறார்கள்.

அம்மருத்துவன் குடித்துவிட்டு கடற்கரையில் விழுந்துகிடக்கும் போதும், கும்பல் ஒன்றால் துரத்தி அடிக்கப்பட்டு வீதியில் வீழ்ந்துகிடக்கும் போதும், ஒரு விசுவாச ஊழியனாக ஒவ்வொரு முறையும் அம்மருத்துவமனைத் தூக்கி காரில் போட்டு வீட்டுக்கு கொண்டு செல்லும் அவனது வாகன ஓட்டுனர், ஒரு சந்தர்ப்பத்தில், இந்த ஓட்டுனர் வேலையும் இல்லாமல் போனால் எனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு என்ன செய்வேன் என கடற்கரை அலைகளுக்கு நடுவில் கதறி கண்ணீரில் கலங்கும் போது, அதுவரை சூட்சுமமாக இருந்த அக்கதாபாத்திரத்தின் ஆளுமை எமக்குப் புரியத் தொடங்குகிறது.

இத்திரைப்பத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனோநிலையையும், விமுக்தி கட்டவிழ்க்கும் விதம் இதே பாணியில் தான். படத்தின் இறுதியில் அக்கொடூர மருத்துவன், தனக்கான உண்மையான மரணத்தைக் கூடப் பெற முடியாது,  பேயாக அக்காடுகளில் சுற்றித் திரிவதாகவும், அந்த இளம் பௌத்த துறவி, நிர்வாணத் துறவு நிலை பெற்று ஞான நிலையை அடைந்ததாகவும், கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும்  கிராம வாசிகள் நான்கு பேர்களில் ஒருவன் மற்றையவர்களுக்கு அக்கதை சொல்லிமுடிக்க படம் முடிவடைவதும்  சிங்கள மொழிப்படங்களுக்கே உரியத் திரைப்படப் பாணி எனலாம்.

இலங்கையின் கிராமக் கதைகளில் பேய், ஆவி, மர்மங்கள் எப்போதும் உயிர்ப்புடன் வலம் வந்துகொண்டிருப்பவை. அவை கிராம மக்களின் அதீத நம்பிக்கைக்குரியவையும் கூட.  அப்படியான ஊர்மக்களின் காதுவழிக் கதை ஒன்றில் வரும் இரு கதாபாத்திரங்கள் நிஜமாகவே பிறந்து வாழ்ந்து தமது வாழ்வின் முடிவில் (ஆவி / துறவி நிலையை அடைந்திருந்தால்), ஏன் இந்நிலைகளை அடைந்திருக்கலாம், அப்படி அவர்களது வாழ்வில் என்னென்ன நடைபெற்றிருக்கலாம் என்பதையே விமுக்தி தனது திரைகக்தையின் ஊடாக மிக மிக யதார்த்தத்திற்கு அண்மையில் இருந்து சொல்லத் துணிந்திருக்கிறார்.

மனிதக் குணாதியசங்களின் விசித்திரத்தை ஆழமாகத் தொடும் ஒரு திரைக்கதை, காட்சியாக வடிவமைக்கப்படும் போது, அக் கதையின் கதாபாத்திரங்களாக நடிக்கும் கலைஞர்கள் எந்தவொரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு  எல்லையையும் கடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பாரம்பரிய, கட்டுக்கோட்பான கலாச்சாரம் கொண்ட இலங்கையிலிருந்து, அவ்வாறான வெளிப்படையான காட்சிகளுடனான திரைப்படத்தை எதிர்பார்ப்பது மிகக் கடினமானது. Sulanga Gini Aran  அதையும் தாண்டிப் பயணிக்கிறது. அதனால் சாதரண பார்வையாளர்களினால் கடுமையான காட்சிகள் அதிகம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக இப்படத்திற்காக அக்கதாபாத்திரங்களாகவோ வாழ்ந்திருக்கும் அக்கலைஞர்களின் அர்ப்பணிப்பும், அதற்கான காலவிரயமும், மிக அற்புதமானதும், ஆச்சரியமானதும் கூட.  இப்படத்திற்கான தயாரிப்புக் காலம் ஆறு ஆண்டுகள் எனவும், பிரதான காதாபாத்திரத்தை கட்டமைத்துப் பயிற்றுவிக்க மட்டும் இரு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும், இயக்குனர் விமுக்தி ஜயசுந்தர இத் திரைப்பட விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாடும் போது, குறிப்பிட்டார்.

இவருடன் இப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் தனுஸ்கா குணதிலக குறிப்பிடுகையில், எப்பொழுதும் வெளிச்சம் அதிகமாகவுள்ள சிறிலங்காவில், இவ்வகையான திரைப்படங்களுக்கான ஒளியமைப்புச் சிரமத்தினையும், அதற்கான முயற்சிகளையும், விவரித்தார். ஒரு சர்வதேசத் திரைப்படவிழாவில், குறைந்த அளவிலான பொருட்செலவில், நிறைவான திரைப்படமொன்றினைப் பங்குகொள்ளச் செய்யமுடியும் என்பதை நிருபித்துள்ளார்கள் இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக, ஏனைய 19 நாடுகளின்   திரைப்படங்களுடன் போட்டியிடுகிறது விமுக்தியின்  "Sulanga Gini Aran - சுலங்க கினி அரன் ". போட்டியிடுவதற்கும், போட்டியில் வெற்றிபெறுவதற்கும், தகுதியான திரைப்படம் என்றே சொல்லலாம்.

- லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்