திரைப்படவிழாக்கள்

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் ஒரே ஒரு சுவிஸ் உள்ளூர் திரைப்படம் «Heimatland» (Wonderland / அதிசய நிலம்).

எப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்னர், Image Problem திரைப்படமும், கடந்த வருடம் Schweizer Helden திரைப்படமும் லொகார்னோவில் திரையிடப்பட்ட போது, சுவிஸ் தன்னத்தைத் தானே சுய விமர்சனம் (Self Criticism) செய்து கொள்ளும் திரைப்படங்கள் அவையென முத்திரை குத்தப்பட்டதோ, அதே பாணியில் மற்றுமொரு திரைப்படம் தான் Heimatland.

சுவிற்சர்லாந்தின் இயற்கை வனப்பு உலகத்தவர் எல்லோர்க்கும் வியப்பு, விருப்பு. கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலம் எனப்  பலரும் பாராட்டுகின்றார்கள். இந்த நிலத்தில் ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால்..? எனும் ஒரு ஒற்றைவரிச் சிந்தனையை, வெள்ளித் திரையில் Heimatland, (Wonderland - அதிசய நிலம் ) எனும் திரைப்படமாகச் சித்தரித்திருக்கிறார்கள் இளம் திரைச் சிற்பிகள்.

திடீரென ஒரு நாள், சுவிஸ் மலைப்பிரதேசங்களில் உருவாகும் பிரமாண்டமான முகில்கள், சுவிஸ் வான் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பார்ப்பதற்கு டோர்னார்டோ புயல் தோன்றும் போது வானம் எப்படி இருக்குமோ அது போன்று இருக்கிறது.

சுவிஸ் மக்களை மாத்திரமல்லாது, சுவிஸ் அரசையும் மெல்ல மெல்ல அச்சமடையச் செய்கிறது இத்திடீர் வான் முகில்கள். ஏன் இத்திடீர் காலநிலை மாற்றம், இது எந்த இயற்கை அனர்த்தத்தின் அறிகுறி எனத் தெரியாது தவிக்கும் அரச அதிகாரிகள், சுவிஸ் நாட்டில் அவசரகாலப் பிரகடனம் செய்கின்றனர்.

சுவிஸ் எல்லையைத் தாண்டிச் செல்லாது, சுவிஸ் நாட்டிற்குள் மாத்திரமே வான்பரப்பில் நிலைகொள்ளத் தொடங்கும் இப் பெருமுகில்களால் பதற்றமடையும் சுவிஸ் மக்கள், தம்மை நோக்கி வரவுள்ள மாபெரும் இயற்கை அனர்த்தத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன முடிவெடுக்கின்றனர்? அரசு என்ன செய்கிறது?, இப்பதற்றகாலத்தை தமக்குச் சாதகமாக எப்படி சிலர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்? என பல பல கோணங்களில் கதைக்களம் நகர்கிறது. படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுடன், எம்மையும் இருக்கை நுனிக்குத் தள்ளுகிறது அம்முகில்களின் பிரமாண்ட ஆக்கிரமிப்பினால் எழும் அச்சம்.

மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வீட்டுக் குழாய்களில் குடிநீர் தடைப்படுவதால், குடிநீர் போத்தல்களுக்கு திடீர் கிராக்கி ஏற்படுகிறது. அபாய எச்சரிக்கை நாடெங்கும் விடப்படுகிறது. பல சுவிஸ் பிரஜைகள் அகதி தஞ்சம் கோரி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி நாடுகளின் எல்லைக்கு படையெடுக்கின்றனர்.

சுவிஸின் மிகப்பிரதான பெரிய வர்த்தக நிறுவனங்களின் பலசரக்குப் பொருட்கள் அனைத்தும் சில மணிநேரங்களில் காலியாகின்றன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அவை மூடவும் படுகின்றன. பிற வெளிநாட்டவர்கள் நடத்தும் சிறிய பலரசக்கு வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படுகின்றன.

எம் வாழ்வின் இறுதித் தருணங்கள் இவை என, களியாட்டங்கள், மற்றும் பாலியல் இச்சைகளால் இன்பம் பெற அலைகிறது ஒரு கூட்டம். தம்மைச் சுவிஸ் நாட்டுப் பற்றாளர்கள் எனக் கூறிக்கொண்டு, சுவிஸிலிருந்து பயத்தில் வெளியேற நினைப்பவர்களை துரத்திப் பிடித்து வேட்டையாட, துப்பாக்கிகளுடன் விழித்துக் கொண்டிருக்கிறது இன்னுமொரு கூட்டம்.

பணத் தேவைக்காக, சுவிஸ் கோடீஸ்வரருடன், சமரசமாகி, அவரைத் தனது டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு சுவிஸ் எல்லையால் வெளியேற நினைக்கும் யூகொஸ்லாவிய பூர்வீகம் கொண்ட ஒருவனும், அவனது குடும்பமும் தமக்குள் தமது தாய் மொழியில் பேசிக் கொள்ளும் சம்பாஷனையும், அந்த சுவிஸ்காரருடன் ஜேர்மனிய மொழியில் முரண்படும் உரையாடல்களும், ஒரு ஆபத்தான நேரத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கவேண்டிய நிலையில் எப்படி  சுவிஸ் - வெளிநாட்டுக் காரர்களுக்கு இடையில் நேரடி விவாதம் அமைந்திருக்குமோ அதை அப்படியே பிரதிபலிக்கிறது. இவ்வாறான பல தனிப்பட்ட கதாபாத்திரங்களால் வடிவமைக்கப்பட்டு நகர்கிறது திரைக்கதை.

சுவிற்சர்லாந்தின் பத்து இளம்  இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய வித்தியாசமான இந்தக் கற்பனைக் கதை,  சுவிஸின் ஜேர்மனிய, பிரெஞ்சு மாநிலங்களைக்  கதைக் களமாகக்  கொண்டு செல்கிறது.

" சுவிற்சர்லாந்தில் அனைத்தும் பக்கா ஒழுங்கில் (Perfect) இருப்பதே நமக்கு அலுப்புத் தட்டுகிறது " என ஒரு சாரார் சொல்லிவருகின்றனர்.

" நிஜம் அப்படியல்ல. சுவிற்சர்லாந்து மாறிக் கொண்டுவருகிறது. தன் தனித்துவத்தை இழக்கத் தொடங்கிவிட்டது. சுவிஸ் மக்கள் தான் வெளிநாட்டவர்கள் போன்று உணரத் தொடங்கியிருக்கின்றனர்  " என மறுசாரார் கூறிவருகின்றனர்.

மாபெரும் இயற்கைப் பேரழிவொன்று, சுவிற்சர்லாந்துக்குள் நிகழ்ந்தால், சுவிஸ் மக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனரா?, ஏனைய ஐரோப்பிய நாடுகள் சுவிஸிற்கு உதவி செய்வதை எப்படிப் பார்க்கின்றன?. உண்மையில் சுவிஸ் தனிமைப்பட்டுள்ளதா, அல்லது  தனக்கான எல்லைகளுக்குள்,   தனித்துவமாக இருக்கும் நாடாக தன்னைத் தொடர்ந்தும்  தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என எல்லாவிதமான கேள்விகளையும் இத்திரைப்படத்தினூடாக எழுப்பியுள்ளோம். சம கால நோக்கில் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் முயற்சித்திருக்கின்றோம் என்கிறார் இத்திரைப்பட இயக்குனர்களில் ஒருவர்.

Heimatland : திரைப்படக் குழுவினர்

ஆனால் அப்பதிலை சுவிஸ் நாட்டவர்கள் அனைவரும் ஒரே கோணத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது, அத்திரைப்பட முடிவில் நடந்த திரைப்படக் குழுவுடனான ஊடகக் கலந்துரையாடலிலும், அதன் பின்னர் மறுநாள் சுவிஸ் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளிலிருந்தும் அறிய முடிகிறது.

இது ஒரு இடதுசாரிப் படம். சுவிற்சர்லாந்தை மேலும் அச்சத்திற்குள் தள்ளும் படம். சில காட்சிகள் வேண்டுமென்றே சுவிற்சர்லாந்தின் பாரம்பரியத்தை கேலி செய்கின்றன. வெளிநாட்டவர்கள், அகதிகள் என அனைவரையும் அரவணைத்து வரவேற்கும் சுவிற்சர்லாந்தை இவர்கள் காண்பிக்கவே இல்லை. இளம் இயக்குனர்கள் பத்து பேரிலும் யார், எதைச் செய்தார்கள் என்றே தெரியவில்லை, என பல்வேறு எதிர்க்கருத்துக்கள் படத்திற்கு கிடைத்திருக்கின்றன.

இவ்வளவு விமர்சனங்களுக்கும் இத்திரைப்பட இயக்குனர்களின் பதில், "நாம் இத்திரைப்படத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளையோ, தனிப்பட்ட நபர்களையோ நேரடியாக குறிப்பிட்டு குற்றம் சுமத்தியிருக்கவில்லை. பார்வையாளர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் இத்திரைப்படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்களோ அதற்கு நீங்களே பொறுப்பு. "

"இன்றைய சூழலை எடுத்துப் பார்த்தால் சுவிற்சர்லாந்து, ஏனைய நாடுகளிலிருந்து மாத்திரம் அல்லாது தனது நாட்டுக்குள் வசிக்குக்கும் மக்களிடமிருந்தே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறது. அது எவ்வளவு சிக்கலும், ஆபத்தானதும் என்பதையே எடுத்துக் காட்ட விரும்பியிருக்கின்றோம் "என்கின்றனர்.

பொதுவாக லொகார்னோ திரைப்படவிழாவில் சுவிஸ் உள்ளூர்த் திரைப்படம் ஒன்று தங்கச் சிறுத்தை விருதை வெல்வது அவ்வளவு எளிதில் நடைபெறாது. அதுவும் Heimatland போன்ற திரைப்படத்திற்கு இவ்விருது கிடைப்பது, லொகார்னோ திரைப்பட விழா குழுவினர் மீதான எதிர் விமர்சனங்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என்பது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இவையணைத்தையும் தாண்டி, வித்தியாசமான முயற்சியான, Heimatland எனும் அதிசய தேசத்திற்கு லொகார்னோவில் இடமிருக்கிறதா இல்லையா ?. பொருத்திருந்து பார்ப்போம்..

நன்றி புகைப்படம் : Festival del Film Locarno / Massimo Pedrazzini

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

லொகார்ணோ திரைப்பட விழா குறித்த ஏனைய பதிவுகள் :

 2012 லோகார்ணோவில் Image Problem இயக்குனர்களுடனான செவ்வி.