திரைப்படவிழாக்கள்

பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கில் திரையிடப்படும் 10 நாட்களுக்காக திரைப்படங்களை வழமையாக திரில்லர் வகை ஆக்‌ஷன், பிரெஞ்சு வகை செண்டிமெண்ட் திரைப்படங்கள், வரலாற்று யுத்தவகைத் திரைப்படங்கள், ஒருவரின் வாழ்க்கைச் சுயசரிதைப் படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் இம்முறை நகைச்சுவைப் பிரிவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் «My Intership in Canada».

கனேடிய அரசியலை நையாண்டியாக கேலிசெய்து உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. «Menseiur Lazhar» திரைப்படப் புகழ் இயக்குனர் பிலிப் ஃபலர்டோ இம்முறை காமடிக் கதைக் களத்துடன் இறங்கியிருக்கிறார்.

யுத்தத்திற்கு தனது இராணுவத்தை அனுப்புவதா இல்லையா எனும் கனடா நாட்டின் தலைவிதி அதன் அரச கேபினெட்டின் கையில் தங்கியிருக்கிறது. அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் காலம் வந்த போது, ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கரங்களில் தான் அம்முடிவு தங்கியிருக்கும் படி சூழல் அமைந்துவிடுகிறது. அவர் அரச பக்கம் சாய்ந்தால் கனடா யுத்தத்திற்குச் செல்லும். எதிர்ப்பக்கம் சாய்ந்தால், கனடா யுத்தத்திற்கு செல்லாது என்பதே நிலமை.

கனடா அரசியலையே புரட்டிப் போடவிருக்கும் அவ்வாக்கெடுப்பின் தலைவிதியை மாற்றப் போகும் அந்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தான் நமது படத்தின் ஹீரோ. இளவயதில் உள்ளூர் ஐஸ் ஹாக்கி அணி ஒன்றுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வெற்றிகள் பல கண்டதால் ஆன பிரபலத்தை வைத்து, அந்த உள்ளூர் மக்களின் செல்வாக்கைப் பெற்று அம் மாநிலத்தின் பிரதிநிதியாக அதிஷ்டவசமாக கனேடிய பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் நமத் ஹீரோ ஸ்டீவ் கியூபோர்ட். ஆனால் அந்த மாநிலம் பூச்சியச் செல்வாக்குடையது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை தவிர்த்து தனக்கென எந்தவொரு அதிகாரமும் இன்றி தனது குடும்பத்துடன் காலத்தை கழிக்கும் அவரிடம், பயிற்சி எடுத்துக் கொள்வதற்காக ஹெய்டியிலிருந்து ஒரு இளம் ஆபிரிக்க இளைஞன் வந்து சேர்கிறான்.

தன்னிச்சையாக முடிவெடுக்கத் தெரியாததால், தனது ஆசிஸ்ட்டெண்டாக இணைந்துகொள்ளும் அவனது யோசனைகள் படியும், தனது மகள், மனைவி யோசனை படியும் கனேடிய யுத்த வாக்கெடுப்பு நடைபெறும் நாள் வரை காலம் கடத்தும் அவர் வெளிப்படையாக எவரிடமும் தான், யுத்தத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராக வாக்களிக்கப் போகிறேன் என்பதைச் சொல்லவே மாட்டார்.

இதனால் ஊடகங்கள் முதல் கனேடிய பிரதமர் அழைத்துப் பேசும் வரை திடீர் பிரபலமாகிறார் ஸ்டீவ் கியூபோர்ட்.

அமைச்சராக்கி பதவிகள் கொடுப்பதாக கனேடிய பிரதமர் அழைத்து பேரம் பேசுகிறார். மறுக்கும் கியூபோர்ட் எதிர்க்கட்சிகளுடனும் பேரம் பேசுகிறார். மனைவியோ, கனடா யுத்தத்திற்கு செல்ல வேண்டும் எனவும், மகளோ யுத்தத்திற்கு செல்லக் கூடாது எனவும் தந்தைக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த வாக்கெடுப்பில் கனேடிய அரசு தோற்றால், அந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்க்கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் வரை நிலைமை மாறலாம் எனத் தெரியவர தனக்கான டிமாண்டை மேலும் அதிகரிக்கிறார் ஸ்டீவ் கியூபோர்ட்.

இறுதியில் அவரது ஆசைகள் எல்லாம் நிறைவேறினவா அல்லது புஷ்வானமாகிப் போனதா என்பதே மீதிக் கதை.

காமெடி மற்றும் செண்டிமெண்டுக்களுடன் கனேடிய தற்போதைய அரசியல் நிலைமையை நன்றாகவே கேலி செய்கிறார் இயக்குனர்.

படம் தொடங்கும் முன்னர் பியாற்சே கிராண்டே மேடையில், மைக் பிடித்த அவர், «இந்தப் படத்திற்கான கதை எழுதத் தொடங்கிய போது, எனது பாட்டி எச்சரித்தாள். வேண்டாம். கனடா அரசியல் புரிந்து கொள்ள கடினமானது என்றார். நான் சிரித்துக் கொண்டே சுவிஸ் காரர்களால் புரிந்து கொள்ள முடியும் என்றேன். ஏனெனில் வருடத்திற்கு நான்கைந்து முறை வாக்கெடுப்பு நடத்துபவர்கள் இவர்கள். நான்கு மொழி, மாநில ஆட்சி, பல்வேறு கலாச்சாரக் கட்டமைப்புக்கள் என இச்சூழலிலும் அரசியலை திறம்பட கொண்டு நடத்தும் மக்கள் இவர்களால். நிச்சயம் எமது அரசியலை எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்றேன். எங்கே பார்க்கலாம். படம் உங்களுக்கு புரிகிறதா» என்றார்.

படம் முடிவடைந்த போது, ஒருவித மகிழ்ச்சிக் கரகோஷம் படத்திற்கு கிடைத்த போது, சுவிஸ் மக்கள் கனடா அரசியலை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிட்டு.

மிக ஆபத்தான, சூழ்ச்சிகள் நிறைந்த, புரிந்துகொள்ளக் கடினமான எந்தவொரு நாட்டு அரசியல் நிலைமையையும் இப்படிக் காமடிப் படமாக எடுத்து வெளியுலகத்திற்கு போட்டு உடைத்துவிடலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பிலிப் ஃபலர்டே. நிச்சயம் இந்தியச் சினிமாவில் ரீமேக் செய்யப்பட வேண்டிய படம்.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

லொகார்ணோ திரைப்பட விழா குறித்த ஏனைய பதிவுகள் :

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.