திரைப்படவிழாக்கள்
Typography

லொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).

 8 வருடங்களுக்குப் பிறகு இந்தியத் திரைப்படம் ஒன்று, லொகார்னோவில் போட்டிப் பிரிவில் தெரிவாகியிருக்கிறது. அதோடு பார்த்தவர்களிடம் விருதைச் தட்டிச் செல்லக் கூடும் எனும் அனுமானத்தையும் கூட்டியிருக்கிறது.

101 வயது முதியவர். Century Gowda என ஊர்வாசிகளால் செல்லமாக அழைக்கப்படுபவர். திடீரென ஒரு நாள் இறந்து போகிறார். அந்த இறப்பை அவரது மகன், பேரன், கொள்ளுப் பேரன் என மூன்று பேர் எப்படி எடுத்துக் கொள்கின்றனர் என்பதே திரைக் கதை. மூன்று தலைமுறை கதாபாத்திரங்களின் ஊடாக பயணிக்கும் இக்கதை, கௌடா இறந்து 11 வது நாள் «திதி» கொடுக்கும் மரணச் சடங்கு விழாவில் வைத்து, ஒரு புள்ளியில் ஒன்றிணைகிறது.

கர்நாடகாவில் மந்த்யா மாவட்டத்தில் முழுக் கதையும் படமாக்கப்பட்டிருக்கிறது. ராம் ரெட்டியுடன் இணைந்து திரைக்கதை எழுதியவர் எரேகௌடா. தனது சிறுபராயத்தின் பெரும்பாலான நாட்களை அந்தக் கிராமத்தில் தான் அவர் கழித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் எவரும் நிஜத்தில் நடிகர்கர்களோ, கலைஞர்களோ அல்ல. ஆனால் தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என அந்தந்த கதாபாத்திரங்களாகவே அனைத்து ஊர் மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் ராம் ரெட்டி, டெல்லி மற்றும் செக் குடியரசின் பிராக் திரைக் கல்லூரிகளில் படித்தவர். அவரது முதல் குறுந்திரைப்படமான Ika (Feather / சிறகு) பெரும் வரவேற்பை பெற்றது. «மாயாவில் மழை பெய்கிறது» எனும் அவரது நாவலும் பிரபலமனாது.

அவரது முதல் முழுநீளத் திரைப்படம் திதி. இத்திரைப்படம் 132 நிமிடங்கள் நீளம் கொண்டது. லொகார்னோவில் இரு மணிநேரம் கொண்ட திரைப்படம் ஒன்று ஒரு பார்வையாளன் கூட திரையரங்கை விட்டு வெளியேறாது, முழுமையாக பார்க்கப்படுவது அரிதாகவே நடைபெறும்.

இத்திரைப்படம் மேலதிக காட்சி ஒன்றையும் உள்ளடக்கியதாக நான்கு முறை லொகார்னோவில் காண்பிக்கப்பட்டது. இறுதியாக காண்பிக்கப்பட்ட காட்சி இரவு 11.30 மணிக்கே தொடங்கியது. ஆனால் திரையரங்கு முழுவதுமாக நிரம்பியிருந்ததும், படம் முடிவடையும் வரை திரையரங்கில் ஒருவித ஆர்வம் மிகுந்த அமைதி நிரம்பியிருந்ததுமே, படம் வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதை நிரூபித்தது.

திதி, அந்தளவு ரசிக்கப்பட்டதற்கு காரணம் மந்த்யா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை அப்படியே எந்தவித கற்பனை இடைச் செருகல்களும் இல்லாது கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது தான்.

இளமைத் துள்ளலாக திரியும் கொள்ளுப் பேரன், அவனது நண்பர் வட்டம். கரார் வட்டிக்கு பணம் கொடுக்கும் பெண், போலி மரணச் சான்றிதழ் செய்துகொடுக்கும் அரச அதிகாரி, பேரன் வட்டிக்கு எடுத்த பணத்தில் century gowda வின் திதியை சிறப்பாக கொண்டாடி மகிழும் அப்பாவி ஊர் மக்கள் கூட்டம், வாழ்வை வாழ்வாகவே எடுத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை தமக்குள் கழித்துச் செல்லும் செம்மறி ஆடுகளை மேய்த்துச் செல்லும் நாடோடிக் கூட்டம், என ஒவ்வொரு நொடியும் இந்தியாவின் இயல்பான கிராம வாழ்க்கையே ராம் ரெட்டியின் கமெராக்களின் ஊடாக படமாக விரிவடைகிறது.

தாத்தாவின் மரணத்திற்கு திதி கொண்டாடிக் கொண்டே, உயிருடன் இருக்கும் தந்தைக்கு போலி மரணச் சான்றிதழ் தயாரித்து தாத்தாவின் நிலக் காணியை விற்க முயற்சிக்கும் தமன்னா கதாபாத்திரமும், அதனால் தான் தன்னை கண்காணாத இடத்திற்கு அனுப்பிவைக்க முயற்சிக்கிறான் எனும் வஞ்சகம் தெரியாது, செம்மறி ஆடுகளை மேய்க்கும் நாடோடிக் கூட்டத்துடன் போய்ச்சேர்ந்து தன்னையும், பிறரையும் மகிழ்வித்துக் கொள்ளும் கடப்பாவின் (தமன்னாவின் தந்தை) கதாபாத்திரமும் தமக்குள் போட்டிபோட்டு நடித்திருக்கின்றன.

குத்து, டூயட், ஐடெம் சாங்ஸ் என நான்கு ஐந்து பாட்டுக்கள், அடிதடி மசாலா, வில்லன், மாமன் மகள், காதல், குடும்ப செண்டிமெண்டுக்கள் இவை ஒன்றுமே இல்லாத, யதார்த்தத்திற்கு மிக மிக அண்மையில் உள்ள ஒரு திரைப்படம்.

இன்றளவும் இந்தியச் சிற்றூர்களில் மக்களின் குணாதிசயங்கள் எப்படியுள்ளன. அவர்களின் பண்பாடுகளும், அவர்களின் முன்னுரிமையும் எதில், எப்படி பிணைந்திருக்கின்றன என்பதனை அவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

இந்தியக் கலாச்சாரத்தில் திதி எனும் மரணச்சடங்கின் வலிமையும், அது ஒரு சமூகத்திலும், ஒருவரின் மனநிலையிலும் ஏற்படுத்தும் தாக்கமும், இத்திரைப்படத்தை பார்த்துமுடித்தவர்களால் நிச்சயம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். ஒரு உண்மையான சினிமா படைப்பு தன்னிடமிருந்து கற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கான தகவல்களை அச்சில மணிநேரங்களில் கொடுத்துவிடக் கூடியது.

அந்தவகையில் «திதி», இந்தியப் பெரும்பான்மைக் குடிமக்களாக இருக்கும் கிராம மக்களின் வாழ்வாதார சமூகச் சிக்கல்களையும், அவர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல்களையும், வெறும் மூன்று பிரதான கதாபாத்திரங்களின் ஊடாக தன்னால் முடிந்தவரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

«திதி» உலக சினிமா ரசிகர்களால் நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒரு எளிமையான இந்தியத் திரைப்படம்.

4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

லொகார்ணோ திரைப்பட விழா குறித்த ஏனைய பதிவுகள் :

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்