திரைப்படவிழாக்கள்
Typography

Right Now, Wrong Then : இம்முறை லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்ற தென் கொரிய திரைப்படம் இது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் Hong Sang - Soo ஏற்கனவே லொகார்னோ திரைப்பட விழாக் குழுமத்தினால் நன்கு மதிக்கப்படும் ஒரு இயக்குனர். உலக சினிமாக்களில் பிரபலமானவரும் கூட.

காரணம், அவரது திரைப்படங்கள் அவ்வளவு எளிமையானதாக இருக்கும். அவரது திரைப்படங்களில் கதை தான் ஹீரோ. அத்திரைப்படம் முழுவதும் நான்கைந்து என விரல் விட்டும் சொல்லும் அளவே கதாபாத்திரங்கள் இருக்கும். ஒரே ஒரு கமெராவைத்து, அவரே படம் பிடித்திருப்பதாகவே தோன்றும். ஆனால் அவ்வளவு எளிமையானதாக அந்த திரைப்படத்தைக் காண்பிக்க அவர் பின்னால் என்ன கஷ்டப்பட்டிருப்பார் என்பதை சினிமாக் காரர்களால் மாத்திரமே யூகிக்க முடியும்.

லைட்மேன், சவுண்டுமேன், Camera Trolly, Steady Camera என இவை ஒன்றுக்குமே அவரது திரைப்படங்களில் இடமிருக்காது. ஒரு அசையாத நிலையான Camera Frame. அவ்வப்போது ஒரு Zoom in, Zoom out, சில Panning திருப்பங்கள் இவ்வளவு தான் ஒவ்வொரு காட்சிக்கும் வந்துபோகும். ஒரு காட்சி அதே இடத்தில் குறைந்தது 15 நிமிடங்களாது நீடிக்கும். தாம் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது அவர்களுக்கே மறந்துவிட்டது போல் அவ்வளவு இயல்பாக அவரது கதாபாத்திரங்கள் தமக்கிடையே சம்பாஷனை செய்து கொண்டிருப்பார்கள். அந்தவரிசைக்கு எந்தவித விதிவிலக்குமின்றி வெளிவந்த திரைப்படம் தான் Right Now, Wrong Then.

இந்தப் படத்திற்கு நிஜத்தில் இரு தலைப்பு. படம் தொடங்கும் போது Wrong Now, Right Then. படத்தின் இடைவெளியின் போது Right Now, Wrong Then. காரணம் இத்திரைப்படத்தில் ஒரே கதை இரு முறை வரும்.

முதல் பாதிவரை படம் பார்த்தவர்கள், அதையே தான் மறுபாதியிலும் பார்க்கப் போகிறார்கள். ஆனால் கொஞ்ச நேரத்திற்குதான் Déjà vu (மீள் நினைவு) உணர்வு தான் வந்து போகும். தம்மை அறியாமலே சிறிது நேரத்தில் மறுபடியும் கதையுடன் ஒன்றிப் போகத் தொடங்கிவிடுவீர்கள்.

சினிமா இயக்குனர் Chunsu (படத்தின் ஹீரோ) தனது படக் காட்சியை ஒட்டிய கான்பிரன்ஸ் ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு தென் கொரியாவின் ஒரு சுற்றுலாக் கிராமத்திற்கு (Suwon) வருகிறார். ஆனால் தவறுதலாக கான்பிரன்ஸ் நடைபெறும் நாளுக்கு முதல் நாளே வந்துவிடுகிறார். சரி, என்ன செய்வதென்று தெரியாமல் ஊரைச் சுற்றிப் பார்ப்போம் என முடிவெடுத்து ஒரு மத வழிபாட்டு இடத்திற்கு வருகிறார். அங்கு ஒரு இளம் பெண்ணைச் சந்திக்கிறார். சினிமாவில் பிரபலமான அவருடைய பெயரை ஏற்கனவே அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். ஆனால் அவருடைய எந்தவொரு படத்தையும் பார்த்ததில்லை. ஓவியத்தில் நல்ல ஆர்வம் இருப்பதாக சொல்கிறாள். அவள் வரைந்த ஓவியங்களையும் தனது ஓவிய பயிற்சி அறைக்கு அழைத்துச் சென்று காண்பிக்கிறாள். அபிப்பிராயம் கேட்கிறாள். இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியிலான உரையாடல்கள் தீவிரமடைகின்றன. இருவரும் உணவகம் செல்கின்றனர். Bar க்குச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில், அவளை அளவுகடந்து நேசிப்பதாகவும், தனக்கு திருமணமாகியிருக்காவிடில் அவளையே திருமணம் செய்திருப்பார் எனவும் அந்த சினிமா இயக்குனர் கூறுகிறார். இத்தனைக்கும் பாரில் ஏற்றிய மதுபோதை மயக்கம் அவரிடம் தெரிகிறது. இறுதியில் இருவரும் அவளுடைய நண்பர்களின் Party க்குச் செல்கின்றனர். அங்கு இந்த இயக்குனரைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கும் அவளது தோழிகள் அவரைப் பற்றி பலவாறாக வரும் வதந்திகள் குறித்து கேட்கின்றனர். குறிப்பாக பல பெண்களுடனான தொடர்பு பற்றிக் கேட்கின்றனர்.

இந்த உரையாடல்களால் அதிர்ந்து போகும் அவள் எப்படி சட்டென மாறுகிறார் என முதற்பாதி காட்டுகிறது. இரண்டாவது பாதி மறுபடியும் அந்த சினிமா இயக்குனர் அன்றைய காலைப் பொழுதில் அந்த இளம் பெண்ணை சந்திப்பதிலிருந்து மறுபடி தொடங்குகிறது. ஆனால் இம்முறை இயக்குனர் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். இதனால் அன்றைய நாள் கிளைமேக்ஸ் எப்படி மாற்றமடைகிறது என்பதையே படத்தின் மீதிக் கதை காண்பிக்கிறது.

இத்திரைப்படத்தில் பேசப்படும் உரையாடல்கள், காதலை வெளிப்படுத்தும் விதம், ஒருவரின் அழகையும், அன்பையும் இன்னொருவர் புகழும் விதம் இவை அனைத்துமே அவ்வளவு இயல்பாக இருக்கும். நிஜமாகவே நாம் இச்சந்தர்ப்பத்தில் மற்றவருடன் பழகக் கிடைத்தால் என்ன செய்திருப்போமோ அதையே அவரும் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றும். அவ்வளவு இயல்பான வரிகளும் காட்சி அமைப்பும் கொண்டது இத்திரைப்படம்.

«பல நேரங்களில் எமது சிந்தனையோட்டம் படி (Ideology) படி நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அமைவதில்லை. அவை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இந்தப் படத்திலும், அந்த சினிமா இயக்குனர் கதாபாத்திரத்திற்கு நிகழ்வது அது தான். இரு தடவையும் இரு வேறுபட்ட நிஜச் சூழலுக்கு அவர் முகங்கொடுக்கிறார். ஆனால் ஒரே நாளில் ஒரே புள்ளியிலிருந்து தொடங்கும் ஒரே கதை எப்படி இருவாறாக பிரிவடைகிறது எனும் வேறுபாட்டையும் அதன் ஒப்பீட்டுத் தன்மைகளையும் காண்பிக்கவுமே இந்த இருதடவை யுக்தியை கையில் எடுத்தேன்» என்கிறார் இதன் இயக்குனர் Hong Sang Soo.

«உங்களது திரைப்படத்தைப் போன்று யதார்த்தையும், மனித உணர்வுகள் மற்றும் உறவுகள் தொடர்பிலான உண்மையையும் இன்றைய சினிமா தொடர்ந்து வெளிக் கொண்டுவருகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா» என ஊடகவியலாளர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், «பொதுவாக மனிதர்கள் அனைவருமே அதில் தான் ஆர்வம் காட்டுகிறோம். எம்மைப் பற்றியும், வாழ்க்கையை பற்றியும் அதில் எப்படி வாழ்ந்து காண்பிக்கவேண்டும் என்பது பற்றியும் எப்போதும் நாம் அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் நம்மில் ஒருவருமே வாழ்வின் மூலத்தை (Essence) நிஜமாக கண்டுபிடிக்கவில்லை. எனக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியும். வாழ்க்கையின் மூலத்தைக் கண்டுபிடித்தேன் என எவராலும் சொல்ல முடியாது. காரணம் எம்மை திசைத் திருப்பக் கூடிய எத்தனையோ நிகழ்வுகள் எம்மிடம் பாதிப்புச் செலுத்திக் கொண்டே இருக்கின்றன. இதனால் நாம் வாழ்க்கையின் மூலத்தைக் கண்டுபிடிக்கும் தகுதியடையவில்லை. மாறாக, நாம் ஒவ்வொருவம் மூலப் பொருளின் சிறிதைக் கண்டுபிடிக்கிறோம். அதையும் சிறிது சிறிதாக கண்டுபிடிக்கிறோம்.» என்றார்.

இத்திரைப்பட உருவாக்கத்தின் போது படத்தின் முதற்பாதியை மாத்திரம் படம்பிடித்து, எடிட்டிங் முடித்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களிடம் காண்பித்திருக்கிறார் இயக்குனர். பின்னர் அதே லொகேஷனில் அவர்களை நிறுத்தி மறுபடியும் அக்காட்சிகளை நடிக்கச் சொல்லியிருக்கிறார்.

லொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுக்கு போட்டியில் நின்ற சுவிற்சர்லாந்து திரைப்படம் Haimetland, இஸ்ரேலிய திரைப்படம் Tikkun என விருது வெல்லும் திரைப்படங்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தையும் கடந்து இத்தென்கொரிய திரைப்படம் விருதை வெல்ல காரணம் இருக்கிறது.

எந்தவித யதார்த்த மீறச் செருகலும் இல்லாது ஒரே கதை இரு முறை இரு முடிவுகளுடம் நம் கண் முன் நடந்தால் எவ்வளவு ரசிப்போமே அந்த ரசணை தான் இத்திரைப்படத்திற்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது.

தலைசிறந்த உலக சினிமா இயக்குனர்களைக் கொண்ட Jury குழுவினர் இத்தென்கொரிய திரைப்படத்தை விருதுக்கு தெரிவு செய்வதாக அறிவித்த போது கூடியிருந்த ஊடகவியலாளர்களில் சிலர் «ஏன் இத்தெரிவு» எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த Jury குழுவின் தலைவர் சிரித்துக் கொண்டே, இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த போதே, இது தான் விருதுக்கு சரியான தேர்வு என என் உள்மனம் சொல்லியது. அப்படித்தான் ஏனைய Jury குழுவினரும் கூறினார்கள். தெரிவு செய்துவிட்டோம். மற்றும் படி ஸ்பெஷலாக காரணம் எதுவும் சொல்லி நேரத்தைப் போக்கவிரும்பவில்லை என்றார்.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

லொகார்ணோ திரைப்பட விழா குறித்த ஏனைய பதிவுகள் :

திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!
லொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)
சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே

BLOG COMMENTS POWERED BY DISQUS