திரைப்படவிழாக்கள்
Typography

69வது லொகார்னோ திரைப்பட விழா நேற்று ஆகஸ்டு 3ம் திகதி கோலாகலமாகத் தொடங்கியது. லொகார்னோ திரைப்படக் குழுத் தலைவர் மார்கோ சொலாரி (Marco Solari) விழாவைத் தொடக்கி வைத்து பியாற்சே கிராண்டே திறந்த வெளி அரங்கில் உரை நிகழ்த்துகையில், அண்மையில் நிகழ்ந்த  பிரான்ஸ் கிறிஸ்தவ தேவாலயப் பாதிரியார் மீதான தாக்குதல் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு மதத்தின் பெயரால் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

இதேவேளை  இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவுக்கான பாதுகாப்பு  விடயங்கள் இதுவரையில்லாவாறு தீவிரமாக்கபட்டடுள்ளதை உணரமுடிகிறது. அனைத்து திரையரங்குகளின் நுழைவாயிலிலும் பார்வையாளர்களின் அனைத்து உடமைகளும் பரிசீலிக்கப்பட்டே உள்நுழைய அனுமதிக்கிறார்கள். பியாற்சே கிராண்டே  பெருமுற்றத்திலும் இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இம்முறை சிறந்த திரைப்படத்திற்கான போட்டியிலிருக்கும் 17 திரைப்படங்களையும் அறிமுகப்படுத்தி, அவற்றின் சில காட்சிகளை தொகுப்பாக பியாற்சே கிராண்டே அரங்கில் காட்சிப்படுத்தினர்.  இவற்றில் போட்டியிடும் 8 திரைப்படங்களை இயக்கியவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் ஆசியப் படங்களும் அதிகளவில் போட்டியில் நுழைந்துள்ளன. எப்போதுமில்லாதவாறு இம்முறையே நடுவர் குழுவுக்கு மிகுந்த சவால் கொடுக்கும் வகையில் மிக வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்ட திரைப்படங்களை காட்சிப் படுத்தப் போவதாககலை இயக்குனர் கார்லோ சாட்ரியன் (Carlo Chatrian) குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஹாலிவூட் நட்சத்திரம் Bill Pullman க்கு  இவ் ஆரம்ப விழாவில்,  Moët & Chandon Excellence விருது வழங்கப்பட்டது.  யார் இவர்?, Independence Day பழைய புதிய இரு வேர்ஷன் திரைப்படங்களை பார்த்த எவரும் இவரை அறியாமல் இருக்க மாட்டார்கள்.  அமெரிக்க ஜனாதிபதியாக (Thomas J.Whitmore) வந்து மக்களில் மனங்களில் இடம்பிடித்தவர். அத் திரைப்படத்தில் ஏலியன்களால் சோர்ந்து போயிருந்த இராணுவ, மக்கள் ஆயுதப் படையை தட்டியெழுப்பி உலகின் சுதந்திரதினத்திற்காக போராடுவோம் என தனது ஒற்றை பேச்சால் கிளர்ச்சிபெற வைத்திருப்பார்.  Ruthless People, Spaceballs, Capser Lost Highway போன்ற இவருடைய ஏனைய திரைபப்டங்களும் இவருடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டியவை.

அமெரிக்க ஜனாதிபதியாக நடித்திருந்த இவரிடம்,  நிகழவுள்ள நிஜ அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை பற்றி அமெரிக்க மக்களுக்கு இத்தருணத்தில் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா எனத் திடீரென மேடையில் எழுந்த கேள்விக்கு,  சற்றுத் தயங்கிய பின்,  «இம்முறை தேர்தல் மிக மிக விறுவிறுப்பானது என்பதை அனைவருமே ஒத்துக்கொள்கிறீர்கள் தானே» என பதில் கேள்வி கேட்டார்.  கூடவே அமெரிக்கர்கள் பெரும்பாலும் இவ்வாறான தேர்தலில் அக்கறை காட்டுவதில்லை. இம்முறையாவது தயவு செய்து கூடுதல் அக்கறை காட்டி,  வாக்களிக்கச் செல்லுங்கள்.  இல்லையேல் நிலமை விபரீதமாகிவிடும் என டொனால்ட் டிரம்பின் செல்வாக்கை மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.

கௌரவ தங்கச் தங்கச் சிறுத்தை விருது வழங்கப்பட்ட போது «இதுவரை சுவிற்சர்லாந்தை நாவல்களிலேயே அதிகம் பார்த்திருக்கிறேன். என்னை வைத்து திரைப்படம் இயக்கிய ஜாம்பவான்கள் பலர் பெற்ற இவ்விருதை இன்று நான் பெறுவது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. திரைப்படங்களில் வெறுமனே தலைக் காட்டியதற்கு விருது வாங்குகிறேன்» என சற்று கூச்சத்துடன் கூறினார்.

பியாற்சே கிராண்டே திரையரங்கின் தொடக்க விழா திரைப்படமாக ஸ்கொட்லாந்து தொலைக்காட்சி இயக்குனர் Colm McCarthy யின் The Girl With All The Gifts காட்சிப்படுத்தப்பட்டது. இத் திரைப்படம் குறித்த குறிப்புக்களை இந்த இணைப்பில் காணலாம்.

- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்