திரைப்படவிழாக்கள்

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது. 

சீனாவின் தற்போதைய ஆவணத் திரைப்பட புரட்சியாளர்களில் பெரிதும் மதிக்கப்படும் Wang Bing இன் நெறியாள்கையில் உருவாகியுள்ள இப்புதிய திரைப்படம், வயது முதிர்ந்த Mrs.Fang எனும் நபரின் இறுதிப் பத்து நாள் வாழ்க்கையை கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.

"சீனாவில் பொருளாதாரத்தில் திடீர் வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதும், அரசு இன்னமும் பழமைவாத அரசாகவே உள்ளது. இதனால், சாதாரண பொதுமக்களின் வாழ்வாதார இருப்புக்கான இடம் குறைந்து கொண்டு தான் செல்கிறது. ஆகையால் இந்த தசாப்தத்தில், இம்மக்களை நேரடியாக பிரதிபலிக்கும் மிகச்சிறந்த நுட்பம் ஆவணத்திரைப்படம் மாத்திரமே. என்னுடைய ஆவணத் திரைப்படங்கள், சீனாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் எறும்புகள் போன்று வாழ்வும், எவரும் கண்டுகொல்லாத குடும்பங்களை நோக்கியே கவனம் செலுத்துகிறது என்கிறார் Wang Bing.

நடுவர் குழுவின் சிறப்புப் பரிந்துரை விருதை, பிரேசில் இயக்குனர்கள் Juliana Rojas மற்றும் Marco Dutra ஆகியோரின் நெறியாள்கையில் உருவான Good Manners எனும் திகில் திரைப்படம் தட்டிச் சென்றது.

சிறந்த இயக்குனர் விருதை 9 Doigts எனும் திரைப்படத்தை உருவாக்கிய F.J.Ossang தட்டிச் சென்றார். பாதையோரம் தான் சந்தித்த இறக்கும் நிலையில் உள்ள செல்வந்தர் ஒருவரின் மரபுரிமைச் சொத்தை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றுக் கொள்ளும் ஒருவனை பற்றியது அதன் திரைக்கதை.

சிறந்த நடிகைக்கான விருதை Madame Hyde திரைப்படத்திற்காக Isabelle Huppert பெற்றுக் கொண்டார். தீய நடத்தைகள் கொண்ட ஒரு ஆசிரியை, மின்னல் தாக்கியதன் பின்னர் முற்றுமுழுதாக வேறு பண்புகளுடன் மாறத்தொடங்குவதே இத்திரைப்படத்தின் கதை.

சிறந்த நடிகருக்கான விருதை winterbrodre எனும் திரைப்படத்தில் நடித்த Elliott Crosett பெற்றுக்கொண்டார்.  சுரங்கத் தொழிலாளர்களாக பணிபுரியும் இரு சகோதரர்களின், குளிர்கால தினசரி வாழ்க்கை மற்றும் பிரிதொரு குடும்பத்துடனான சச்சரவு குறித்து இத்திரைப்படம் அலசுகிறது.

இன்றைய சினிமாக் கலைஞர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருது Three Quarters எனும் திரைப்படத்திற்காக ilian Metev க்கு கிடைத்தது. ஒரு நடுத்தர குடும்பம் ஒன்றின் தந்தை, இரு பிள்ளைகள், அவர்களுக்கு இடையிலான தினசரி வாழ்க்கை, கருத்து முரண்பாடுகள், ஆழமான சிந்தனைகள் குறித்து இத்திரைப்படம் அலசுகிறது.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

புகைப்படம் : @Locarno Festival