Saturday, Jun 25th

Last update02:18:43 PM

கடல் : திரைவிமர்சனம்

'கடலோரத்தில் ஒதுங்கிக் கிடக்கும் கிளிஞ்சல்களை விடவா கடல் அழகு?' இப்படி ஒரு கவிதையை எங்கோ படித்ததாக ஞாபகம்.

தமிழ்சினிமாவில் இதற்கு முன் வெளிவந்த 'அல்லு சில்லு' கடல்புற கதைகளையும் அதன் இயக்குனர்களையும் மறுபடியும் நினைவு படுத்தியதுடன் அவர்களை 'ரொம்ப நல்லவய்ங்க' என்றும் சொல்ல வைத்திருக்கிறார் மணிரத்னம்.

'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு' என்கிறார் ஏசு. (அதற்காக இன்னொரு ஷோவையும் பார்க்கிற அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்ல சார்...) பைபிள், ஏசு, சாத்தான், சர்ச், ஊழியம், தேவனின் திருச்சபை என்று கடலோர பகுதியின் மதம் சார்ந்த மல்லுக்கட்டல்கள்தான் படம்.

கிறிஸ்துவர்களுக்கான பள்ளியில் ஃபாதர் ஆவதற்கான படிப்பை படிக்கிறார்கள் அரவிந்த்சாமியும், அர்ஜுனும். பணக்கார வீட்டு இளைஞரான அரவிந்த்சாமி நிஜமாகவே தொண்டு செய்யும் லட்சியத்தோடு அங்கு படித்துக் கொண்டிருக்க, அர்ஜுனுக்கோ அதுவல்ல விஷயம். குடும்ப சூழலை மேம்படுத்தவும். சம்பாதிப்பதற்கான படிப்பாகவுமாகவே கருதுகிறார் அதை. அதுவும் அரட்டை, ஆர்ப்பாட்டத்துடன்.


ஒருநாள் மடத்தில் 'நித்யானந்தா வேலையை' அர்ஜுன் செய்துவிட, அதை கண்ணெதிரே காண்கிற அரவிந்த்சாமி நிர்வாகத்தினரிடம் போட்டுக் கொடுக்கிறார். அவரை பள்ளியை விட்டே நீக்குகிறது நிர்வாகம். தன் எதிர்காலத்தை கெடுத்த உன்னை சும்மாவிட போவதில்லை என்று கருவிக்கொண்டே அங்கிருந்து கிளம்பும் அர்ஜுன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அரவிந்த்சாமியை சந்திக்கிற இடம் ஒரு கடலோர கிராமம். பழைய பகை அப்படியே படம் எடுத்து ஆடுகிறது அர்ஜுனிடம்.

 

கிராமத்தில் கவுரவமான பாதிரியாராக உலா வரும் அரவிந்த்சாமியை, அதே கிராம மக்களை விட்டு அடிவாங்க வைக்கிறார். ஜெயிலுக்கு அனுப்புகிறார். அப்படியும் அடங்காமல் நடுக்கடலில் வைத்து நாக்கில் ரத்தம் கொப்பளிக்க வீழ்த்துகிறார். கடைசியில் யார் ஜெயித்தார்கள் என்பது ரசிகர்கள் உட்கார்ந்த சீட்டிலேயே து£ங்கி வழிந்த நிலையில் அவர்களை எழுப்பி சொல்ல வேண்டிய அளவுக்கு அவ்வளவு முக்கியமில்லாத காட்சி.

சரி... இந்த படத்தில் ராதா பொண்ணும், கார்த்திக் மகனும் நடிச்சிருக்காங்களே. அவங்களுக்கு என்ன மிச்சம் வச்சுருக்காங்க இந்த ரெண்டுபேரும்?

அங்குதான் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் மணிரத்னம். இப்படத்தை ஆரம்பத்திலிருந்தே ஒரு அழகான காதல் படம் போல சித்தரித்தவர், படத்தில் இவ்விரு அறிமுகங்களையும் கோடிட்ட இடங்களை நிரப்பவே பயன்படுத்தியிருக்கிறார். படம் நெடுகிலும் விரவிக்கிடப்பது அர்ஜுன், அரவிந்த்சாமி இருவர் மட்டும்தான்.

சாத்தானுக்கும், கடவுளுக்கும் நடக்கிற போராட்டமாக இந்த கதையை சித்திரிக்க முயல்கிறார்கள் மணிரத்னமும், கதை-வசனத்திற்கு சொந்தக்காரரான ஜெயமோகனும். அன்பே உருவான ஏசுவை கும்பிடுகிற ஏழை ஜனங்கள் இவ்வளவு கொடூரர்களாக இருப்பார்களா? அதுவும் ஒரு பச்சிளம் குழந்தையை எட்டி உதைக்கிறது ஒரு ஊரே சேர்ந்து கொண்டு. அதையாவது மன்னிக்கலாம். ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு இவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் யாவும், ஜெயமோகன், மணிரத்னம் டீம் தலிபான்களுக்கு தாத்தா முறையாக இருப்பார்களோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது.

சரி... அறிமுகங்கள் எப்படி?


கார்த்திக் மகன் கௌதம், அப்பாவின் இடத்தை பிடிப்பதற்கு அவ்வளவு சிரமப்பட போவதில்லை. அந்த துறுதுறுப்பும் கலகலப்பும் அப்படியே நிறைந்திருக்கிறது வாரிசுக்கு. அழுகை, கோபம், முறைப்பு, விறைப்பு என்று அத்தனையும் சரளமாக வந்துவிட்டு போகிறது அந்த குழந்தை முகத்தில்.

ராதாவின் மகள் துளசி, அம்மாவின் இடத்தை பிடிக்க நினைத்தால் வீட்டில் அவர் உட்கார்ந்திருக்கும் சேர், சோபாக்களில் முயற்சிக்கலாம். குளோஸ் அப்புகளில் அக்காவே தேவலாம் என்று எண்ண வைக்கிறார். படத்தில் இவரை குமரியாக காட்டுகிறார்கள். மனதளவில் குழந்தை என்றும் காட்டுவதால், கௌதமுடன் இவரது 'கட்டி உருளல்' அவ்வளவு எடுப்பாக இல்லை.

அர்ஜுனை பார்த்து இவர் சொல்லும் 'ப்பா...' அதன் பின் வெவ்வேறு அதிர்ச்சிகளுடன் உச்சரிக்கப்படும்போது மட்டும், 'நான் ராதா பொண்ணாக்கும்' என்ற வித்தையை வெளிப்படுத்துகிறார்.

கௌதமாக நடித்திருக்கும் அந்த சிறுவனை பாராட்டலாம். ஒரு மீனவரின் உடல்வாகை அப்படியே பிரதிபலிக்கிறார் பொன்வண்ணன்.

படத்தில் வருகிற வசனங்கள் தமிழக மீனவர்கள் சுடப்படுவதை மிக மலிவாக திசை திருப்புகிறது. ஏதோ மீனவர்கள் அத்தனை பேரும் கடத்தல் தொழிலுக்காகவே கடலுக்குள் செல்வதாக காட்டியிருக்கும் குரூரத்தையும் அவ்வளவு எளிதாக மன்னிப்பதற்கில்லை.

ஒளிப்பதிவு ராஜீவ் மேனன். மணிரத்னத்தின் கண்களுக்கு கொஞ்சம் வெளிச்சமிருப்பதையும் காட்டியிருக்கிறார். எப்போதும் கடலோரம் அழகு. அதை வைட் ஆங்கிளில் இன்னும் அழகாக காட்டுகிறது ராஜீவ்மேனனின் கேமிரா.


ஏ.ஆர்.ரஹ்மானின் கேட்க கேட்க பிடிக்கும் என்பார்கள். காத்திருக்கிறோம்... ஆனால் எடுத்த எடுப்பிலேயே அள்ளிக் கொண்டு போகிறது 'நெஞ்சுக்குள்ளே...'

கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி, கண்கொள்ளாக் காட்சி. இதில் கிராபிக்ஸ் பணியாற்றிய நிறுவனத்தை மனசார பாராட்டலாம்.

மணிரத்னம் படமா? அப்படின்னா நல்லாதான் இருக்கும் என்ற சினிமா ரசிகனுக்குள் ஊறிப்போன காலம் காலமான மன அரிப்பை, மிக எளிதாக அவமதித்திருக்கிறது இந்த 'கடல்' அரிப்பு!

4தமிழ்மீடியா விமர்சன குழுவின் முன்னைய திரை விமர்சனங்கள்


- 4தமிழ்மீடியாவுக்காக அபிஷேக்

comments powered by Disqus