திரைவிமர்சனம்

நவரச நாயகன், பழ(ய)ரச நாயகன் ஆன பின்பும் கூட நம்மால் மறக்க முடியாத காட்சி, “மிஸ்டர் சந்திரமவுலி மிஸ்டர் சந்திரமவுலி” என்று அவர் அழைக்கும் அந்த காட்சிதான். இன்னும் எத்தனை வருஷங்கள் ஆனாலும், அந்த காட்சியை புதுப்பித்து புதுப்பித்து கொடுக்கதான் தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே! அந்த நம்பிக்கையில் இப்படியொரு தலைப்பை வைத்த படக்குழு, மறக்காமல் நவரச நாயகனையும், அவரது லவகுசா மகனையும் படத்திலும் அப்பா மகனாகவே நடிக்க வைத்திருப்பது சாலப் பொருத்தம்தான்!

ஏனோ இந்த காம்பினேஷுக்காக ஜனங்கள் சோறு தண்ணியில்லாமல் காத்திருக்கிறார்கள் என்பது போல கொடுக்கப்பட்ட பில்டப்புகளை மறந்து படத்தை ரசிக்க ஆரம்பித்தால், பத்துக்கு நாலு பழுதில்லைதான்!

இரண்டு கால்டாக்சி நிறுவனங்களுக்கு இடையே தொழில் போட்டி. ஒரு நிறுவனத்தில் பயணம் செய்யும் சிலர் கொல்லப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் தொடர்கிறது. இதில் அப்பாவியாக சிக்கிக் கொள்கிறார் கார்த்திக். இவர் போகும் கார் விபத்தில் சிக்க... கார்த்திக், கவுதம் இருவருக்கும் சேதம். ஒருவர் இறந்தே போய்விட, இரண்டடி தொலைவுக்குதான் கண் தெரியும். அதற்குள் கொலையாளிகளை கண்டுபிடித்து பழிவாங்கும் சிக்கலில் கவுதம் கார்த்திக். என்ன நடக்கிறது என்பது மீதி!

இறந்து போன மனைவி நினைவாக கார்த்திக் வைத்திருக்கும் ஒற்றை பத்மினிக் கார் படத்தில் ஒரு ரோல் பண்ணியிருக்கிறது. அஃறிணைக்கும் உயிர் கொடுத்த இயக்குனர் திருவுக்கு ஒரு வெல்டன் மார்க்! வெறும் இரண்டடி தொலைவே பார்க்க முடிந்த கதாநாயகனை எப்படி ஆக்ஷன் காட்சிகளில் அடித்து பின்ன வைப்பது? அதற்கும் உபாயங்களை கண்டுபிடித்த வகையில் மேலும் ஒரு வெல்டன் மார்க்.

கதையை நம்பி படம் எடுப்பதை விட,  கவர்ச்சிக்கும் காதலுக்கும் சரிபாதி அந்தஸ்து கொடுத்தால்தான்  தப்பிக்க முடியும் என்று  புரிந்து கொண்ட விதத்திற்காக  இன்னொரு வெல்டனும் உண்டு மிஸ்டர் திரு.

ரெஜினா கஸன்ட்ரா டூ பீஸ் உடையில் வரும் அந்த ஒரு பாடலும், காட்சிகளும் இந்த படத்தின் டிக்கெட் காசுக்கு சரியாப்போச்சு. மிச்சமெல்லாம் எக்ஸ்ட்ரா போனஸ். அந்தப்படத்தில் ரெஜினா மட்டுமல்ல... கவுதமும் படு பயங்கர கவர்ச்சியாக இருக்கிறார். இளம்பெண்கள் ரசிக்கக்கடவது!

படத்தில் ஏன் கவுதம் குத்து சண்டை வீரனாக வரணும்? ஏன் ஒரே கார் நிறுவனத்திடம் ஸ்பான்சர் வேண்டி அலையணும்? என்பதெல்லாம் பளிச்சென மண்டையை குடையும் கேள்விகள்.

ஒன்று சொல்லியே ஆக வேண்டும். கார்த்திக் இனி நடித்து என்னத்தை சாதிக்கப் போகிறார்? அந்த இழுவை ஸ்டைல் ஒட்டவேயில்லை. ரெஸ்ட் எடுங்க தலைவா!

‘பச்சக்’ என்று மனதில் ஒட்டிக் கொள்கிறார் வரலட்சுமி. அந்த படபட பேச்சும், பளிச் புன்னகையும் மனசை அள்ளுகிறது. ஒரு அப்பாவை போல நினைத்து அவர் கார்த்திக்குடன் பழகினாலும், அந்த சூழ்நிலையின் வேகமும், உணர்வும், தப்பா யோசிக்க வைக்குதே பொண்ணு.

இந்த படத்தில் ஏன் பழம்பெரும் இயக்குனர்கள் அகத்தியனும் மகேந்திரனும். சாதாரண பாண்டுவும் ஜெயப்ரகாஷுமே போதுமே?

சாம் சி இசையில் பாடல்கள் இனிமை. ஆங்காங்கே வரும் பிட் பாடல்களை பின்னணி இசைக்கு பதிலாக பயன்படுத்துகிற யுக்தி மட்டும் போர்...

ஒளிப்பதிவும் ஃபைட் காட்சிகளும் தனியே துருத்திக் கொண்டு நிற்காமல் இயல்பாக அமைந்திருப்பது ஆறுதல்.

புரட்டிப்போடுகிற படம் அல்ல. அதற்காக விரட்டியடிக்கிற படமும் அல்ல!


மிஸ்டேக் சந்திரமவுலி!

-ஆர்.எஸ்.அந்தணன்