திரைவிமர்சனம்

வாரப்படாத தலைக்குள் ‘வகிடு’ போல மறைந்து கிடக்கிறார்கள் அநேக இயக்குனர்கள்! அப்படியொரு அற்புத இயக்குனர் லெனின் பாரதி! தேடிக் கண்டுபிடித்த விஜய் சேதுபதிக்கு முதல் பாராட்டு. அதற்கப்புறம் வந்து விழுகிற அத்தனை பாராட்டும் இப்படத்திற்காக உழைத்த எல்லாருக்கும்!

கதையில்லை... ஆனால் உயிர் இருக்கிறது. படாடோபம் இல்லை.... ஆனால் பரவசம் வருகிறது. வெற்றி தோல்வி என்கிற புள்ளிவிபர கணக்குக்கெல்லாம் ஆட்படத் தேவையில்லாத இந்தப்படம் தமிழ்சினிமாவின் கவுரவங்களில் ஒன்று!

தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கிற மலைப்பகுதி கிராமத்தில் வாழ்கிற மனிதர்களை பற்றிய சம்பவங்கள்தான் இந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை’. தன் வாழ்நாள் முழுக்க மலையடிவாரத்திலிருந்து அதன் உச்சி வரைக்கும் நடந்து கொண்டேயிருக்கும் ஒருவனை, நகரமயமாக்கலும் நய வஞ்சகமும் எப்படி ஓரிடத்தில் அமர வைக்கிறது என்பதுதான் மையம். இந்த மையம் தவிர்த்த மற்ற பகுதிகள் எல்லாம் கிராமங்களின் அழகையும் வெள்ளந்தி மனிதர்களின் நேர்மையையும் சொல்லி சொல்லி மயக்குகிறது நம்மை.

படத்தின் ஹீரோ ஆன்ட்டனி அந்த மலைகிராமத்தின் மடியில் விழந்து புரண்டு வளர்ந்தவராகவே மாறிவிட்டார். கதைப்படி கொஞ்சம் நிலம் வாங்க வேண்டும் என்பதே அவரது ஆசை. முயல்கிறார். நடுவில் தமிழ்சினிமாவின் வழக்கங்களுக்குட்பட்ட எவ்வித புல்லாங்குழல், வயலின், வீணை சமாச்சாரங்கள் இல்லாமல் அவருக்கு கல்யாணமும் நடக்கிறது. குடும்பத்தோடு நிலம் வாங்குகிற முயற்சியில் ஈடுபடும் அவருக்கு, ஊரும் நட்பும் உதவியும் செய்கிறது. ஆனால் விதி செய்யும் சேட்டைகள் அவரை புரட்டி புரட்டி எடுக்கிறது. கடைசியில் அவர் என்னவாகிறார் என்பது முடிவு.

ஆன்ட்டனியின் டெடிக்கேஷன் பற்றி சொன்னால், பாலா படத்தின் ஹீரோக்களே கூட தலைகுனிய நேரிடும் என்பதால் ஒற்றை வார்த்தையில் பாராட்டிவிடலாம். “பின்னிட்டேப்பா...”!

அதற்கப்புறம் எவ்வித பவுடர் பூச்சுக்கும் தன் முகத்தை காட்டாத அந்த கண்ணழகி காயத்ரி கிருஷ்ணா. இது போன்ற படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதே அவர் சராசரி நடிகை அல்ல என்பதை ஸ்டாம்ப் அடித்து நிரூபிக்கிறது.

இவர்கள் தவிர படத்தில் வருகிற கங்காணி, அந்த மூட்டை தூக்கும் வயசாளி, டீக்கடை பெரியவர், டிபன் கடை ஆயா, எப்போதும் கட்சி... தொழிலாளர் நலன் என்று நடந்து கொண்டேயிருக்கும் அந்த கம்யூனிஸ்ட் தோழர் என்று பார்த்து பார்த்து செதுக்கிய கதாபாத்திரங்கள்! எல்லாரும் படம் முடிந்த பின்பும் கூட நம் கையை பிடித்துக் கொண்டு வீடு வரைக்கும் வருகிறார்கள்.

திரைக்கு முன்னே மட்டுமல்ல, திரைக்கு பின்னாலும் உழைத்தவர்கள் நம்மை பற்றி பற்றி இழுக்கிறார்கள். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நம்மை அந்த கிராமத்திற்கே கூட்டிச் செல்கிறது. ஒரு டாப் ஆங்கிளில் அந்த மலையின் உயரமும், அதில் வாழ்கிற, ஊர்கிற மனிதர்களின் துயரமும் நம் மனதிற்குள் புகுந்து ஒரு நிழற்படம் போலாகிவிடுகிறது.

ரெண்டே பாடல்கள்தான். ‘இன்னும் கொஞ்சம் போடுங்க ராசா’ என்று கெஞ்ச விட்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாதி நேரம் பேசாமலே இருந்து பேசுகிறது அவரது பின்னணி இசை. மூட்டை மூட்டைதான். ஆனால் அதை பஞ்சு மூட்டையாக்கி இலகு சேர்த்ததில் எடிட்டர் காசிவிஸ்வநாதன் கவனிக்க வைக்கிறார்.

எத்தனையோ குப்பைகளை அள்ளி தலையில் கொட்டிக் கொள்ளும் ரசிகர்கள், இந்த மேற்கு தொடர்ச்சி மலையை காவடி போல தூக்கி சுமக்கலாம். அயற்சியே தராத அற்புத சுகம் அது!

 - ஆர்.எஸ்.அந்தணன்

விஷாலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் தனது அடுத்த படமாக பிசாசு 2 குறித்த அறிவிப்பினை இயக்குநர் மிஷ்கின் நேற்றிரவு இன்று அதிகாலை இந்தியநேரம் நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.