திரைவிமர்சனம்

பார்வை 1 : சிந்திக்கிறவனெல்லாம் சிந்தனாவாதியல்ல. சிந்தனையால் சீர் திருத்தம் செய்பவனே அவன்! பத்திரிகையாளர் ராஜு முருகனின் சிந்தனையில் பாவப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை படமாக விரிந்திருக்கிறது. தமிழ்சினிமாவுக்கே இந்தக் கதை புதுசு.

‘முதல்ல டாய்லெட்டை கட்டு. அப்புறம் என் கழுத்துல தாலி கட்டு’ என்கிற காதலியின் ஆசையை நிறைவேற்றக் கிளம்புகிற ஒரு அப்பாவி வாலிபன், அல்ப ஆயுசில் போய் சேர்வதுதான் கதை. நடுவில் அவனை மனநிலை பிறழ வைக்கிறது சுற்றுபுற சுனாமிகள். ‘நானே இந்த நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்வதுதான் சட்டம்’ என்று நம்பி நடமாடுகிற அவனுக்கு துணை போகிற இரண்டு உள்ளங்களும், அவர்களின் வலிகளும், அவர்கள் பேசுகிற வசனங்களும் தியேட்டருக்கு வெளியேவும் பரவினால், புரட்சி நிச்சயம்!

‘போராடலாம் வா...’ என்பதோடு முடிகிறது படம். போலி முகமூடிகளோடு திரியும் அத்தனை அரசியல்வாதிகளையும் நெற்றிப்பொட்டில் வைத்து பேனா செருகியிருக்கிறார் ராஜுமுருகன். சமரசம் இல்லாமல் ஒரு படத்தை இயக்கியிருக்கும் அவருக்கு, அண்டசராசரம் முழங்க ஒரு அதிர்வேட்டு!

ஒரு மணல் லாரி கொள்ளாமல் மணல் ஏற்றிக் கொண்டு கிளம்புவதாக ஆரம்பிக்கிறது படம். அதே மணல் லாரி ஹீரோவின் கதையை முடித்துவிட்டு மறைவதாக முடிகிறது. ஒரு கதையை மட்டுமல்ல, எதையும்... எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க வேண்டும் என்பதை வெறும் கமா கொட்டேஷன் போட்டு கதையளக்காமல், நச் நச்சென்று புரிய வைக்கும் ராஜுமுருகனின் ஸ்டைல், நேர்த்தியான சிறுகதைக்கு ஒப்பானது. அதுவும் ஹீரோவின் அறிமுகக் காட்சி, இதற்கு முன் வேறெந்த படத்திலாவது இப்படி அமைந்திருக்குமா? செம...

படத்தின் ஹீரோவான சோமசுந்தரம் மட்டுமல்ல, சும்மா போக வருகிற புல் பூண்டெல்லாம் கூட பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். டாய்லெட் திறக்க வரும் ஜனாதிபதியுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் அந்த முதிய தம்பதிகள் உட்பட! இவர்களே அப்படியென்றால், மெயின் ரோலில் வந்து போகும் பொன்னூஞ்சல், இசை, மல்லிகா, மிலிட்டிரியெல்லாம் எப்படி நடித்திருப்பார்கள் என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா?

மனநிலை சரியில்லாதவர் சோம சுந்தரம் என்பதை படம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் புரிய வைத்துவிடுகிறார் டைரக்டர். அதற்கப்புறமும் அவர் பேச்சை கேட்டுக் கொண்டு இசையும் பொன்னூஞ்சலும் ஆக்ஷனுக்கு உதவுகிறார்களே, அது ஏன்? என்கிற கேள்விக்கு, ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கில் பதில் சொல்லிவிடுகிறார் ராஜுமுருகன். பைத்தியக்காரன் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல், அந்த பைத்தியக்காரன் சொல்வதை கேட்கவும் முடியாமல் தவிக்கும் அதிகாரிகளும் கலகலக்க விடுகிறார்கள்.

சோமசுந்தரத்தின் நடிப்பை சொல்ல படத்தில் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும், குளித்துக் கொண்டே ரேடியோ கேட்கும் அந்த காட்சி பிரமாதம். அவர் காது கூட நடிக்கிறதோ என்கிறளவுக்கு அசத்தல். கோட் போட்டவுடன் அந்த உடம்பில் வந்து உட்கார்ந்து கொள்கிற கம்பீரம் என்ன? போடுகிற உத்தரவுகள் என்ன? ‘ஒரு கக்கூஸ் கட்றதுல கூட ஊழல் பண்றீங்க. உங்ககிட்ட எப்படி நியாயம் கிடைக்கும்?’ என்று நீதிமன்றத்தில் முழங்குகிற வேகம் என்ன? லைஃப் டைம் கேரக்டர் அவருக்கு. அதே சோமசுந்தரம், பிளாஷ்பேக்கில் ‘சோக’ சுந்தரமாகி அழும்போது, கலங்காத கண்களே இருக்க முடியாது.

இவருக்கு ஜோடி ரம்யா பாண்டியன். ‘உன் கோண மண்டை புடிக்கல’ என்று ஒதுங்கிப் போகும் அவர், பிற்பாடு மெல்ல மெல்ல சோமசுந்தரத்திற்கு வசப்படுகிற காட்சிகளில் அவ்வளவு யதார்த்தம். முகத்தில் மேக்கப்புக்கு பதில் சோகத்தை பூசினாலும், அதையும் மீறி வெளிச்சம் பூசுகிறது அந்த கிராமத்து அழகு!

‘முகப்புத்தகத்துல போட்டாச்சா...’ என்று கேட்கிற சோமசுந்தரத்திடம், ‘போட்டாச்சு பிரசிடென்ட்’ என்று பவ்யம் காட்டி, ஜனாதிபதியின் பர்சனல் அசிஸ்டென்ட் போலவே மாறிவிட்ட காயத்ரி கிருஷ்ணா, தமிழ்சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவாக இருப்பார். எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு சிறப்பான கேரக்டர். ‘நானெல்லாம் அந்த கூட்டத்துல நிக்கிறவன் இல்லப்பா...’ என்று கூறிவிட்டு, அடுத்த சில நிமிஷங்களிலேயே கொள்கையை பறக்க விடும் இவரைப்போன்ற கேரக்டர்கள், ஊருக்கு நாலு பேராவது தேறுவார்கள்.

பார்ப்பதற்கு ஜெயகாந்தன் போலவே தோற்றமளிக்கும் அந்த பொன்னூஞ்சல் கேரக்டரில் மு.ராமசாமி. கடைசியில் அவர் பேசும் நாலு வரி வசனத்தை கேட்டால், நாண்டுகிட்டு சாகும் சுயநலக்கூட்டம்!

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அழகு. பின்னணி இசை அதைவிட சிறப்பு. பிற்பாதியில் வரும் லேசான தொய்வை எடிட்டர் வேலுச்சாமி சற்றே சரி செய்திருக்கலாம். ஒரு கிராமத்திற்குள் நுழைந்து வந்ததை போல உணர்வை தருகிறது செழியனின் ஒளிப்பதிவு.

மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிறவனை ஜோக்கராக பார்ப்பதும் அதே மக்கள்தான் என்பதை மிக அழுத்தமாக சொல்ல வருகிறார் ராஜுமுருகன். ஆனால் அவரே சோமசுந்தரத்தை அப்படிதான் காட்ட முயல்கிறாரோ என்கிற டவுட் வருகிறதே... அதை தவிர்த்திருக்கலாமோ?

மற்றபடி, இதுபோன்ற படங்கள் ஓடினால்தான், கரை வேட்டிகள் தங்கள் வேட்டிகளை மட்டுமல்ல, இதயத்தையும் வெள்ளையாக்க முயல்வார்கள்.

ஜோக்கர்- சிரிப்பதற்கு மட்டுமல்ல. வீட்டுக்கு சேர்ந்த பின்பும் கூட யோசிக்க வைக்க!

- ஆர்.எஸ்.அந்தணன்

பார்வை 2:


இயக்குனர் ராஜூமுருகனின் கோபக்கார குழந்தை தான் ஜோக்கர்...!

குக்கூ போன்று ஒரு படம் எடுத்தபிறகு இரண்டாவது படவாய்ப்பென்பது எளிதுதான். அப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக இந்த சமூகத்தின் மீது வக்கிரங்களையும், வன்மங்களையும் தூவாமல்,  மக்களில் ஒருவனாய் நின்று இந்த அரசபயங்கரவாதத்தை கேள்வி கேட்க துணிந்தமைக்காகவே இயக்குனர் ராஜுமுருகன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சகோதரர்களை பாராட்டியே ஆகவேண்டும். சிந்திப்பதையே சிதைத்துவிட்டு அகிலமெங்கும் ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கும், அந்த மக்களையும் கூட விட்டுவைக்காமல் புதைத்துக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாத அரசுகளுக்குமானவன் தான் இயக்குனர் ராஜுமுருகனின் மன்னர்மன்னன் என்னும் ஜோக்கர். யாருக்கும் அஞ்சாமல் சாட்டை சுழற்றியிருக்கிறார். மக்களை மதிக்காத யாரையும் விட்டுவைக்கவில்லை. அதேபோல தன்னால் இயன்றளவு மக்களுக்காக குரல் கொடுக்கும் பலரையும் அடையாளப்படுத்தி கவுரவமும் செய்திருக்கிறார்.

சமகால அரசியல்வாதிகளின் அலட்சியத்தையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், யாருக்காகவும் எதற்காகவும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்து, கேள்விகேட்கத் தயங்கும் நம்மை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார். தன்னையே ஜனாதிபதியாக உருவகப்படுத்திக் கொண்டமைக்காக மட்டுமே ஜோக்கர் என்ற தலைப்பு பொருந்துகிறது. அதை தவிர்த்து பார்த்தால் ஜோக்கர் தான் இந்த தேசத்தின் முதன்மையானவன். நாமெல்லாம் தான் ஜோக்கர்கள். படத்தில் பல வசனங்களுக்கு கைதட்டல்கள் காதலி கிழிக்கிறது. ஆனால் கைதட்டலோடு மறந்துவிடாமல் நாமெல்லாம் சிந்திக்கவேண்டிய அவலங்களை தான் ராஜுமுருகன் வசனங்களாக எழுதியுள்ளார். மக்கள்கள் அனைவரும் மன்னர்மன்னன் போலவே கேள்விகேட்கத் துணிந்துவிட்டால் இந்த அகிலம் எவ்வளவு அழகானதாக இருக்கும். இந்தியாவும் மக்களுக்கானதாக இருக்கும்.

ஒரு பெண் தனது எதிர்கால கணவன் எப்படியிருக்கனும், தான் வாழப்போகும் அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கணும் என்பதை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் இந்த சமூகத்தின் பொதுப் புத்திகளுக்கிடையில், ஒரு பெண் தனது வாழப்போகும் வீட்டில் கழிவறை மட்டுமிருந்தால் போதுமென ஏங்குவதில் இருக்கிறது இந்த தேசத்தின் அலட்சியமும், அவலமும். இதை நக்கலடிக்கவும் முடியாது. சமீபத்தில் வடமாநிலத்தில் ஒரு பெண் கழிவறை இல்லாத காரணத்தால் தனது சொந்த வீட்டிற்கே வாழாமல் சென்ற கதைகளும் நம்மை சுற்றிதான் நடந்துக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ஒரு ஊர்சுற்றி. எந்த ஒரு விசயத்தையும் சிறிதளவு கூட சினிமாத்தனமின்றி மக்களோடு மக்களாய் நின்று, அம்மக்களை சுற்றி நடக்கும் சதியையும், ஏமாற்று அரசியலையும், அதே மக்களுக்கு நேர்மையுடன்   சொல்லியிருக்கிறார். அதுதான் ராஜூமுருகனின் சமூக கோபம். மன்னர்மன்னன் எனும் ஜோக்கரின் சமூகத்தின் மீதான காதல். ஜோக்கர் இத் தேசத்திற்க்கானவன். கேள்வி கேட்பதையே தீண்டாமையாக நினைத்து வாய்மூடி, கைகட்டி நிற்கும் மக்கள் தான் ஜோக்கர்.

நொடிக்கொரு திட்டங்கள் என்று கூவி கூவி இந்த தேசம் (அரசாங்கம்) செய்யும் விளம்பரங்களின் பின்னால் எத்தனை எத்தனை பாமர மக்களின் ரத்தங்களும், உயிர்களும் புதைக்கப்பட்டுள்ளது என்பதை ராஜுமுருகன் அம்பலப்படுத்தியிருக்கிறார். இந்த தேசத்தின் அதிகாரவர்க்கம் தனது அத்துணை சுய நமச்சலுக்கும் பாமர மக்களைதான் சொரிந்துகொள்கிறது. தேவைப்பட்டால் கொல்லவும் செய்கிறது. அவர்களின் திட்டங்களெல்லாம் அவர்களுக்கானதே. இதெயெல்லாம் கண்டு சகிக்கமுடியாமல் மக்களுக்கான தேசத்தில், அரசாங்கம் மட்டும் ஏன் மக்களுக்காக இருக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு, கேள்வி கேட்கும் சில மனிதர்களை, இந்த சமூகம் எப்படியெல்லாம் நக்கலடித்து மகிழ்கிறது என்பதையும் மறவாமல் பதிவு செய்துள்ளார். ஆதங்கப்ப்பட்டுமுள்ளார். அந்த காட்சியில் நாமெல்லாம் வெட்கித் தலைகுனிந்தேயாகனும்.

குழந்தை பிறக்கும் முன்னே சூப்பர் சிங்கருக்காய் பணம் சேர்க்குமளவிற்கு ஊடுருவியுள்ள டிவி மோகங்களை, அரைமணி நேர உண்ணாவிரதத்திற்கு   அஞ்சாறு ஏசி கேட்பதை, ஆகாயத்துல போற ஹெலிகாப்டர பாத்து கும்பிடுறத, நமது பணத்திலிருந்து தரும் இலவசங்களை காரித்துப்புவதில், உழவர் சந்தைகளை அழித்தொழிக்கும் அம்பானிகளை, அம்பானிதானே அவனையும் நோட் பண்ணிட்டேன் என்பதில், பெப்சி கோக்குகளை விசங்கள் என்று நேரிடையாய் சொல்வதில், மணல் கொள்ளையர்களின் அடாவடிகளை பதிவு செய்ததில், ரோஹித் வெமுலாவை காட்டியதில், ஏன் இதுவரை எந்த ஆடி, பி.எம்.டபிள்யூ கார்களை மட்டும் புடிச்சு நிறுத்துனதேயில்லை என கேட்பதில், சாதி வெறியில் திளைக்கும் தர்மபுரியை களமாக எடுத்து, மக்களுக்கான மாற்று அரசியல் பேசியதில், சீமான்களை நினைவுபடுதியத்தில்,டெல்லி சாமியை புரோக்கர் சாமியென்ற உண்மையை உணர்தியத்தில், மது ஒழிப்பை குத்தகைக்கு எடுத்தாற்போல் பேசும் கட்சிகளின் மாநாட்டில் மலிந்து கிடக்கும் மதுபாட்டில்களை காட்டியதில், தகப்பனுக்காய் மகள் வாங்கும் குவார்ட்டர் பாட்டிலில் ஒளிந்திருக்கும் அவலத்தில், அரசுமருத்துவமனையில் மத போதகர்கள் பார்க்கும் மருத்துவத்தில் என்று தன் படைப்பு நெடுகிலும் அரசியல் அவலங்களை பேசவும், கேள்வி கேட்கவும் நிச்சயமாக மனசும் வேண்டும். அளவற்ற தைரியமும் வேண்டும். ஒரு இயக்குனராய் ராஜூமுருகன் வெளுத்தெடுத்து வேட்டையடியிருக்கிறார். அவருடன் அக்கறையோடு உடனிருந்து சிறப்பிதிருக்கின்றனர் எஸ்.ஆர்.பிரபு சகோதர்கள். வணிகம் தாண்டிய மிகத் தைரியமான முயற்சி தான். வணிக ரீதியாகவும் ஜோக்கர் வெல்வான். வெல்லனும். மீறி தோற்றால் அது மக்களின் தோல்வியே.

கபாலியில் இரஞ்சித் எழுதிய கோட் வசனத்திற்கு விதண்டாவாதங்கள் செய்த எல்லா சமூக காவலர்களும் இப்போதெங்கே ? ஜோக்கரில் இருக்கும் ஒவ்வொவொரு வசனங்களும் இத்தேசத்தின் ஆகச்சிறந்த அவலங்கள், அவமானங்கள் தான். ஆரோக்கியமாய் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் தான் படம் நெடுகிலும் பேசப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, தருமபுரியை தங்களது ஆயுதமாக பயன்படுத்தும் சாதிய அரசியல்வாதிகளுக்கு, அதே தருமபுரியில் வாழும் ஜோக்கர் மூலமாக நிறைய சிகிச்சையளித்துள்ளார்.  சமூகத்தின் மீது காதல் கொண்ட ஒரு படைப்பாளியாக கேள்வி கேளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். அரசியலின்றி அணுவுமில்லை என்பதால் அரசியல் பேச சொல்லி பாடம் நடத்தியிருக்கிறார். குறைந்த கதாபாத்திரங்களை வைத்து நிறைய பிரச்சினைகளை பேசியிருக்கிறார். படமாக பார்க்காமல் பாடமாக உள்வாங்கினால் நம்மிலிருந்து ஜோக்கர்கள் பிறப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கு முன் ஜோக்கேர்களை கண்டால் தயவுசெய்து கலாய்க்காமல் காதலியுங்கள். ஜோக்கர் எனும் மன்னர் மன்னன் மக்களின் மன்னன்.

ராஜுமுருகனுக்கு பெரும் பலமாகவும், ஜோக்கருக்கும் நமக்கும் ஒரு பாலமாகவும் செழியனின் விழிப்பதிவு பெரும் பங்களிப்பாற்றுகிறது. கலை இயக்குநரின்  உழைப்பு அளப்பறியாதது. இந்த சமூகத்தின் மீது அக்கறைப் பட்ட படக்குழுவினரின் உழைப்பு அசாத்தியாமனது. படம் நெடுகிலும் அவர்களும் நம்முடனே பயணிக்கின்றனர். மக்களுக்காய் உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகளும், நன்றிகளும். அவர்களை மகிழ்விக்க நமக்கிருக்கும் ஒரே வழி, நாம் விரைவில் தியேட்டர் சென்று படம் பார்ப்பதுதான். ஏனென்றால் நல்ல படங்களை விரைவில் பெட்டிக்குள் அனுப்பும் நல்லோர்கள் மலிந்துகிடக்கும் தேசமிது.

வரவிருக்கும் சுதந்திர தினத்திற்கு என்ன பேசணும் என்று தேசப் பிரதமர் மக்களை கேட்கிறார். அதே தேசத்தில் வாழவழியற்ற ஜோக்கர், தான் வாழும் அமைப்பையை கேள்விகேட்கிறான் எப்படி வாழ்வேனென்று?  ஆனால் சனநாய தேசம் மக்களுக்கான தேசமாம் இது.


- ஜெபி.தென்பாதியான்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!