திரைவிமர்சனம்

‘சட்டம் ஒழுங்கோ, சாலை விதியோ... எதுவும் எங்க வீட்டுச் சேர் இல்ல. இழுத்துப் போட்டு உட்கார!’ ஆயிரம் புத்தகங்கள் சொல்லாத விஷயத்தை சினிமாவில் வரும் சின்ன காட்சி ஒன்று புத்தியில் அடித்த மாதிரி சொல்லிவிடும்!

அப்படி புத்தியில் அடித்திருக்கிறார் பவன் குமார். கன்னடத்தில் வந்த ‘லூசியா’ பட இயக்குனர். இதே ‘யு டேர்ன்’  கன்னடத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்து தற்போது தெலுங்கும் தமிழுமாக வந்திருக்கிறது. எங்கெல்லாம் போக்குவரத்து விதிகள் மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் போய் வர வேண்டிய படம்தான் இது!

வேளச்சேரி மேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நடுத் தடுப்பு கற்களை ஒதுக்கி வைத்து விட்டு ‘கிராஸ்’ பண்ணும் இளைஞர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். போலீசின் சந்தேகப் பார்வை சமந்தா மீது விழுகிறது. இத்தனைக்கும் சமந்தா ஒரு பயிற்சி நிருபர். செய்யாத குற்றத்திற்காக மாட்டிக் கொண்டு தவிக்கும் இவரை காப்பாற்ற நினைக்கும் இன்னொரு போலீஸ் அதிகாரி ஆதிக்கு அடுக்கடுக்காக புலப்படும் உண்மைகளும் அதிர்ச்சிகளும்தான் க்ளைமாக்ஸ்.

இடைவேளைக்குப் பின் மெல்ல எட்டிப் பார்க்கிறது ஆவி ரூட்! அதிலும் கூட ஆவிப்படங்களின் டெம்ப்ளட்டை அறவே ஒழித்து புத்தம் புது ரூட் போட்டுக் கொடுக்கிறார் டைரக்டர் பவன் குமார். (இதுக்கே தனி சல்யூட் வாத்தியார்)

வரவர சமந்தா, நயன்தாராவாகிக் கொண்டிருக்கிறார்! ஒண்டி ஆளாக நின்று பர்பாமென்சில் பின்னி எடுப்பதோடு மட்டுமல்ல... கதை வேகத்திற்கு இணையாக ஓடும் தன் பதற்றமிகு கண்களாலும் பேசுகிறார். அழுகிறார். தழுதழுக்கிறார். தவிக்கிறார். நாயகி தேர்வு மட்டுமல்ல... படத்தில் வந்து போகும் எல்லா விஷயங்களும் அம்சமோ அம்சம்! காதல் வயப்பட்ட சமந்தா, மெல்ல தன் காதலை ராகுலிடம் சொல்லி ஒரு கனவு காண்பதற்குள் புயல் வீச ஆரம்பித்துவிடுகிறது. என்னதான் இருந்தாலும் க்ரைம் ரிப்போர்ட்டரான அவரிடம் தான் போலீசில் சிக்கிய விஷயத்தை சொல்லியிருக்கலாம்.

அதிகம் வேலையில்லை ராகுலுக்கு. அதுவும் சரிதான். நாக சைதன்யா கோபித்துக் கொள்வாரே!

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஆதி. நைட் ட்யூட்டி பார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் கண்களில் சொக்கியிருக்கும் தூக்கமும், தொழில் தேவையும் ஒருங்கே புகுந்து விளையாடியிருக்கிறது. எளிதில் புரிந்து கொள்ள முடியாத அந்த மர்மத்தை நெருங்கிவிடும் ஆதி, அடுத்து சாகப்போவது இவர்கள்தான் என்று அறிந்து அவர்களை கொண்டு வந்து லாக்கப்பில் வைத்தால்... அங்கு நடக்கும் சம்பவம் அதிர்ச்சியோ அதிர்ச்சி. சற்றே பின் சீட்டில் சாய்ந்த ரசிகனும் பொசுக்கென முன்னால் நகர்கிற மொமென்ட் அது!

பூமிகா, சித்திரம் பேசுதடி நரேன் மற்றும் அந்த குட்டி ஏஞ்சல் மூவரும் கொஞ்ச நேரமே வருகிறார்கள். ஆனால் மனசெல்லாம் குடிகொள்கிற அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நடிப்பு அது!

எந்த காட்சியும் வேஸ்ட் இல்லை. எந்த நடிகர்களும் வேஸ்ட் இல்லை என்கிற அளவுக்கு பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இயக்குனரும் எடிட்டரும். நிகேஷ் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு மொத்த திகிலையும் நமக்குள் கடத்தி விடுகிறது.

பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார் பூர்ண சந்திர தேஜஸ்வினி. இதுபோன்ற ஹாரர் திரில்லர்களுக்கு பாடல்கள் தேவையில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்த காரணத்திற்காகவே ஒரு சபாஷ்.

சாலை பாதுகாப்பை அஸ்திவாரமாக வைத்துக் கொண்டு ஒரு மேம்பாலமே கட்டிவிட்டார் இயக்குனர். எந்த செங்கல்லிலும் பிரச்சார நெடி இல்லை என்பதுதான் விசேஷம்.

ரசிகர்களே... யு டேர்ன்,  your turn now

-ஆர்.எஸ்.அந்தணன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.