திரைவிமர்சனம்

கோபத்தை மட்டுமே தின்று கொழுத்துப் போயிருக்கும் ஆதிக்க சாதியின் மனதை அரிவாளால் அல்ல... அறிவால் சுரண்ட நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மாரி.செல்வராஜ். சேரிகளின் ரசம் போன கண்ணாடிகளை சிறுக சிறுக சேகரித்து அவர் செய்திருக்கும் இந்த சூரியன் பல உண்மைகளை சுட்டெரித்திருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த குரல்தான் ‘பரியேறும் பெருமாள்’. ஆனால் தடுக்கவே முடியாதளவுக்கு தாண்டிக் குதித்திருக்கிறது. நினைத்திருந்தால் வன்முறையை தூண்டுகிற அளவுக்கு இப்படத்தை நகர்த்தியிருக்கலாம். ஆனால் யாருக்கும் நோகாமல், யாருக்கும் வலிக்காமல் எல்லாரையும் யோசிக்க விட்டிருக்கிறார் மாரி.செல்வராஜ். இந்த கதையை அவர் கையாண்ட விதமே ஒட்டுமொத்த சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் உணர்வை வெளிப்படுத்திவிடுகிறது.

தமிழ்சினிமாவுக்கு எப்பவோ வந்து சேர்ந்திருக்க வேண்டிய இந்த புதையலை தன் மனத்திற்குள் எத்தனை காலம் ஒளித்து வைத்திருந்தாரோ?

திருநெல்வேலி சட்டக்கல்லூரிக்கு படிக்க வரும் கதிர்தான் பரியேறும்பெருமாள். பத்தாம் வகுப்பில் 360க்கும் மேல் மார்க் எடுத்திருந்தாலும், ஆங்கிலப்பாடத்தில் மட்டும் ஆறோ, ஏழோ? வகுப்பே சிரிக்கிறது இவரது ஆங்கில அறிவை பார்த்து. அந்த நேரத்தில்தான் சக மாணவி ஆனந்தி ஆங்கிலம் சொல்லித் தருகிறார் கதிருக்கு. கதிர் முற்றி நெல்லாகும் என்று ஆனந்தி காத்திருக்க, இந்தக் கதிரை சுற்றி புதரும் அருவாளும் முளைக்கிறது. இவர்களின் நல்ல நட்பை காதலாக கருதும் ஆனந்தியின் குடும்பம், அவரை சகட்டுமேனிக்கு தாக்கி ஒரு கட்டத்தில் கொல்லவே முயல்கிறது. தப்பிக்கிற கதிர் அப்பவும் தன் சோகக்கதையை ஆனந்தியிடம் சொல்லாமல் ஒதுங்குகிறார். கதிர் விலகிப் போவதை சகிக்க முடியாத ஆனந்தி என்னவானார்? கதிரின் கல்லூரி படிப்பு என்னவானது? ஒரு சிறுகதையின் கடைசி வரி போல படம் முடிய... கனத்த மனதோடு வெளியே வருகிறோம். சே... என்னடா உலகம் இது? என்ற நினைப்பு சூழ்ந்து கொள்கிறது நம்மை.

‘பரியேறும் பெருமாள். பி.ஏ.பி.எல். மேலே ஒரு கோடு’ என்று கம்பீரமாக நுழையும் கதிரின் கல்லூரி வருகை சிற்சில மொக்கை ஜோக்குகளால் நகர்ந்தாலும், ஆனந்தியின் வீட்டு கல்யாணத்துக்கு போகிற தருணம் வரைக்கும்தான் அதெல்லாம். அதற்கப்புறம் ஒவ்வொரு காட்சியும் படபடக்க விடுகிறது. சேற்றில் விழுந்து, ரயில்வே டிராக்கில் கட்டுண்டு, மேட்டிலிருந்து உருண்டு புரண்டு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் கதிர். க்ளைமாக்ஸ் நெருங்கும்போது நிறுத்தி நிதானமாக அவர் பேசும் சில வசனங்கள், கலகம் பிறக்கும் இடத்திலெல்லாம் கல்வெட்டாய் இருக்க வேண்டிய வார்த்தைகள். முதலில் வாடகைக்கு ஒரு அப்பாவை அழைத்துக் கொண்டு பிரின்சிபாலை சந்திக்கும் கதிர் அதற்கப்புறம் நிஜ அப்பாவோடு வருவதும், அதற்கப்புறம் நடக்கிற சம்பவங்களும் ஈரக்குலையை அறுத்தே விடுகிறது.

ஆனந்தி, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘கிளிப்பேச்சு பேசவா?’ என்கிறார். விலக விலகதான் காதல் வரும். எப்படியோ தேடி வந்து கதிரை சந்திக்கும் ஆனந்தி, ‘நான் கண்ணை மூடிகிட்டு கொஞ்சம் பேசிக்கிறேன்’ என்று கூறிவிட்டு பேசுவது அதிர்ச்சி ப்ளஸ் அழகு!

சற்றே ஏமாந்திருந்தாலும், படம் காற்று போன சோடாவாக மாறியிருக்கும். யோகிபாபு என்கிற வசமான ஆளை உள்ளே இறக்கி கலகலப்பை தூவியிருக்கிறார் டைரக்டர். ‘சின்ன சி யா? பெரிய சி யா?’ என்று அவர் கேட்கும்போது தியேட்டரே குலுங்குகிறது.

இரண்டு புதுமுகங்கள் இருக்கிறார்கள் பரியேறும் பெருமாளில். இந்த பசுவுக்குள்ளும் இப்படி ஒரு சைத்தானா என்று நினைக்க வைக்கிறார் கராத்தே வெங்கடேஷ். கொலை என்பதே தெரியாமல் கொலை செய்துவிடுகிற அவரது டெக்னிக், அலற வைக்கிறது. குற்றவுணர்ச்சியே இல்லாமல் அசால்டாக அவர் செய்யும் கொலைகளை, சாமிக்கு படைக்கும் அர்ச்சனை போல அவர் பேசுவதுதான் ஷாக். மற்றொருவர் கரகாட்ட கலைஞர் தங்கசாமி. தன் மகனை பார்க்க கல்லூரிக்கு வரும் அவர் அங்கு அனுபவிக்கும் கொடுமை இருக்கிறதே... மகா பயங்கரம். இவ்விருவரும் எதிர்கால சினிமாவில் முக்கிய இடம் பிடித்தால் ஆச்சர்யமில்லை.

முதல் சில காட்சிகளில் வரும் அந்த நாய் கருப்பி... ஆறாம் அறிவுகள் படுகிற பாட்டை சொல்ல வந்த ஐந்தாம் அறிவு! ‘சாதி பிடிக்கலேங்கறதுக்காக நாயைக் கூடவா கொல்வானுங்க?’ என்று பதற விடுகிறது அந்த சம்பவம். கருப்பிக்காக ஒரு பாட்டு. அதில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் சட்டை காலரை இழுத்துப்பிடித்து கவனிக்க வைக்கிறது.

ஆனந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து, ஒரு காட்சியே வந்தாலும் கலக்கிவிட்டு போகும் சண்முகராஜா, பிரின்சிபால் பூ ராம், இவர்கள் மட்டுமல்ல... அந்த கல்லூரியின் ஆசிரியைகள், கதிருக்கு பிட் கொடுத்து உதவும் எக்சாம் சூப்பர்வைசர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனை பேரும் கவனித்து கைதட்ட வைக்கிறார்கள்.

இந்த கதையின் அடிநாதம் எதுவோ, அதை சரியாக உணர்ந்து பின்னணி இசையை மிக்ஸ் பண்ணியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கருப்பி பாடலில் உயிர் கரைகிறது. எல்லா பாடல்களும் மனதை விட்டு அகலாத ட்யூன்கள்.

ஒரு தியேட்டருக்குள் இருக்கிறோம் என்கிற உணர்வே வராதளவுக்கு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.

சாதி பெருமைக்காக உயிர்களை தின்னும் கரையானின் வாய்க்குள் கையை விட்டு பல்லை பெயர்த்திருக்கிறார் மாரி.செல்வராஜ். அதுதான் காலத்தின் அவசியமும் கூட!

-ஆர்.எஸ்.அந்தணன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!