திரைவிமர்சனம்

அனார்கலி காலத்திருந்தல்ல, அதற்கு முன்னால் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே  நண்டுவாக்கிளியின் கொடுக்கு போல துரத்துகிறது காதல். சிலர் அந்த கொடுக்கின் மீதமர்ந்து விஷம் அருந்துகிறார்கள். சிலர் கொடுக்குக்கே தேன் தடவுகிறார்கள். 96 தேன் தடவுகிற படம்!

மழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவர்களை கூட ஒட்ட ஒட்ட நனைத்துவிட்டுப் போகும் இந்த 96.

தியேட்டர் சவுண்டை ‘மியூட்’ பண்ணிவிட்டால், ஒவ்வொரு மனசிலிருந்தும் ஒலிக்கும் அந்த ‘தடக் தடக்...’ துல்லியமாக கேட்கும். ஏனென்றால் காட்சிக்கு காட்சி கரைந்து நொறுங்கி காணாமல் போயிருப்பது ஜானு-ராம் மட்டுமா? அநேகமாக எல்லாரும்தான்! லதா, உமா, வனிதா, சுப்ரியா, காயத்ரி என்று அவரவர் எண்ணங்களில் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்திருப்பார்கள். இந்தப்படத்தின் உயிரே, எல்லாரையும் இழுத்துக் கொண்டுபோய் பழைய காதலுக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான்!

‘போட்டோகிராபி’ சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் விஜய் சேதுபதி தன் ஸ்டூடன்சுகளுடன் தஞ்சாவூருக்கு வருகிறார். தான் படித்த பள்ளியை பார்க்க விரும்பும் அவர் உள்ளே போய் ஒவ்வொரு இடமாக பார்த்து உணர்ச்சிவசப்படும் போதே,  தன் பழைய நண்பர்களுக்கு போன் அடித்துவிடுகிறார். அப்பறமென்ன... 96 பேட்ச்-ல் படித்த அத்தனை நண்பர்களும் ஒரு நாள் சென்னையில் கூடுவதற்கு ஏற்பாடு நடக்கிறது. அந்த நாள்...? அதுதான் இந்தப்படத்தின் மொத்த அழகும்! எந்த புண்ணியவதி இந்தப்படத்தின் இன்ஸ்பிரேஷனோ... எல்லா புகழும் உனக்கே தாயி!

நாற்பது வயசுக்கு மேல் அவ்ளோ பெரிய வெயிட்டில் ஒரு ஆம்பளப் பையன் வெட்கப்படுவதை திரைக்குள் கொண்டு வந்தால், ‘அடச்சே ஏன்யா உனக்கு இந்த வேல?’ என்பான் ரசிகன். ஆனால் அதையே விஜய் சேதுபதி செய்தால், ‘நீ என்ன செஞ்சாலும் ரசிக்க தோணுதே, எப்படிய்யா?’ என்பான். 96 ன் தூணே விஜய்சேதுபதியின் அப்பழுக்கில்லாத அழகான நடிப்புதான். (பிரிச்சு மேய்ஞ்சுட்டான் மனுஷன்) இதயம் தடக் தடக்கென அடித்துக் கொள்ள 22 வருஷம் கழித்து தன் தேவதையின் முகம் காண்கிற அந்த கணம்... பீரிட்டு வழிகிறது காதல்.

நடுநடுவே தனக்கேயுரிய திடீர் பன்ச் ஜோக்குகளை போட்டு ரசிகனின் கவனத்தை நகர விடாமல் செய்கிறார் சேது. கொலைகாரன், ரவுடி, போலீஸ், கட்ட பஞ்சாயத்து தாதா, லவ்வர் பாய் என்று எல்லா கேரக்டர்களும் ஒரே ஒரு நடிகனுக்கு மட்டும்தான் பொருந்தும். அது இவரேதான்! நீ வாழணும்யா!

விஜய் சேதுபதி ‘கோன்’ என்றால், அதில் வழிய வழிய நிரம்பியிருக்கும் ஐஸ்க்ரீம்தான் த்ரிஷா! முதல் ஆச்சர்யம், ‘இன்னும் முதல் படத்தில் பார்த்த மாதிரியே இருக்காரே, எப்படி?’ என்பதுதான். ஒட்டை பிரித்துக் கொண்டு உள்ளே குதித்தாவது ஒட்டுமொத்த சொத்தையும் கொள்ளையடிக்க வைக்கிற அளவுக்கு அழகு! சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களால் மிரள விட்டிருக்கிறார். தன்னை கல்லூரிக்கே தேடிவந்த விஜய் சேதுபதியை, யாரோ என்று நினைத்து விரட்டியடித்ததை அறிந்து குற்றவுணர்ச்சியில் துடிக்கிற அந்த காட்சி, ‘த்ரிஷா புராணத்தில்’ வரும் ஒரே ஒரு செய்யுள்.

கழுத்தில் தாலி, சிங்கப்பூரில் குடும்பம். ஆனாலும் தன் பழைய காதலில் திளைத்து திரும்பிப் போக மனசில்லாமல் கண்கலங்கி பிரிகிற அந்தக்காட்சி, புரட்டிப் போட்டுவிடுகிறது காதல் மனங்களையெல்லாம்!

இந்தப்படத்தின் முடிவு, தமிழில் வந்த ஆயிரம் காதல் கவிதைகளுக்கு ஒப்பானது!

சி.பிரேம்குமார் என்ற புதுமுகம் இயக்கியிருக்கிறார். வளவள வசனங்கள் இல்லை. எக்ஸ்பிரஷன்களால் நகர வேண்டிய படம். அதற்கென தேர்ந்தெடுத்த நடிகர், நடிகைகள்தான் இப்படத்தின் ஆத்மாவே. அதுவும் டென்த், ப்ளஸ் ஒன் காலங்களில் நடித்திருக்கும் அந்த ஜோடி நெஞ்சை அள்ளுகிறது. விஜய் சேதுபதியின் இளமைக்கால கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன். இனம் வயது த்ரிஷாவாக கவுரி எஸ்.கிருஷ்ணன் என்ற புதுமுகம். இவ்விருவரையும் தேடி கண்டுபிடித்த காரணத்திற்காகவே தனி அப்ளாஸ் பிரேம்.

மகேந்திரன் ஜெயராஜ், ஷண்முக சுந்தரம் என்று இருவரது கைவண்ணத்தில், உயிரோவியமாகவும் கவிதையாகவும் கொஞ்சியிருக்கிறது ஒளிப்பதிவு. ஒவ்வொரு பிரேமும் அளந்து வரைந்த கிளாஸ் பெயிண்ட்டிங் போல அவ்வளவு அழகு!

‘விண்ணை தாண்டி வருவாயா’ போல மியூசிக்கலாகவும் ரசிக்க வைத்திருக்க வேண்டிய படம். கோவிந்த மேனன் இசையில் ஏனோ கவனம் சிதறிவிட்டார் இயக்குனர். பாடல்கள் எதுவுமே கேட்ச் பண்ணவில்லை. நல்லவேளை... பின்னணி இசை மட்டும் தாலாட்டு!

அழகி, பள்ளிக்கூடம் படங்களின் சாயல் இருந்தாலும், புதிய புத்தகத்திற்குள் பழைய மயிலிறகாக ஜொலிக்கிறது 96.

அவரவர் பள்ளிக்கூடங்களில் அநாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களுக்கும் இந்த 96 திரைப்படம் ஒரு வடிகால்!

காதலே வழிந்து போ...!

-ஆர்.எஸ்.அந்தணன்

மோகன் ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதைகள் கேட்டு இருந்தாலும், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த அட்லி உடன் நான்காவது முறையாக விஜய் இணைய இருப்பதை விஜய் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது