திரைவிமர்சனம்

‘இந்தா புள்ளைய வச்சுக்கோ... உன் லேப்டாப்பை கொடு’ என்று முக்கால்வாசி கணவன்களை ‘தாயுமானவனாக்கி’ தள்ளிவிட்டுப் போகிறார்கள் பெண்கள்! பிள்ளைகளின் வருங்காலம் பொசுங்கி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஒப்பந்த வாழ்வின் தீப்பந்தங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள்!

அவர்களுக்கெல்லாம் ‘ஆண் தேவதை’ என்கிற பட்டத்தை வழங்கி, கவுரவித்திருக்கிறார் இயக்குனர் தாமிரா!

சமுத்திரக்கனி ரம்யா பாண்டியன் தம்பதிகளுக்கு குட்டி குட்டியாக இரண்டு குழந்தைகள். ‘குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கணும். கார், பங்களான்னு வாழணும்’என்று லட்சியப்படும் ரம்யா பாண்டியன், ‘ரெண்டு பேரும் வேலைக்குப் போனா குழந்தைகள் ஏங்கிடும். ஸோ... நான் வேலைக்கு. நீ வீட்டுக்கு’ என்று கணவன் சமுத்திரக்கனியை சம்மதிக்க வைத்துவிட்டு ஐ.டி வேலைக்கு போக ஆரம்பிக்கிறார். ஒருநாள் இரவு குடும்ப அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது. ‘என் தயவு இல்லாம சொந்த காசில் ஒரு நாள் வாழ்ந்து பார். முடியுமா உன்னால?’ என்று சவால் விடுகிறார் மனைவி. கோபித்துக் கொண்டு தன் பெண் குழந்தையுடன் வெளியேறும் சமுத்திரக்கனிக்கு ஏற்படும் அனுபவங்களும் பட்டறிவும்தான் ஆண்தேவதை. தம்பதி மீண்டும் இணைந்ததா என்பது க்ளைமாக்ஸ்!

குட் டச், பேட் டச் என்று பெண் குழந்தைகளுக்கு அவசியமான அட்வைசுடன் துவங்குகிறது படம். தன் குழந்தையின் விரல் பிடித்து சென்னையில் நடக்க ஆரம்பிக்கும் சமுத்திரக்கனி ஆங்காங்கே பிளாஷ்பேக்குகளுக்குள் மூழ்க ஆரம்பிக்க, கவிதையும் செய்யுளுமாக கண் முன்னே விரிகிறது படம். ‘சமுத்திரக்கனியா... அட்வைஸ் பண்ணியே சாவடிப்பாரே?’ என்கிற முனகலுக்கெல்லாம் செவி கொடுக்காமல் ஒரு பாசக்கார அப்பனாக வாழ்ந்து முடித்திருக்கிறார் கனி. இவருக்கென்றே எழுதப்படும் கேரக்டர்கள் இவரிடமே வந்து சேர்வதுதான் இறைவனின் திருக்கொடை போல!

இரவு முழுக்க தூங்காமல் தவிக்கும் குழந்தையை ஓரிடத்தில் தூங்க வைத்துவிட்டு சந்தோஷப்படும் அந்த அப்பனின் முகம், ஒவ்வொரு அப்பனின் கண்ணாடி ரூம்!

ரம்யா பாண்டியன் மட்டும் என்னவாம்? அலட்டாமல் நடித்திருக்கிறார். தான் செய்வதே சரி என்று நினைக்கும் சம்பளக்கார சம்சாரங்களின் பிரதிபலிப்பும் கூட! ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டால் அதோகதிதான் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்த கேரக்டர். எல்லாம் சரி... குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால், தப்பு செய்தவனை விட்டு விட்டு தட்டிக் கேட்டவனையா குற்றம் சொல்வது? அந்த இடத்தில் சறுக்குகிறது ரம்யாவின் பில்டப்!

அதே அலுவலகத்தில் பணியாற்றும் ஆடம்பர கேரக்டராக சுஜா வாருணி. தேவைக்கு மிகாத அட்வைஸ். தேவைப்படுகிற நேரத்தில் முடிவு என்று நறுக்குத் தெறித்தார்போல வந்து போகிறார்.  

பேபி மோனிகாவின் அழகும், அவள் கேட்கிற கேள்விகளும் அழகு. இன்னொரு குழந்தை கவின் பூபதியும் கண்கலங்க விடுகிறான். இவ்விரண்டு குழந்தை தேர்வும் அட்சர சுத்தம்!

முஸ்லீம் பெரியவராக ராதாரவி. ஊருக்கே நல்லது செய்கிறவரின் நிழலில் விபச்சாரப் பெண்ணொருத்தி. இப்படி சின்ன சின்ன தவறுகளை சரி செய்யாமல் கடந்திருக்கிறார் இயக்குனர் தாமிரா.

ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும், கட்டுக்குலையாத மெட்டுகளாகி கவனிக்க வைக்கிறது. எஸ்.டி.விஜய்மில்டனின் ஒளிப்பதிவில் ஒரு இரவின் தனிமையும் தத்தளிப்பும் மனதில் நுழைந்து இம்சை கொடுத்திருக்கிறது.

காதலர்களை சுற்றி சுற்றி வந்து ‘ஊலலலா’ பாடுகிற உடான்ஸ் சினிமா தேவதைகளுக்கு மத்தியில், ‘அளவோடு இருக்கட்டும் ஆடம்பரம்’ என்ற கருத்தை விதைத்த ஆண்தேவதை... ரொம்பவே அவசியமானவன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.