திரைவிமர்சனம்

கொதிக்கிற கோழியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் பசியா இருந்தா, அந்தக் குழம்பு மட்டும் எப்படி ருசியா இருக்கும்? ‘ஆவ்...’வென சந்தோஷ ஏப்பம் வருமென்று பார்த்தால், சின்ன விக்கலோடு ரசிகர்களை அனுப்பி வைக்கிறார்  இயக்குனர் லிங்குசாமி. இத்தனைக்கும் விருந்தென்றால் விருந்து... ஏழு வீட்டு விருந்து!

திருவிழா கலவரத்தில் புருஷனை பறிகொடுக்கும் வரலட்சுமி, கொன்றவனின் வம்சத்தையே வெட்டி சாய்க்க கிளம்புகிறார். அதில் தப்பிக்கிற ஒருவனை நோக்கிதான் அருவாளும் அதைவிட ஷார்ப்பான துரத்தலும்! ஏழு வருஷம் கழித்து கோவில் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யும் ஊரின் தலைக்கட்டு ராஜ்கிரண், இந்த விழா துளி ரத்தம் சிந்தாமல் நடந்துவிட வேண்டும் என்று கவனம் வைக்கிறார். அதற்கு நேர்மாறான எண்ணத்துடன் காத்திருக்கிறது வரலட்சுமி அண்கோ. இந்த நேரத்தில் வெளிநாட்டில் படிக்கப் போன ராஜ்கிரணின் மகன் விஷால் ஊருக்குள் வந்திறங்க... திருவிழா முடிந்ததா? உயிர்பலி நடந்ததா? வரு கோபம் தணிந்ததா? ரத்த நெடியுடன் ஒரு க்ளைமாக்ஸ்!

லிங்குசாமியை நம்பி கூட்டம் கூட்டமாக நடிகர்களையும், கோடி கோடியாக பணத்தையும் இறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் விஷால். அதே அச்சம் லிங்குவுக்கும் இருந்திருக்கும் போல. புதுசா ட்ரை பண்ணி புட்டுகிட்டு போறதுக்கு, பழசையே கலரடித்து பம்பரம் விட்டுடலாம் என்று நினைத்திருக்கிறார். ஒரு சீன் கூட புதுசு இல்லை என்றாலும், இந்த பழகிய டெம்ப்ளட்டுக்குள் ஒரு அழகிய ‘டெம்பிள்’ கட்ட ட்ரை பண்ணியிருக்கிறார்!

படத்தின் பக்க பலம் மட்டுமல்ல, மொத்த பலமும் ராஜ்கிரண்தான்! ஐயா... ஐயா... என்று சுத்துப்பட்டு ஜனங்களெல்லாம் சுலோகமாக ஜபிக்கிறார்கள் அவரை. அவரும் ஊரைக் காக்கும் ஐயனார் போல, கட்டளையிடுகிறார். களையெடுக்கிறார். முறைக்கிறார். ஜெயிக்கிறார். அதையும் தாண்டி இனிக்கிறது அவரும் கீர்த்தி சுரேஷும் பேசிக் கொள்ளும் அந்த சில நிமிஷங்கள். மகன் விஷாலுக்கும் ‘அவங்க இவங்க’ என்று அவர் கொடுக்கும் அந்த ரெஸ்பெக்ட், பெருசுகளுக்கெல்லாம் இருக்க வேண்டிய பேஸ்கட்!  

இதுபோன்ற படங்களில், நுரையீரல் நொறுங்குகிற அளவுக்கு கத்தி, தொண்டைக்குழாய்க்குள் தூர் வாருகிற அளவுக்கு வசனங்கள் பேசி, இம்சிப்பார்கள். ஆனால் நம்ம ஹீரோ விஷால் அப்படியல்ல. ஜென்ட்டில்மேன்! காதலென்றால் மெல்லிய சிரிப்பு. கடும் கோபம் என்றால் முதுகெலும்பு முள்ளெல்லாம் சில்லு சில்லாகிற அளவுக்கு சிதைத்தல் என்று தேவையை தாண்டி துளி கூட எம்பவில்லை. முக்கியமாக குரல்வளைக்குள் மைக் இல்லை. படுத்த படுக்கையில் ராஜ்கிரண். ஆனால் ஊர் ஜனத்திற்கு தெரியாமல் அவர்கள் முன்னே அவரை நடமாட விடுகிற அந்த யுக்தி... பலே பலே!

விஷாலுக்கும் கீர்த்திசுரேஷுக்குமான லவ் போர்ஷனில், விஷாலுக்கே கஷாயம் கொடுத்து கதற விட்டிருக்கிறார் கீர்த்தி. ச்சும்மா சுண்டி விட்ட கோலிக்குண்டு போல துள்ளியிருக்கிறார். அதுவும் ஒற்றை வீலில் வண்டி ஓட்டி, அந்த அபாய நேரத்திலேயே செல்ஃபி எடுக்கிற காட்சியெல்லாம் உய் உய்... (விசில் சவுண்டு கேட்குதா?) யாராவது ஓவர் ஆக்டிங் என்று சொன்னால், வாய் மேலேயே போடுவதற்கு கீ.சு. ரசிகர்கள் தயாராக இருக்கவும்.

அப்புறம் வரலட்சுமி! இந்திய ராணுவமே வந்தாலும், ‘எந்திரிச்சுப் போறீயா’ என்பார் போலிருக்கிறது. அப்படியொரு திமிரு... தெனாவெட்டு! தன்னை சுற்றி நிற்கும் அருவா தடியன்களிடம், ‘நீங்கள்லாம் ஆம்பளைங்களாடா? உங்களை நம்புனது என் தப்பு’ என்று அவரே களமிறங்குவதெல்லாம் களேபர விசில்களால் நிரம்பி வழியும் நேரம்! (ஒன்ன சுத்தியிருக்கிற அத்தன பேரையும் கொன்னுட்டுதான் ஓய்வ போலிருக்கு என்று ரசிகர்கள் அடிக்கிற கமென்ட் காதை புளிக்க விடுகிறது) அதற்காக ஏழு வருஷ காலமும் மேலுதடு துடிக்க காத்திருப்பதெல்லாம் டூ மச் ஸ்கிரீன் ப்ளே லிங்குபாய்!

மாரிமுத்து, கஞ்சா கருப்பு, கை தென்னவன், ஜானி, சண்முகராஜா என்று தெரிந்த முகங்கள் இருக்கிறார்கள். நமக்கு இதுதான் டயலாக். இதுக்குமேல ஒண்ணுமில்ல என்று தெரிந்ததால், கோட்டை தாண்டவே இல்லை. ஆனால் முனிஸ்காந்த் ஸ்கோர் பண்ணுகிறார். ஒரு காட்சியில் வந்தாலும் மயிலு மயிலுதான். (மயில்சாமி)

இயக்குனர் லிங்குவை விட, பைட் மாஸ்டரின் திங்க்கிங் படு ஷார்ப். பைட் கம்போசிங்குக்குள் ஒரு ‘ப்ளே’ வைத்திருக்கிறார். மின்னல் தெறிக்கும் சண்டைக்காட்சிகளில் மெல்லிய சுவாரஸ்யமும் இருக்கிறது. கனல் தெறித்திருக்கிறார் அனல் அரசு.

பெரும்பாலான காட்சிகள் டாப் ஆங்கிள்தான். இல்லையென்றால் அந்த திருவிழா எப்படி திரைக்குள் அடங்கும்? சக்திவேலின் ஒளிப்பதிவு, பிரமாண்டத்தை சர்வ சாதாரணமாக சர்வ் பண்ணுகிறது ரசிகர்களுக்கு!

இசை யுவன் சங்கர் ராஜா. பாடல்களில் ஒன்றிரண்டு தேவலாம். ‘அப்படி போடு போடு...’ ஸ்டைலில் ஒரு ஸ்பீடான பாட்டு. அதை க்ளைமாக்சுக்கு முன் கொண்டு வந்து சொருகி தியேட்டரையே கேன்ட்டீனை நோக்கி ஓட வைத்த எடிட்டரைதான் நாலு போடு போடணும்!

‘மூளையை போட்டு முக்குறப்போ, எதுக்கு இந்த கொக்கரக்கோ?’ என்று லிங்குசாமி நினைத்திருந்தால், சண்டக்கோழி2 இல்லை! ஆனால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டாரே?!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.