திரைவிமர்சனம்

கையடக்க போனுக்குள் மெய்யடக்கிக் கிடக்கிறது நாடு! சந்தோஷம் மனுஷனுக்கு.

சங்கு பறவைகளுக்கா? என்று பதறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், மீண்டும் பிறந்தால் ஷங்கர்னு பெயர் வைக்கலாம். அப்படியொரு சிந்தனை... அக்கறை... அன்பு... இன்னும் என்னவெல்லாமோ! இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, மற்ற மற்ற உயிர்களுக்காகவும்தான் என்பதை சொல்ல, சுமார் ஐநூறு கோடியை கொட்டி இறைத்திருக்கிறார்கள். அச்சப்படாமல் பேங்க் லாக்கரை அவிழ்த்த லைகாவுக்கு கோடான கோடி ‘குருவி வணக்கம்’!

திடீரென கையிலிருக்கிற செல்போன்கள் பறக்கிறது. சிம் கார்டு இல்லாமல் ‘சிவனே’ என்று கிடக்கும் கடை போன்கள் கூட பறக்கின்றன. இந்த அட்ராசிடியில் நாடே அல்லோலப்பட, பறக்கிற போன்கள் போகிற திசை  தேடிப் போகிறார் விஞ்ஞானி வசீகரன். செல்போன் டவர்களினால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலிருந்தோ இங்கு வரும் பறவைகள் கூட திக்குமுக்காடுகிற சம்பவத்தை அறிகிறார். இப்படி செல்போன்களை பறக்கவிட்டு, நாட்டையே பதறவிடும் அந்த ராட்சதப் பறவை வேறு யாருமல்ல, பட்சிராஜா என்கிற முன்னாள் பறவை ஆராய்ச்சியாளரின் ஆவிதான் என்று தெரியவர... விஞ்ஞானி என்ன செய்தார் என்பதுதான் 2.0

எந்திரன் முதல் பகுதியில் செயலிழக்க செய்து சிறை வைக்கப்பட்ட சிட்டி ரோபோவை  இந்த செகன்ட் பார்ட்டில் மீண்டும் கொண்டு வருகிறார் வசீகரன். பட்சிராஜாவுக்கும் சிட்டிக்கும் நடக்கிற ஃபைட்டில் யாருக்கு வெற்றி என்பது க்ளைமாக்ஸ்.

ஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையான ஒரு தமிழ் படத்தை உயிரைக் கொடுத்து உருவாக்கிய வகையில் முதல் கைதட்டல் ஷங்கருக்குதான். வெறும் பேன்டஸி என்ற அளவோடு முடித்துக் கொள்ளாமல் ஒவ்வொரு மனுஷனின் இதயத்திற்குள்ளும் புகுந்து புறப்படுகிற அளவுக்கு ஒரு கதைக் கருவை உருவாக்கியிருக்கிறாரே... அதுதான் விசேஷம்! தன் ஸ்டைலில் ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கை உருவாக்கி, அந்த வாயில்லாத பறவைகளுக்காக பார்வையாளனின் இதயத்தையும் சேர்த்து பேச வைத்திருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் ஒரு கட்டத்தில், போதும் நமது ஸ்கிரீன் ப்ளே. இதற்கப்புறம் இது கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கான ஏரியா என்று ஒதுங்கிக் கொண்டதுதான் ஷாக்! அர்த்தமில்லாத மோதல்களால் நேரம்தான் நகர்கிறது.

தன் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டிருக்கிறார் ரஜினி. சிட்டி வெர்ஷன் 2.0 என்று வருகிற அந்த ரஜினியிடம் மட்டும் அநியாயத் துள்ளல். அவரையே இன்னும் கொஞ்ச நேரம் மிரட்ட விட்டிருக்கலாமோ என்கிற அளவுக்கு இருக்கிறது. எமியை இழுத்துப் பிடித்து அணைப்பதும், குக்கூய்... என்று விசிலடிப்பதும், ‘இந்த நம்பர் ஒன் நம்பர் டூ பாப்பா விளையாட்டெல்லாம் நம்மகிட்ட வேண்டாம். நான் எப்பவும் சூப்பர் சிட்டி’ என்று முழங்குவதும்... நிமிஷத்துக்கு நிமிஷம் அள்ளிக் கொண்டு போகிறார் அந்த ஸ்பெஷல் ரஜினி. ஐயகோ, அவருக்கும் ராட்சத பறவைக்குமான சண்டையில் அவரையும் கட்டிப்போடுகிறது கதையோட்டம்! அப்புறம் இன்னொரு குட்டி ரஜினி வருகிறார். குள்ளமணி கெட்டார். இருந்தாலும் குழந்தைகள் ரசிப்பார்கள். ஆனால் ரஜினிக்கென ஒரு இமேஜ் இருக்கே ஷங்கர் சார்?

படத்தின் ஹீரோவே அந்த ராட்சத பறவை அக்ஷய் குமார்தான். பறவைகளிடம் அன்பு செலுத்துகிற ஒருவர் அதே பறவைகளுக்காக நியாயம் கேட்டு அரசு அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடம் அலைந்து அலைந்து மனம் வெறுத்து எடுக்கிற முடிவும், அதை தொடர்ந்த ராட்சத அவதாரமும் மிரட்டல். நியாயம் முழுக்க வில்லன் பக்கமே இருப்பதால், ரஜினியின் ஒவ்வொரு ஆக்ஷனும் ‘தப்பு பண்றீங்களே தலைவா...’ என்றே படுகிறது. அதுவே இந்தப்படத்தின் ஆகப்பெரிய இடைஞ்சலும் கூட! முடிவும் அந்த ராட்சத பறவைக்கேதான் சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமா வழக்கப்படி ஜெயிப்பது ஹீரோவாகதானே இருக்க முடியும்? ஹ்ம்....ம்!

பொம்மை போல வருகிறார் எமி. ஏதோ தியேட்டரில் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு சப்தம் கேட்கிறதென்றால் அது இந்த எமியின் புண்ணியத்தால்தான்.

ஒரு வைபரேட் சவுண்ட்... அதற்கப்புறம் வருகிற லட்சக்கணக்கான செல்போன் குவியல்... அப்புறம் நடக்கிற மர்டர்... இப்படி டெம்ப்ளேட் பழிவாங்கலில் சில நேரத்தில் சோர்ந்து போய்விடுகிறது தியேட்டர். கூடவே அந்த கண்ணாடியும் உறுத்த துவங்கி அடிக்கடி கழற்றவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

மிதமிஞ்சிய கிராபிக்ஸ் காட்சிகளும் சற்றே திகட்டலை ஏற்படுத்துகிறது. ஆமாம்... 3டி ன்னு சொன்னாங்க, இமைக்கருகில் வந்து போகிற பொருட்கள் ஒன்றோ இரண்டோதான்!

பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்த ரஹ்மானுக்கு பாடல்களை பின்னோக்கி தள்ளி பெரும் துரோகம் இழைத்துவிட்டார் ஷங்கர். இரண்டு பாடல்கள். இரண்டும் பிரமாதம். குறிப்பாக அந்த புள்ளினங்காள்... நா.முத்துகுமாரின் வரிகளுக்காகவும் மயங்க நேரிடுகிற நேரம்!

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ராஜ கம்பீரம். இன்னும் நீண்டு அயற்சியை ஏற்படுத்தக் கூடிய அபாய கட்டத்திலெல்லாம் ஷார்ப் கத்தி கொண்டு சமன் செய்திருக்கிறார் எடிட்டர் ஆன்ட்டனி.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் 600 கோடியில் வெளியான படம். உலகம் முழுக்க வெளியான ஒரே தமிழ்ப்படம்.

‘2பாயின்ட்0’ பெருமையான படம்தான். ஆனால் அருமையான படமா? விவாதம் ஸ்டார்ட்ஸ்...

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது