திரைவிமர்சனம்

‘சுண்டைக்காயை நசுக்குற மாதிரி சுலபம்னு நினைச்சியா நடிப்பை? அது ஒரு தவம்யா...’ என்று சொல்வதற்காகவே ஒரு படம். ‘நடிகன்டா...’ என்று தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும் இந்தகால சிவாஜியை இழுத்து வந்து படத்தில் கோர்த்து விட்டிருக்கிறார்கள்.

வேறு யார்? நம்ம விஜய் சேதுபதிதான். விளம்பரத்திற்கு பயன்பட்ட அளவுக்கு திரைக்கு பயன்பட்டிருக்கிறாரா? கெட்ட சொப்பனமாக முடிந்து போகிறது முதல் அரை மணி நேரம்! சீதக்காதியின் மிச்ச நிமிஷங்கள்...? வயிறு வலிக்க சிரிக்க நினைக்கும் அத்தனை பேருக்குமான ராஜ விருந்து!

ஐயா ஆதிமூலம் ‘சத்யவான் சாவித்ரி’ காலத்திலிருந்தே நாடகங்களில் நடித்து வருகிறார். காலம் தேயத் தேய நாடகம் பார்க்க வருகிற கூட்டமும் தேய்கிறது. நடித்துக் கொண்டிருக்கும்போதே மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிடும் ஐயா, அதற்கப்புறமும் வாழ்கிறார். எப்படி? என்பதுதான் இந்தப்படத்தின் சுவாரஸ்யமும், கொஞ்சூண்டு அசுவாரஸ்யமும்! ஏற்கனவே அரைச்ச மாவுக்கெல்லாம் பூரி உப்பாது என்பதை புரிந்து கொண்டு, புதுசாக ‘ட்ரை’ பண்ணியிருக்கும் பாலாஜி தரணிதரனுக்கு மனம் திறந்த பாராட்டுகள்.

விஜய் சேதுபதியின் 25 வது படம். அடுத்தடுத்து நாடகக் காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. விதவிதமான கெட்டப்புகளில் வந்து பேசியே கொல்கிறார் சேது. நமக்கென்னவோ நவராத்திரி சிவாஜி நினைவுக்கு வந்து ‘ஐயா, நீங்க இல்லாம போயிட்டீங்களே?’ என்று கவலை சூழ்கிறது. சரக்கென நிமிஷத்தில் காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்களை நீட்......டிக்கொண்டே போகிறார் இயக்குனர். பக்கத்து சீட் ‘கொர்....’ பலவீனமாக்குகிறது தியேட்டரை. அதற்கப்புறம் என்னவோ உருமிமேளம் கேட்டு சாமி வந்தமாதிரி சிரிக்கிறது தியேட்டர். கொர் சப்தம் அடங்கி கைதட்டல் எழ எழ, ஐயா ஆதிமூலம் அரூபம் ஆகி நிகழ்கால நடிகர்கள் நிரூபணம் ஆகிறார்கள். தப்பித்தது சீதிக்காதி. (ஒரு படத்தின் ஹீரோவே அந்தப்படத்தின் மைனஸ் என்பது எவ்வளவு பெரிய அநீதி?)

முதல் பாராட்டு மவுலிக்கு. தான் எவ்வளவு பெரிய கலைஞன் என்பதை அந்த கண்களிலேயே நிரூபிக்கிறார். வந்தது ஐயாதான் என்பதை புரிந்து கொள்கிற அந்த கண்கள், அதை நமக்கும் டயலாக் இல்லாமலே உணர்த்துகின்றன. மவுலி சார். நீங்க நீங்கதான்!

ராஜ்குமாருக்குள் இப்படி தியேட்டரையே தெறிக்க விடுகிற ஒரு நடிகன் இருப்பான் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஒரே டயலாக். கிட்டத்தட்ட பத்து நிமிஷம்... விதவிதமான எக்ஸ்பிரஷன்களால் கதற விடுகிறார் தியேட்டரை. முதல் பாதி சிரிப்புக்கு நான் கியாரண்டி என்று இவர் சொன்னால், ‘செகன்ட் ஹாஃப் எனக்கு தம்பி’ என்று என்ட்ரி கொடுக்கிறார் சுனில். (நடிகர் வைபவ்வின் அண்ணனாம்ல?) ‘ஐயா ஆன்மா இறங்கிருச்சுன்னா, அதுல யார் நடிச்சா என்ன?’ என்று எகத்தாள கேள்வியோடு ஹீரோவாகும் இந்த புரட்யூசர், நடிப்பை கொலை பண்ணுகிற அந்த நிமிஷங்கள் அதகளம்.

ஒரு அமானுஷ்யமான நிகழ்வு, அதற்கப்புறம் எப்படியெல்லாம் டிராவல் செய்யும்? கற்பனையை அதன் எல்லை வரைக்கும் தட்டிவிட்டிருக்கிறார் பாலாஜி தரணிதரன். டி.வி விவாதம், புரட்யூசர் கவுன்சிலில் பஞ்சாயத்து, மக்களின் எதிர்பார்ப்பு என்று தாண்டி தாண்டி வந்து கோர்ட் வரை வந்து நிற்கிறது கதையும் அதன் சுவாரஸ்யமும்.

மாண்பமை நீதிபதியாக வருகிறார் இயக்குனர் மகேந்திரன். ஏதோ இந்தப்படத்தில் நடித்தால் அது முன்னோர்களுக்கு வைத்த ‘காக்கா பிரசாதம்’ என்று நினைத்து இவரைப் போன்ற பெரிய பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இன்னொருவர் பாரதிராஜா. சில நிமிஷங்கள் வந்தாலும் ஆளுமை ஆளுமைதான். அருமை!

இயக்குனர் டீகே ஒரு சில காட்சிகள் வருகிறார். நல்ல முகவெட்டு. தொடர்ந்து நடிக்கலாம். பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா போன்ற சிறப்பான நடிகர்களும் வந்து போகிறார்கள்.

சரஸ்காந்தின் ஒளிப்பதிவு பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து ஒரு வித்யாசமான முடிச்சை போட்டிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசை பலமும் இல்லை. பலவீனமும் இல்லை.

விஜய்சேதுபதி என்ற பொன்னால் குழைக்கப்பட்ட மண் பானை. இந்த வெறும் பானையில் வெள்ளமாய் நிரம்பியிருக்கிறது பாலாஜி தரணிதரனின் நகைச்சுவை உணர்வு.


சீதக்காதி... சிரிப்பு ஜாலி!


-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.