திரைவிமர்சனம்

‘கடைக்குட்டி சிங்கம்’ கன்னாபின்னா ஹிட்! விடுவார்களா...? சிங்கத்தோடு ஒரு சிலுக்குவார்ப்பட்டியை இணைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இருந்தாலும் ‘வந்த ஜனங்க நோகக்கூடாது. வறண்ட மண்டையா சாகக் கூடாது’ என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு. இந்த மருத்துவரின் பிரிஸ்கிருப்ஷனில் மருந்துக்கு பதிலாக மண்டை வெல்லத்தை எழுதியிருக்கிறார். அப்புறமென்ன? சிரிப்போ சிரிப்பு!

பயந்தாங்கொள்ளி போலீஸ் விஷ்ணு விஷால். அக்கியூஸ்ட்டை அடிப்பதை விட, ஆஃப் பாயிலை ருசிப்பதுதான் அவருக்கு பிடிக்கும். அப்படியாப்பட்ட அர்னால்டை போலீஸ் அதிகாரிகளே அஞ்சும் ரவுடியோடு கட்டி உருள விட்டால் என்னாகும்? அதுதான் மொத்த படமும். நடுநடுவே நிரப்பப்பட்ட காட்சிகள் அத்தனையும் அக்மார்க் நெய்யில் செய்யப்பட்ட கலகலப்பு. இந்த ஃபார்முலா இதற்கு முன் பல படங்களில் பயன்படுத்தப்பட்டாலும், இனிப்பு இனிப்புதான். இன்பம் இன்பம்தான்!

நீதிக்கு தலை வணங்கினால் பேதியாக வேண்டியதுதான் என்பதை தனது பழைய படங்களின் மூலம் உணர்ந்து கொண்ட விஷ்ணுவிஷால், குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு இறங்கியிருக்கிறார். அதுதான் இந்த சிரிப்பு கமர்ஷியல். எதற்குமே கோபப்படாத இவருக்கு இவர் சாப்பிடும் ஆஃப் பாயிலை தட்டிவிட்டால் ‘யானைக்கோபம்’ வரும். வேறொருவனை போட்டுத்தள்ள அந்த ஊருக்கு வரும் வில்லன் சாய்குமார் (ஆளு என்னங்க ஆட்டை வேக வச்சு அப்படியே முழுங்குற சைசுக்கு இருக்கார்?) இவர் சாப்பிடும் ஆஃப் பாயிலை தட்டிவிட, போட்டு புரட்டியெடுக்கிறார் விஷ்ணுவிஷால்.

கையோடு இழுத்து வந்து லாக்கப்பிலும் வைக்கிறார். அவருக்கு தெரியாது கமிஷனரே ஸ்பெஷல் டாஸ்க் எடுத்து தேடும் பிரபல ரவுடிதான் இவன் என்பது. இந்த உண்மை ஹீரோவுக்கு தெரியவரும்போது வில்லன் லாக்கப்பை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறான். காட்டெருமைக்கு அஞ்சி கட்டெறும்பு ஓட்டமெடுத்தால் எப்படியிருக்கும்? அப்படி ஓடுகிறார் விஷ்ணுவிஷால். யார் கையில் யார் சிக்கினார்கள் என்பது க்ளைமாக்ஸ். நடுநடுவே வரும் காதல் காட்சிகளும் கதாநாயகி ரெஜினாவும் ஃபுல் சம்பள போனஸ்!

ரவுடிக்கு அஞ்சி ஓடுகிறேன் பேர்வழி என்று விதவிதமான கெட்டப்புகளில் திரிகிறார் விஷ்ணு. நவரச நாயகன் பட்டம் கொடுக்கிற அளவுக்கு பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பொழுதுபோக்க உதவுகிறது கெட்டப்ஸ்! தான் மட்டும் பர்பாமென்ஸ் கொடுத்தால் ஒருத்தனும் சிரிக்க மாட்டான் என்பதை உணர்ந்தே இருக்கிறார் விஷ்ணு. படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். மனுஷன் மைண்ட் வாய்சில் பாதி, ஸ்ட்ரெயிட் வாய்சில் மீதி என்று தியேட்டரை தெறிக்க விடுகிறார்.

ரெஜினாவை அழகி லிஸ்ட்டில் சேர்ப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே நேரம் போய் கொண்டிருக்கிறது. அதற்குள் படம் முடிந்து வணக்கம் போட்டுவிடுகிறார்கள். தீர்ப்பை அடுத்த படத்தில் வாசிக்க வேண்டியதுதான் என்று சோம்பல் முறித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டியிருக்கிறது.

ஆட்டக்காரி கனகாவாக ஓவியா. கெஸ்ட் ரோல்தான். ஆனால் ரெஜினாவை முந்திக் கொண்டு நிற்கிறது இவரது இடுப்பும் அது தருகிற ஈர்ப்பும். பிரமாதப்படுத்த வேண்டிய இந்த பிக்பாஸ் ராணி, இப்படி ‘தொட்டுக்கோ... துடைச்சுக்கோ’ ரோல்களில் நடித்து வருவதுதான் ஷாக்.

சில காட்சிகளில் வருகிறார் சௌந்தர்ராஜா. வந்த காட்சிகளை விட்டுக் கொடுக்காமல் கைப்பற்றியிருக்கிறார். ஆமா... பாத்ரூமில் பல மணி நேரங்களை செலவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஆன்ட்டி ஷுட்டிங் முடிஞ்ச பிறகாவது வெளியில வந்தாங்களா, இல்லையா? (தியேட்டரை தெறிக்கவிட்ட சிங்கமே... உன் கஷ்டம் தீர்ந்துச்சா?)

இசை, ஒளிப்பதிவு பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை.

இதுபோன்ற கமர்ஷியல் கலகலப்பு படங்களில் தவறாமல் இடம்பெற்று எல்லாரையும் நெளிய விடும் டபுள் மீனிங் வசனங்கள் இதில் அறவே இல்லை. அடியோடு வெறுத்த இயக்குனருக்கு தனிப்பட்ட பாராட்டுகள்.

இடுப்பு வார் கிழிகிற அளவுக்கு சிரிக்க விடுகிறது சிலுக்குவார்...!

-ஆர்.எஸ்.அந்தணன்

மோகன் ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதைகள் கேட்டு இருந்தாலும், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த அட்லி உடன் நான்காவது முறையாக விஜய் இணைய இருப்பதை விஜய் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது