திரைவிமர்சனம்

கையெழுத்தில்லாத காசோலை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. சீப் ஐட்டங்களை இறக்கி சில்லரை தேற்றுவதே முதல் கடமை என்று நினைப்பவர்களால் அதே சினிமா இருட்டறையில் முரட்டுக் குத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஐயோ பாவ சீசன் இது. இங்குதான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார்கள் ஒரு சிலர். சேரனும், செழியனும், காக்கா முட்டை மணிகண்டன்களும் இல்லாவிட்டால் நம் சினிமா கருவாட்டுக் கூடைதான். சந்தேகமேயில்லை!

உலகிற்கு ஒரு யோசனை சொல். அதையும் உரக்கச் சொல் என்று களம் இறங்கியிருக்கிறார் சேரன். சற்று கால இடைவெளிதான். அதை இட்டு நிரப்புகிறதா திருமணம்?

காதலிக்கிற ஒரு ஜோடி, பெருத்த முயற்சிக்குப் பின் தன் குடும்பத்தை சம்மதிக்க வைக்கிறது. இரு குடும்பத்தினரும் இணைந்து இந்த திருமணத்தை நடத்த கிளம்புகிறார்கள். பொருளாதார இடைவெளியும், பொசுக்கென தலை தூக்கும் ஈகோவும் அந்த திருமணத்தை கேள்விக்குறியாக்குகிறது. முடிவு என்ன? சிம்ப்பிள் லைன்தான். ஆனால் சிறப்பாக சொல்லியிருக்கிறார் சேரன். (ஆரம்ப அரை மணி நேரம் மட்டும் தண்டனை)

இன்கம்டாக்ஸ் ஆபிசரான சேரன், எந்நேரமும் உம்மென இருப்பதும் சமய சந்தர்ப்பம் கூட பார்க்காமல் தன் ஆபிசர் கடமையை காட்டுவதும் சற்றே புன் முறுவல் பூக்க வைக்கிறது. ஆட்டோகிராப் சேரனுக்கும், தவமாய் தவமிருந்து சேரனுக்கும், இந்தப் படத்தில் வரும் சேரனுக்கும் குறைந்தது ஆறேழு வித்தியாசங்கள் இருந்தாலும், அந்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ லுக் போகவேயில்லை. தங்கச்சிகளுக்கான அண்ணன்கள் இப்படிதான் இருக்க வேண்டும்.

வெகு காலம் கழித்து சுகன்யா திரையில். நிறைய காட்சிகளை பகிர்ந்தளித்திருக்கிறார் சேரன். ஒரு ஜமீன் வம்ச அழகு சுகன்யாவிடம் இருந்தாலும், ஜமீன் வம்ச திமிரு அந்த அழகை பின்னுக்கு தள்ளுகிறது. நீலாம்பரி இமேஜ் வந்துவிடக் கூடாது என்பதற்காக தம்பிக்காக எதையும் இழக்கிற பாசக்கார அக்காவாக்கியிருக்கிறார்கள் சுகன்யாவை.

நெடுநெடு வளர்ச்சியுடன் உமாபதி. போக போக பிடிக்க வைக்கிறார். நன்றாக டான்ஸ் ஆட வரும் என்பதற்காகவெல்லாம் கதையின் போக்குக்கு நடுவே வம்படியாக ஒரு டான்ஸ்சை நுழைத்திருப்பது இம்சை. அதுவும் அடுத்தடுத்த குறுகிய இடைவெளிக்குள். இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது ஒரு பற்று வர வேண்டும் என்பதற்காகவே உமாபதியை இயற்கை உரம் பற்றியெல்லாம் பேச வைத்திருக்கிறார் சேரன்.

கதாநாயகி காவ்யா சுரேஷ், ஹீரோயினுக்குரிய லட்சண பொருத்தங்களில் மைனஸ் மார்க்குதான் வாங்குகிறார். ஆனால் நடிப்பு ப்ளஸ் மார்க்கை அள்ளுகிறது. கோபிகா, நவ்யா நாயர்களையெல்லாம் கண்ணுக்கு காட்டிய சேரனின் தேர்வு இந்த முறை ஏன் பெயிலாச்சு?

தம்பி ராமய்யாவும், எம்.எஸ். பாஸ்கரும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். கலகலப்புக்காக மட்டுமல்ல, கவன ஈர்ப்புக்கும் உதவுகிறது அவர்களின் பிரமாதமான நடிப்பு.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் எதுவுமே மனசுக்குள் அமரவில்லை. (காதுக்குள் நுழைந்தால்தானே மனசுக்குள் அமர்வதற்கு?) சித்தார்த் விபின் என்பதற்கு பதிலாக தன் பெயரை சித்தார்த் வீண் என்று மாற்றிக் கொள்ளலாம் அவர். சபேஷ் முரளியின் பின்னணி இசையும் பெருத்த ஏமாற்றம்.

இலை கொட்டிப்போன ஆலமரத்தை, தலை எட்டுகிற வரைக்கும் தடவிக் கொடுப்பதுதான் அந்த நிழலை அனுபவித்த மனிதர்களின் நியாயமான கடமை! அதற்காக மட்டுமல்ல, இந்தப்படத்தின் ஆகப்பெரிய கருத்துக்களுக்காகவும் போற்றப்படுகிறார் சேரன்.

திருமணம்- சில வருத்தங்களுடன்....!

ஆர்.எஸ்.அந்தணன்

இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசாக தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி ராஜ்ஜியம் நடித்தி வருபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தையின் இசை வாழ்க்கையை ‘ராஜா தி ஜர்னி’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும், அதைத் தாமே இயக்க விரும்புவதாகவும் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்க எண்ணியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

ரியாட்டி தொலைக்காட்சிகளின் வரிசையில் பிராந்திய மொழிகளிலும் கலக்கி வரும் டிஸ்கவரி சேனல், காட்சி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘இன் டூ த வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி முடித்து, தேய்ந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வந்தார்கள்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.