திரைவிமர்சனம்

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

அடுத்த ஜென்மத்தில் ராஜாவும் இல்லை. அவரால் நெசவு செய்யப்பட்ட நிஜக் காதல் ட்யூன்களும் இருக்கப்போவதில்லை. இந்த சத்தியத்தை பூமிக்கு புரிய வைப்பதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது ‘மெஹந்தி சர்க்கஸ்’!

ராஜ போதையை ஏற்றிக்கொண்டு கிடந்து உருளுகிற ஒருவனால்தான், ராஜாவின் ட்யூன்களையும் இந்த படத்தையும் கனெக்ட் பண்ண முடியும். அப்படி ஒரு குடிகாரனாக வாழ்ந்திருக்கிறார்(?) அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன். (ராஜுமுருகனின் அண்ணன்தான் இவர் என்ற அடையாளம் தொலைந்து, சரவணனின் தம்பிதான் ராஜுமுருகன் என்று சொல்ல வைத்திருக்கிறது படம். அது போதாதா?)

தொண்ணூறுகளில் நடக்கிற கதை. ராஜகீதம் என்ற கேசட் பதிவு கடையை நடத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், இளையராஜாவின் பாடல்களை வைத்தே ஊரிலிருக்கிற காதலுக்கெல்லாம் உரம் போட்டு வளர்க்கிறார். ஊருக்கே உரம் போட்டவனுக்கும் ஒரு காதல் வருமல்லவா? வருகிறது. வடநாட்டிலிருந்து சர்க்கஸ் காட்டி பிழைக்க வரும் கும்பலில் ஒரு நிலாக்குட்டி. அவள் மீது காதலாகும் ரங்கராஜ், ‘ஓ... பாப்பா லாலி’ பாடலை அவளை பார்க்கும் போதெல்லாம் போட்டுத்தள்ள, அவளுக்குள்ளும் இறக்குமதியாகிறார் இளையராஜா. அவர் மட்டுமா? ரங்கராஜும்தான்.

வந்த இடத்தில் காதலா? கடுப்பாகிற சர்க்கஸ் முதலாளியும் ஹீரோயின் அப்பாவுமான அந்த மீசைப்பார்ட்டி, “முடிஞ்சா இதை செஞ்சுட்டு என் பெண்ணை கட்டிக்கோ” என்று ஒரு சவால்விட, கடும் முனைப்போடு அந்த சவாலை சந்திக்க தயாராகிறார் ரங்கராஜ். காதல் கை கூடியதா? இல்லையா? க்ளைமாக்ஸ்!

ஹார்லிக்ஸ் டப்பாவுக்குள் மைதா மாவை அடைத்துக் கொடுத்து ஏமாற்றி வந்த காதல் படங்களுக்கு மத்தியில், ‘அப்படியே குடிச்சுக்கோ’ என்று காதல் ஹார்லிக்சை ஊற்றி ஊற்றி கொடுத்திருக்கிறார்கள். கழைக் கூத்தாடி குடும்பத்தில் கலர் லைட் போல ஜொலிக்கும் ஸ்வேதா திரிபாதி இந்தப்படத்தின் சரியான தேர்வு. தப்பு தப்பான தமிழில், சற்றே முற்றிய முகத்துடன் அவர் காதல் பார்வையை வீசுவதும், பேசுவதும் வேதம் போல காதில் விழுந்து ரிப்பீட் ஆகிறது. அந்த கடைசி காட்சி, நிஜமாகவே சிலிர்ப்பு!

அறிமுக ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆரம்ப காட்சியே அமர்க்களம்! பாட்டு, அது இடம் பெற்ற படம், அதை பாடிய பாடகர்கள் என்று புத்தி நுனியில் வைத்திருக்கிறார் எல்லாவற்றையும். அப்படியே அந்த காட்சி குவிந்து பிளாஷ்பேக் ஆரம்பிக்க, ஒரு காதல் மேஜிக் நடக்கிறது படத்தில். பார்த்ததும் பிடித்துப் போகிற முகத்துடன் காதலும் ஏக்கமும் வருத்தமும் தவிப்புமாக வளைய வருகிறார் ரங்கராஜ். முக்கியமாக காதலியை நிற்க வைத்து கத்தி வீசும் அந்த இடம்... எவனாயிருந்தாலும் தடுமாறிப் போகிற தருணம்தான்! தமிழ்சினிமாவுக்கு இவர் வரவு நல்வரவு...

படத்தில் வட முகங்களுக்கு ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயம். குறிப்பாக ஹீரோயின் அப்பாவும், அந்த கத்தி வீசுகிற கலைஞனும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். சாதி வெறி கண்களில் தெறிக்கும் மனுஷனாக மாரிமுத்து. மிரட்டியிருக்கிறார். எல்லா படங்களிலும் வில்லனாக வந்து முறைக்கும் வேல ராமமூர்த்தி, இந்தப்படத்தில் பாதிரியார். அவரது இன்னொரு முகம் விநோதம்... அழகு!

அடிக்கடி கன்னத்தில் அறைவாங்கி அதிர்ச்சியாகும் ஆர்.ஜே.விக்னேஷ், திக்கி திணறி சிரிக்க வைக்கிறார். ஹோம் வொர்க் மஸ்ட் ப்ரோ!

முன் பாதியில் சரசரவென நகர்கிற கதை, பின் பாதியில் சட்டென்று பிரேக் பிடித்து மெல்ல நகர்வதை தவிர்த்திருக்கலாம்.

படம் முழுக்க இளையராஜா பாடல்களை இஞ்ச் அளவுக்கு மீறாமல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் பல மெலடிகள் இடம் பெறாமல் போனது ஏமாற்றம்! இந்தப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். தன் பங்குக்கு மெலடிகள் தராவிட்டால், இளையராஜா புகழ் பாடும் இந்தப்படத்தில் இவர் இடம்பெற்றதே போங்கு என்றாகிவிடுமே? நிறைய உழைத்து சிறப்பான பாடல்களை தந்திருக்கிறார்.

படத்தில் வழியும் இனம்புரியாத சோகத்தை இன்னும் கூட்டுகிறது கேமிரா டோன். பூம்பாறையின் அருமையையும், வட நாட்டின் வெறுமையும் சேர்த்து கலந்து கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.

தன் அண்ணனுக்காக எழுதினாரா, இல்லை... இந்த கதையில் கரைந்தே போனாரா தெரியாது. வசனங்களில் தெறிக்க விடுகிறார் ராஜுமுருகன். ‘மனசுல இருக்கிறவன்தான் புருஷன்’ என்கிற ஒரு வசனம் போதும். ஆயிரம் கிச்சன் டிக்ஷனரிக்கு சமம்!

இந்தகால இளைஞர்களுக்கு ‘இதயத்தை திருடாதே’ படமும், அந்த ‘ஓ... பாப்பா லாலி’ பாடலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அவர்களையும் மீறி ‘ஓ.. பாப்பா லாலி’ காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்!

இந்த மெஹந்தி சர்க்கஸ்-ல் யானை குதிரை இல்லை. ஆனால் அந்த யானை குதிரைகளையே பேதலிக்க விடும் காதல் இருக்கிறது! அதுவும் வழிய.. வழிய...!

-ஆர்.எஸ்.அந்தணன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.