திரைவிமர்சனம்

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

படம் முழுக்க தெரிகிறது பவுசு! நமக்குத் தெரிந்து இப்படியொரு அரசியல் படம் இதற்கு முன்னும் சரி... பின்னும் சரி... வந்ததும் இல்லை. வரப்போவதுமில்லை. என்.ஜி.கே என்றால், நந்த கோபால கஷ்டம்!

காதலை பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கும் செல்வராகவன், அரசியலை பற்றி அரிசியின் எடையளவுக்குக் கூட புரிந்து வைத்திருக்கவில்லை என்று முதல் சில காட்சிகளிலேயே புரிந்துவிடுகிறது. மணிவண்ணனின் அமைதிப்படையை ஐம்பது தடவையும், அண்மையில் வந்த எல்.கே.ஜி படத்தை ஆறேழு தடவையும் பார்ப்பதுதான் அவருக்கு உலகம் தரப்போகும் இம்போசிஷன்!

இயற்கை விவசாயத்தில் பிரியமுள்ள சூர்யா, தன் எம்.டெக் படிப்பையும் அதற்குண்டான வேலையையும் உதறித் தள்ளிவிட்டு வில்லேஜுக்கு வந்து மண்வெட்டி பிடிக்கிறார். இவருடன் மேலும் 500 இளைஞர்களும் சேர்ந்து கொள்ள, அந்த ஊர் கந்துவெட்டி கும்பலுக்கும், உரக்கடை ஆட்களுக்கும் எரிச்சல் வருகிறது. ‘தம்பி... நல்ல மாதிரியா சொல்றோம். எல்லாத்தையும் விட்டுடு’ என்கிறார்கள். அவர்களால் வரும் தொல்லையை சமாளிக்க அரசியல்வாதி தயவை நாடுகிறார் சூர்யா. அட.. என்னவொரு மேஜிக்? எல்லாரும் கப்சிப். நாமளே பதவியை குறி வைத்தாலென்ன என்ற முடிவோடு அரசியலுக்கு வரும் சூர்யா, அவரே சி.எம் ஆவதுதான் முழுக் படமும்!

நாலு வரியில் கேட்கும்போது நன்றாக இருக்கும் கதை, செல்வராகவனின் கை பட்டு எந்தளவுக்கு விகாரம் ஆகியிருக்கிறது என்பதுதான் இரண்டரை மணி நேரத்தையும் தாண்டிய சோதனை! போதும் போதாத கொடுமைக்கு, பட்டனை தட்டுவதற்கு முன்பே பளிச்சென்று ‘பல்ப்’ எரிகிறார் சூர்யா. நடிப்பு என்றால் நடிப்பு. அப்படியொரு ஓவர் டைம் நடிப்பு. அவர் விரலை குளோஸ் அப்பில் காட்டினால் கூட, அதிலும் சூர்யா முகம் தெரியுமோ என்று ரசிகர்கள் நடுநடுங்குகிற அளவுக்கு ஒரு நடிப்பு. சூர்யாவுக்குள் ஒரு வேகத்தடை கருவியை பொருத்தினாலொழிய இந்த கொடுமைக்கு ஒரு விடிவே வரப்போவதில்லை.

ஒரு கட்டத்தில் பராசக்தி, மனோகரா படங்களை கலரில் பார்க்குறோமோ என்கிற அளவுக்கு தோற்றப் பிழையை ஏற்படுத்துகிற சூர்யாவைக் கூட சில காட்சிகளில் ரசித்துவிட முடிகிறது. அவருக்கு ஜோடியாக வரும் சாய் பல்லவி அண் சகிக்கபுள். அதிலும் இவருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்குமான சக்களத்தி சண்டை அறுவை நம்பர் ஒன்.

பிஆர் நிறுவனம் நடத்திவரும் ரகுல், ஆறேழு மாநிலங்களில் ஆட்சியே கவிழ்கிற அளவுக்கு திட்டம் போட்டுத் தருவாராம். ஜெ.வுக்கு சசிகலா போல, படத்தில் வரும் சி.எம். முக்கு இவர் என்கிற அளவுக்கு பில்டப். ஆனால், பூனை முடியை கூட பிடுங்கவில்லை அந்த கேரக்டர். நல்லவேளை... இவருக்கும் சூர்யாவுக்குமான ரொமான்ஸ் ஏரியாவுக்குள் போகவில்லை செல்வராகவன். புரிஞ்சா புரிஞ்சுக்கோங்க என்ற மேலோட்டமாக மேய விடுகிறார் ரசிகர்களை.

நடிகர் இளவரசுதான் சூர்யாவின் பாஸ்! அவ்வளவு டெரர் ஃபேஸ்கட்டை அவரிடமிருந்து ஏற்க மறுக்கிறது மனசு. இந்த கேரக்டரில் நமக்கு பரிச்சயப்படாத வேறு எவரேனும் நடித்திருந்தால் நமக்கு அச்சம் வந்திருக்குமோ என்னவோ?

கன்னட தேவராஜ், தலைவாசல் விஜய், பொன்வண்ணன் என்று கல்யாண வீட்டில் மீந்து போன பாயாசம் போலாகியிருக்கிறார்கள் திறமையான நடிகர்கள். நல்லவேளை... பாலாசிங்குக்கு பிரமாதமான ரோல். கரை வேட்டின்னா சும்மாவா? என்று செய்முறை விளக்கம் தருகிற காட்சியில் அசத்தியிருக்கிறார் மனுஷன்.

யாருக்கும் யாருக்கும் நேரடி சண்டை? ஏன் படக்படக்கென அழுகிறார் சூர்யா? இயற்கை விவசாயம் செய்வதற்குதானே இவ்வளவு காம்ப்ரமைஸ். அப்புறம் ஏன் அதை செய்யவே இல்லை அவர்? கொழுந்தியா மதுரையில இருக்கா என்று அவளுக்கு போன் போட்டு மதுரையை வளைத்தது எப்படி? சித்தப்பன் சென்னையில இருக்கான் என்று அவனுக்கு போன் போட்டு சென்னையை வளைத்தது எப்படி? இப்படி எல்லா மாவட்டத்தையும் சிங்கிள் போனில் வளைத்துவிட முடியுமா? இப்படி காட்சிக்கு காட்சி கேள்விகளாக தோணுவது நமக்கு மட்டும்தானா?

நல்லவேளை... யுவனின் ட்யூனும், பின்னணி இசையும் பிரமாதப்படுத்தி ரிலாக்ஸ் பண்ணுகிறது. கோடிட்ட இடங்களை விடுபட்ட காட்சிகளால் நிரப்பினால் மட்டுமே இது படக் கணக்கில் வரும். இதை சரியாக புரிந்து கொண்டு கிழிந்த ஒட்டுத்துணியை சட்டையாக்கிக் கொடுத்திருக்கிறார் எடிட்டர் பிரவின் கே.எல்.

படத்தில் ஒரு டயலாக். “அரசியலுக்கு போவாதடா... அது சுடுகாடு. உள்ள போனவன் பிணமாதான் வெளியில் வருவான்” என்று! பிணமா இருந்தால்தானே சுடுகாட்டுக்கே போக முடியும்? சுடுகாட்டுக்கு போனபின் அவன் பிணமா எப்படி வெளியே வருவான், சாம்பலாகதானே வருவான்? இந்த சிங்கிள் வசனமே இப்படி தலைய சுற்ற வைக்குதே... படம் எப்படியிருக்கும்?

கட்டெரும்பு கடிச்ச இடத்திலேயே வெட்டிரும்பு விழுந்தா எப்படியிருக்கும்? அப்படியிருக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.