திரைவிமர்சனம்

ரஜினியை இதுபோல் போலீஸ் உடையில் பார்த்து நீண்ட காலமாகிறது. இம்முறை ஆதித்யா அருணாசலம் என்ற பெயருடன், மும்பைப் பெருநகரின் போலீஸ் ஆணையராக இருந்து, பாலியல் தொழில் சந்தையின் பின்னாலும், போதை மருந்து விநியோகக் கும்பலின் பின்னாலும் இருக்கும் பகாசுர முதலைகளைக் களையெடுக்கும் மாஸ் அவதாரில் வருகிறார்.

அவரது போலீஸ் ஆபீசர் வேடம், கொஞ்சம் மனநலப் பிரச்சினை கொண்டவராகவும் அதேநேரம் வில்லத்தனம் நிறைந்த என்கவுண்டர் அதிகாரியாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆதித்யா அருணாசலம் என்ற வேடத்தைத் தந்திரக்கார எதிர்நாயகன், அதாவது ‘கிரே ஷேட் ஹீரோ’ என்று சொல்வதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவரே வசனம் வழியாகத் தன்னை வில்லன் என்று பறைசாற்றிக்கொண்டாலும், மகளைக் கொன்றவர்களைப் பழிவாங்க, மும்மை நகரம் முழுவதும் ரைடு செய்து, முரடர்களைக் கூட்டம் கூட்டமாக அள்ளிக்கொண்டு வந்து, சந்தேகத்துக்கு இடமான 13 ரவுடிகளை, காக்கைக் குருவிகள்போல் கூலாகச் சுட்டுத் தள்ளுகிறார். இது தொடர்பான மனித உரிமைக் கமிஷன் விசாரணையை நடத்தும் பெண் அதிகாரியின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, தனக்கு சாதகமான அறிக்கையில் கையெழுத்தும் வாங்கிச் செல்கிறார் ரஜினி. அந்த அளவுக்கு உயிருக்கு உயிரான அவரது மகளின் அகால மரணம் அவரது மண்டைக்குள் ரயில் ஓட்டுகிறது.

உயிருக்குப் பயந்து, ரஜினி கேட்ட அறிக்கையில் கையெழுத்திட்டுக்கொடுக்கும் மனித உரிமை அதிகாரியிடம் மன்னிப்புகோரி, ரஜினி ஏன் இப்படி ஆனார் என்பதை பிளாஷ் பேக் கதையாக எடுத்துரைக்க வருகிறார் லில்லி என்ற முதிர்கன்னியாகவும் ரஜினியின் காதலியாகவும் நடித்திருக்கும் நயன்தாரா. அங்கிருந்து பின்னோக்கி ஓடத் தொடங்கும் கதை, பாலியல் தொழிலும் போதை மருந்துப் புழக்கமும் புரையோடிக் கிடப்பதாகச் சித்தரிக்கப்படும் மும்பையை ஆதித்யா அருணாசலம் எப்படி ‘கிளீன்’ செய்கிறார் என்று சொல்லத் தொடங்குகிறது.

கடந்த மாதம் வெளியாகி தோல்வி அடைந்த ‘தபாங் 3’, ‘பானிபட்’ உட்பட முன்னணி இந்திப் படங்களில் வில்லனாகக் கலக்கிய நாவாப் ஷா, இந்தப் படத்தில் பெரும் தொழில் அதிபர். அவரது மகன் பிரதிக் பப்பர்தான் சிறுமிகளையும் பெண்களையும் வைத்து மும்பை பாலியல் தொழில் சந்தையை நடத்துகிறான். அவனை அதிரடியாகத் தூக்கும் ரஜினி, சிறையில் தள்ளுகிறார். ஆனால் ஆளும் வர்க்கத்துடன் அண்டர்கிரவுண்ட் தொடர்புகொண்ட நவாப், நீதிபதிகள் தொடங்கி, உள்துறை அமைச்சர் வரை அத்தனை பேரையும் விலைக்கு வாங்கி, தனது மகனுக்குப் பதிலாக வேறொருவனை ‘புராக்ஸி’யாக சிறையில் வைக்கிறார். இதை அறிந்து கொதித்துப்போகும் ஆதித்யா ரஜினியின் மண்டை சூடாகிறது. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பிரதிக் பப்பரை, அதிகார வர்க்கம், மாபியா கும்பலின் ஆடுபுலி ஆட்டத்தையும் மீறி எப்படி தந்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வருகிறார் என்பது  ரஜினியின் ரசிகர்களின் ஆவலை அதி உச்சத்து இழுத்தும் செல்லும் உத்தி.

ரஜினி அத்தனை தந்திரமாகச் செயல்பட்டபோதும் உண்மையான வில்லன் நவாப் அல்ல என்பதும் பிரதிக் அவரது மகன் அல்ல என்பதும் தெரிய வரும்போது கதை அடுத்தக் கட்டத்தை நோக்கி அதிரடியாகப் பாய்ந்து செல்கிறது. ரஜினியுடன் மோதும் உண்மையான தகுதி ஹரி சோப்ராவாக அறிமுகமாகும் சுனில் ஷெட்டிக்குத்தான் இருக்கிறது என்பதை மறுபாதி படம் நம் மண்டை சூடாகும் அளவுக்குச் சொல்கிறது. மகளைக் கொன்றவனுடன் இறுதிப் போராட்டத்தில் குதிக்கும் ரஜினிக்கு வெற்றியா அல்லது வில்லனுக்கா என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கே உரிய ஸ்டைலில் காட்டியிருக்கிறார்.

திரைக்கதையில் எப்போதுமே கோட்டை விடாத ஏ.ஆர்.முருகதாஸ் இதிலும் இறுதிவரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் கும்பலாக வந்து சுடும் ரவுடிகளுக்கும் ரஜினிக்கும் இடையில் நடக்கும் ‘சூட் அவுட்’டில் கூட ரஜினி மீது ஒரு சிறு புல்லட் காயம் கூட ஏற்படாதது உட்பட மாஸ் நாயகனுக்காக இயக்குநர் எடுத்துக்கொள்ளும் ‘சினிமா சுதந்திரம்’ காரணமாக பல காட்சிகளில் லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்திருக்கிறார். ‘முடியாதுங்கறதை முடிக்கிறதுதான்’ என்னோட பழக்கம்’ என தேவையான இடங்களில் பன்ச் பேசும் ரஜினி, ஒரு போலீஸ் ஆணையராக உள்துறை அமைச்சரையே வாய் பொத்தச் செய்யமுடியுமா என்பதெல்லாம் பெரிய கேள்வி.

படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் என்னும் சமர்த்தான இயக்குநர் இருக்கிறார் என்பதற்கு, ரஜினி - மகள் இடையிலான செண்டிமெண்டை அவர் கையாண்டதை அடையாளமாகக் கூறலாம். ரஜினியின் மகள் வள்ளியாக நடித்திருக்கும் ‘திரிஷ்யம்’ புகழ் நிவேதா தாமஸின் நடிப்பு ஹை கிளாஸ். திருமண வயதைத் தாண்டிவிட்ட தனது அப்பாவுக்கு எப்படியாவது ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற யோகி பாபுவுடன் சேர்ந்துகொண்டு செய்யும் குறும்புகளும், அதைக் கேட்டு ரஜினி செய்யும் ‘லவ் எபிசோட்’ அலப்பறைகளும் ரஜினி ரசிகர்ளுக்கு ‘எக்ஸ்ட்ரா  போனஸ்’.

ரஜினிக்கு அட்டகாசமான விக் அணிவித்து, கலர்ஃபுல் காஸ்ட்யூம்கள் போட்டு, கூலர்களை ஸ்டைலாகக் மாட்டச் சொல்லி, எளிய நடன அசைவுகளில் ஆடச் சொல்லி அவரை கிழட்டுச் சிங்கமாக நடமாட விட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சண்டைக்காட்சிகளின் கடினமான மூவ்மெண்டுகளில் டூப் பயன்படுத்தியிருந்தாலும் ரஜினி காட்டும் ரியாக்‌ஷன்கள் அவரே சண்டைகளில் அசத்துகிறார் என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறது. இருந்தும் அவரது முதுமை உதட்டசைவுகளில் உடல்மொழியில் வெளிப்பட்டுவிடுவதைத் திறமையான எடிட்டர் இருந்தும் ஒரு அளவுக்கு மேல் வெட்ட முடியாமல் அப்படியே விட்டிருக்கிறார்கள்.

ரஜினியைவிட வயதானவராகத் தோன்றுகிறார் நயன்தாரா. முதுகை முழுவதுமாக திறந்து வைத்து முழுவதும் பளபள ஆயில் ஒப்பனையில் தந்தூரிக் கோழியைப் போல வலம் வரும் நயன்தாராவுக்கு ரிட்டையர்மெண்ட் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. முக்கிய வில்லனாக வரும் சுனில் ஷெட்டியின் அறிமுகமும் பில்ட் அப்பும் இருந்த அளவுக்கு அவரது வேடம் இல்லை. வில்லன் வேடத்தையும் ரஜினியே எடுத்துக்கொண்டதால் ஒருவேளை சுனில் ஷெட்டியை காலிச் சட்டியாக ஆக்கிவிட்டார்கள் போலும்.

பாலிவுட் படங்களில் அதிகமும் பணியாற்றி வந்திருக்கும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் தன்மையுடன் இருந்தாலும் திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது எதுவும் மனதில் நிற்கவில்லை. எரிந்த காவல் நிலையத்தை செட்போட்ட அந்த ஆர்ட் டைரக்டரை அப்படியே தூக்கி ஆணியில் மாட்டவேண்டும். செட் என்று தெரியும் விதமாக ஒவ்வொன்றும் பளிச்சென்று இருப்பது ‘மாஸ்’ படம் என்பதற்காகக் கூட இருக்கலாம்.

ஒரு இடைவெளிக்குப்பின் போலீஸ் வேடம் ஏற்றிருக்கும் ரஜினியின் தர்பார் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும். ஏ.ஆர்.முருதாஸின் டைரக்டோரியலை எதிர்பார்த்து வருகிறவர்களுக்கு அப்பா -மகள் செண்டிமெண்ட் அட! போட வைக்கும். நயன்தாராவை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் இருந்தால் அவர்களுக்கு இஞ்சி டீ குடித்த ருசி மட்டும்தான் மிஞ்சும். யோகிபாபுவோ நகைச்சுவையில் உப்புக்குச் சப்பாணி. ஒட்டுமொத்தமாக, தர்பார் இந்தி வாசனை வீசும் பாணி பூரி மசாலா.

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.