திரைவிமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் ஒரு பார்வையற்ற பணக்கார வீட்டுப் பையன். பெற்றோர் கனடாவில் வசிக்கிறார்கள். தனது காரோட்டியான சிங்கம்புலியின் உதவியுடன் வாழ்க்கையை நகர்த்துகிறார். அவரை அழைத்துக்கொண்டு, பிரபல ரேடியோ ஜாக்கியான அதிதி ராவை பின் தொடர்ந்துபோய் தனது ஒருதலைக் காதலைத் தெரிவிக்கிறார். அவரோ, கோபத்தில் வெடிக்கிறார். ஆனால், முயற்சியைச் சற்றும் கைவிடாத உதயநிதி, தனது இசைத் திறமையால் அதிதியை அசத்திவிடுகிறார்.

இவர்களது காதல் ஒருபுறம் வளர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் இளம்பெண்களைக வரிசையாக கடத்தும் ஒரு சைக்கோ கொலைகாரன், அவர்களது தலையை வெட்டி எடுத்துச் சென்று சேமிக்கிறான். உடல்களை மட்டும் பொது இடங்களில் போட்டுவிட்டுச் செல்கிறான். இப்படி 13 அதிபயங்கரக் கொலைகளைச் செய்துவிட்டு கூலாக வலம் வந்துகொண்டிருக்கும் அந்த சைக்கோபாத்தை பிடிக்கமுடியாமல் போலீஸ் விரல் சூப்பித் திரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கொலைகாரனிடம் சிக்கிக்கொள்கிறார் அதிதி. இதை அறிந்து துடித்துப்போகும் உதயநிதி, அந்தக் கொலைகாரனிடமிருந்து காதலியை எப்படி மீட்கிறார் என்பது கதை.

இளம் பெண்களின் தொடர் கொலைகள், தலையை மட்டும் துண்டிக்கும் கொலைகாரன், அவனைப் பிடிக்க வக்கற்று வலம்வரும் கோவை மாநகர போலீஸ் என முதல் பாதிப்படம் குறை ஏதும் இல்லாமல் ஹிச் ஹாக் படம்போல விறுவிறுப்புடன் நகர்ந்து செல்கிறது. பார்வையற்ற கதாநாயகன் மூலம் துப்பறியும் கதைக் களத்தில் இம்முறை சடுகுடு விளையாண்டிருக்கிறார் மிஷ்கின். கொஞ்சம் சவாலான கதைக்களம் என்றபோது நாயகனின் வாசனையை நுகரும் திறனை வைத்தும், நடக்கமுடியாமல் சக்கர நாற்காலியில் வாழும் நித்தியா மேனனின் உதவியுடன் துப்பறியும் விதமும் திரைக்கதையோட்டத்தைத் தாங்கிப் பிடிக்கிறது.

கொலையாளி யார் என்பதைப் படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே காட்டிவிட்டு, அவனுடன் நாயன் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தையும் விறுவிறுப்பாக நடத்திச் சென்றிருக்கிறார் மிஸ்கின். இரண்டு மாற்றுத்திறனாளிகள், எந்தக் குறையும் இல்லாத சாதாரண மனிதர்களுடன் அறிவார்ந்தவர்களாக இருப்பது படத்தில் சிறந்த முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், உளவியல் சார்ந்த கொலைத்தொடர் படம் என்றால் அதற்கு தடைகள் ஏதுமில்லாத திரைக்கதைதான் பலம் சேர்க்கும். அந்த வகையில் உளவியல் சிக்கல் கொண்ட வில்லனை பின்னணியாக கொண்ட கொலைத் தொடர் படத்தில் மர்ம படங்களுக்கே உரிய அதிரடியான திருப்பங்களுடன் படம் பயணிக்கிறது. கொலையாளி சைக்கோபாத் மனநிலைக்கு ஏன் சென்றார், இளம் பெண்களை மட்டுமே ஏன் கொலை செய்கிறார் என்பதற்கு கூறப்பட்டிருக்கும் காரணம் சுத்தமாக எடுபடாமல் போய்விட்டது. தற்காலத்தில் நடக்கும் கதைபோல திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும் சி.சி.டி.வி பற்றிய போலீஸின் விசாரணையே படத்தில் இல்லை.

கௌதம் என்ற கதாபாத்திரத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞராக அட்டகாசமான, இயல்பான நடிப்பைத் தந்து கவனம் ஈர்க்கிறார் உதயநிதி. அதேபோல அதிதி பாலன், நித்யா மேனன் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அங்குலி என்ற பெயருடன் சைக்கோபாத் கொலையாளியாக வரும் ராஜ்குமாரின் நடிப்பும் உடல்மொழியும் கச்சிதம். மற்றவர்கள் எல்லாம் உப்புக்குச் சப்பாணியாக வருகிறார்கள்.

படத்துக்கு முதுகெலும்பாக இருந்து மர்மத்தின் சுவையை பல மடங்கு கூட்டிக்கொடுத்திருக்கின்றன இளைராஜாவின் இசையும் பி.சி.ஸ்ரீராமின் கேமராவும். ‘உன்னை நினைச்சு.. நினைச்சு...’ பாடல் உள்ளத்தை உருக்கி நம் காதல் நினைவுகளை கிளறுகிறது.

மிஷ்கின் தனது முத்திரிகைகளை முழுமையுடன் பதித்திருக்கிறார். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தை இறுதியில் அல்லக்கை போல ஆக்கிவிட்டார். இதனால் உலகை மிரட்டியிருக்க வேண்டிய சைக்கோ பரிதாபத்துக்குரியவனாக ஆகிவிடுகிறான். மொத்தத்தில் சைக்கோ இதய பலவீனம் இல்லாதவர்கள் மட்டும் பார்த்து பரவசப் படலாம். மிஷ்கின் வெற லெவல் என்று சொல்லிக்கொண்டு கலைந்துவிடலாம்.

- 4 தமிழ்மீடியா விமர்சனக் குழு

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.