திரைவிமர்சனம்

சென்றஆண்டு சிறந்த தமிழ்படமாக 66 வது தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற, இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமியால் எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்யப்பட்ட திரைப்படம் " பாரம்".

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் உள்ள கிராமங்களில் சமூக ஒப்புதலுடன் பாரம்பரியமாக நடந்துகொண்டிருக்கும் 'தலைக்கூத்தல்' எனும் முதியோர் கருணைக்கொலையினை மையமாக வைத்து உருவாகியுள்ள படம். 91 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்படும் இத்திரைப்படத்தின் எந்தக் காட்சியும், அல்லது எந்தப் பாத்திரமும், தேவையற்றது எனச் சொல்ல முடியாத திரைக்கதையமைப்பு. இதற்கான கரு, தான் வாசித்த ஒரு செய்திக் குறிப்பில் இருந்து தோன்றியது என இயக்குனர் குறிப்பிடும் வகையில், இது ஒரு ஆவணப் புனைவுப் படமாகவே அமைகிறது. அதுவே இப்படத்திற்கான முக்கியத்துவத்தையும் தருகிறது.

கருப்பசாமி மனைவியை இழந்த ஒரு முதியவர். தன் சொந்த உழைப்பில் வாழ விரும்பும் அவர் இரவுக் காவலாளியாகப் பணியாற்றுகின்றார். தன் சகோதரி மற்றும் மருமகன்களான வீரா, மணி, முருகன் ஆகியோருடன் தமிழ்நாட்டின் நகர்சார் பகுதியில் வசிக்கிறார். கருப்பசாமி வேலை முடிந்து வீடுதிரும்பும் ஒருநாள் காலை விபத்தில் சிக்கி இடுப்பை உடைத்துக்கொள்கிறார். அவரது மருமகன்கள் அவருக்கு நகரத்தில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்ப, அவரது மகன்செந்தில், நகரத்தில் மருத்துவ வசதி பெறுவதில் சிக்கல் எனக் காரணங்கூறி, பாரம்பரிய மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கலாம் என, தனது மூதாதையர் கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். எட்டு நாட்களுக்குப் பிறகு, கருப்பசாமி இறந்து விடுகிறார். அவரது மரணம் தொடர்பில், சமூகச் செயற்பாட்டாளரான வீரா எனும் மருமகனிடத்தில் பல கேள்விகளைத் தோற்றுவிக்கிறது. அவற்றுக்கான அவனது விடைகளின் தேடலாக கதை விரிகிறது.

வீராவின் தேடலில் கிடைக்கும் விடைகள் அதிர்ச்சி தருபவை. கருணைக் கொலை என நம்பப்படும் 'தலைக்கூத்தல்' கிராமப் பாரம்பரியத்தின் பின்னால் மறைந்திருக்கும் வகைப்பாடுகள், அச்சம், தொழில்முறை, மோசடி, இயலாமை, சமூகக் குற்றம், கவனங்கொள்ளாத அரசியல் என்பவற்றின் குறியீடுகளாகக் காட்சிகள் விரிகின்றன. திரையில் தோன்றும் காட்சிகள் மெல்ல மெல்ல நம்மைக் கோபங்கொள்ளச் செய்வதில் வலுப்பெறுகிறது திரைக் கதை.

கிராமங்களுக்கே உரிய உறவுகளின் நேசம், சொந்தங்களின் உளச் சிக்கல்கள், பொருளாதார இயலாமை, என்பவற்றை உணர்த்தும் பாத்திரப்படைப்புக்கள், அவற்றைத் திரையில் உருவகித்த நடிகர்கள், இயல்பான வசனங்கள், இயற்கையான ஒலிப்பதிவு, தேவையான இசைக்கோப்பு, உறுத்தாத ஒளிப்பதிவு, இறுக்கமான காட்சித் தொகுப்பு, மிகைப்படுத்தாத இயக்கம், என்பவை படத்தின் சிறப்புக்கள்.

பெரியவரின் மரணம் சம்பவிக்கையில், கவலையுற்றவர்களாகக் காட்டப்பெற்றாலும், ஏனைய இடங்களிலெல்லாம் அவர்களை, பெரியவருடன் உறவின் நெருக்கமாகக் காட்டும் காட்சிகள் ஏதுமில்லை. குறிப்பாக மகன் செந்தில் தந்தை மீது வெறுப்புள்ள பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டிருப்பது, இப் படைப்பின் நோக்கத்தைக் குறுக்கிவிடுகிறது. பெரியவர்களைப் போற்றும், மதிக்கும் சமூத்தில், கருணையின் பேரில் நடைபெறும்  ஒரு சமூகக் குற்றம் என்பதை அழுத்தமாகப் பார்வையாளனுக்குப் பதிய வைப்பத்தில் சறுக்கி விடுகிறது. அதனாலேயே இக் குற்றத்துக்கான எதிர்வினையை கையாளும் ஆட்சி உறுப்பினர், முதியவர்கள் தொடர்பில் என்ன பாதுகாப்பினைச் செய்யப் போகின்றோம் என்பது குறித்துச் சிந்திக்காது, இது ஒரு சமூகத்தின் பாராம்பரியம் எனச் சொல்லி அமைதியாக முடித்துக் கொள்கையில், அது சரிதானோ? எனப் பார்வையாளனைச் சமாதானம் கொள்ளவும் செய்கிறது. முதுமையின் வாசலில் நிற்கும். அக் கதாபாத்திரம் அதனைப் பாரம்பரியம் எனச் சொல்லி முடிப்பது பெரும் சமூக முரணின் வெளிப்பாடு.

உலகெங்கும் முதியவர்கள் வாழ்வாதாரம் பெரும் பிரச்சனையாக எதிர்கொள்ளப்படக் கூடிய ஒரு காலத்தில் வந்துள்ளது இத் திரைப்படம். உலகநாடுகள் முதியவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை, பராமரிப்பு நடைமுறைகளை, செயற்திட்டங்களை, மிகத்தீவிரமாகத் தேடத் தொடங்கியுள்ள காலம் இது. ஏனெனில் அடுத்து வரும் தசாப்தங்களில் உலக மக்கள் தொகையில் முதியவர்கள் தொகை விகிதம் அதிகரிக்கலாம் என்பது ஆய்வாளர் கணிப்பு. சிட்டுக் குருவிகளும், முதியவர்களும் இல்லாத பூமி சிறக்காது என்பார்கள். சிட்டுக்குருவிகளை நாகரீகத்தின் பேரில் அழித்து வருகின்றோம். முதியவர்களை மரபின் பேரில்...?

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.